மனிதர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ? .
என்னை பல நாட்கள் சிந்திக்க வைத்த கேள்வி இது. என்னென்ன காரணங்கள்
தற்கொலைக்கு தூண்டுகிறது?. அவர்களை கோழைகள் என்றோ , மனப்பக்குவம் இல்லாதவர்கள்
என்றோ அல்லது சரியாக முடிவெடுக்கத் தெரியாதவர்கள் என்றோ நாம் எடுத்துக் கொள்ளவேண்டுமா ? அல்லது அதற்கு வேறு
சமூகக் காரணிகளும் இருக்கிறதா?. இது
பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இதுவரை தோன்றவும் இல்லை.
ஆனால் 25/10/2012 ந் தேதி பாளையங்கோட்டையில்
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரவிசங்கரின் செயல் என்னை எழுதத் தூண்டியது.
அதற்கு முன்னால் ரவிசங்கர் யார் என்று
பார்ப்போம் ;
“ இவர் ஒரு கருமான். வயது 47 . மனைவியின் பெயர் மாரியம்மாள் வயது 39. இவர்களுக்கு 5 குழந்தைகள். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள். அதில் கடைசி பெண் குழந்தைக்கு வயது இரண்டு. மனநிலை பாதிப்பிற்கு உள்ளான
குழந்தை. நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சையில் இருப்பவரும் கூட. அவரை முழுவதுமாக குணப்படுத்துவது இயலாது என்று
மருத்துவர் கூறிய பிறகு தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ரவிசங்கர். பத்து வயதான இவர்களின் மகன் மணிகண்டன்
மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறான் . இவர்களின் தற்கொலைக்கு கந்து வட்டி காரணம் இல்லை
என்று விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்". இது தான் செய்தி.
பொதுவாக தற்கொலைக்கான காரணங்களாக கீழ் வருபனவற்றைக் குறிப்பிடலாம்;
1.
காதல் தோல்வி/ முரண்பாடான காதல் .
2.
பொருளாதாரச் சிக்கல்/ கடன் தொல்லை.
3.
மருத்துவம்/ தீராத நோய்கள்.
4.
எதிர்காலம் குறித்த கவலை/ பயம்.
5.
வறுமையில் தற்கொலை
6.
பிறரை ஏமாற்றுவதற்கு (போலியான தற்கொலை முயற்சி).
7.
பெற்றோரால்/ குழந்தைகளால் கைவிட்டநிலை.
8.
வாழ்ந்து முடித்த திருப்தி.
இதில், ரவிசங்கர் தமது 5 வது பெண் குழந்தைக்கு
மருத்துவம் பார்தததால் ஏற்பட்ட பண/மன துன்பத்தால்
குடும்பத்துடன் தற்கொலைக்குத் துணிந்துள்ளார். இப்போதெல்லாம் அலோபதி மருத்துவம் என்பது ஒரு தேர்ந்த வியாபாரமாக மாறிவிட்டது.
அதிலும் இருதயநோய், சிறுநீரகம், புற்றுநோய் மற்றும்
மனநோய்க்கான மருத்துவ சிகிச்சை என்றால் கேட்கவே வேண்டாம் , சம்பந்தப்பட்ட குடும்பம் அவர்களது பணம், நகை, சொத்து மற்றும் இருப்பதை
எல்லாம் இழந்து எழையாகிப் போவது உறுதி. அதிலும்
ரவிசங்கர், மனநிலை பாதித்த தமது பெண் குழந்தைக்கு இரண்டு
ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் செய்துள்ளார் என்றால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள்!
ஒரு கருமானாக வேலைசெய்து கொண்டு, ஐந்து குழந்தைகளுக்கு உணவு, கல்வி போன்றவற்றையும் கவனித்துக்கொண்டு, மருத்துவமும்
செய்ய வேண்டுமென்றால் உண்மையிலே கஷ்டமான ஒரு நிலையாகத் தான் இருந்திருக்க
வேண்டும்!. கட்டாயமாக அவன் கடன்/வட்டியில் சிக்கி
சித்திரவதைப் பட்டிருக்க வேண்டும். இவன் தற்கொலைக்கு
கந்து வட்டி காரணம் இல்லை என்ற போலீஸ் துறையின் தகவல் பொய்யான தகவலாகத்தான் இருக்க
வேண்டும். எப்படியோ! விலை மதிப்பில்லாத சில
உயிர்கள் இப்போது இல்லை.
இந்த இழிநிலை, நிறைய குழந்தைகளைப் பெற்று
திட்டமிடாமல் வாழ்ந்த ரவிசங்கரால் தான் ஏற்பட்டது. அந்த இளந்தளிர்களின்
மரணத்திற்கு அவனே காரணம். அவர்களின் உயிரைப் பறிக்க ரவிசங்கருக்கு என்ன உரிமை
இருக்கிறது? . அவர்களை வாழ விட்டு இருக்கலாம். ஆனால் இந்த சமுகத்தில் தமது
குழந்தைகள் நல்லமுறையில் வாழ முடியாது என்ற எண்ணத்தில், அவர்களை தமது சாவில் பகிர்ந்து கொண்டு
இருக்கலாம் என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.!
ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத
பட்சத்தில் இப்படி பல ரவிசங்கர்கள் தற்கொலைகள் தான் செய்வார்கள் என்பது உண்மை. விவசாய நாடு என்று பெயரெடுத்த நமது இந்தியாவில் மூன்று லட்சம் விவசாயிகள்
தற்கொலை செய்ததையே பெரியதாக எடுத்துக்கொள்ளாத இந்த மக்களும், அரசுகளும் உள்ள சூழ்நிலையில், இத்தகைய தனி மனித
தற்கொலைகள் பற்றியா அரசு வருத்தப்படப் போகிறது ? .
அடுத்து, காதலின் பெயராலும் , முரணான காதல் பழக்கத்தினாலும் தற்கொலை செய்து கொள்பவர்களையும் நான் வெறுப்பவன். ஆனாலும்
, காதல் மணம்
புரிந்து கொண்ட தம்பதியினர் சாதீய
அடக்குமுறைக்குப் பயந்து மரணத்தைத் தழுவும் போது எனது மனம் வலித்தது உண்டு. அதே சமயத்தில் சாதீயம்
கொழுந்து விட்டு எரியும் இத்தருணத்தில் அதை உடைக்கும் விதமாக இத்தகைய காதல்
திருமணங்கள் உருவாவதை யாரும் ஆதரிக்கவில்லையே என்ற ஆதங்கமும், அதை மக்கள் ஆட்சி என்று
சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் யாவரும் கண்டு கொள்ளாமல் இருப்பதுவும்
வேதனையைத் தந்தது உண்டு. சாதீயம் இப்பொழுது தமது நாவினை அனைத்துப் புறங்களிலும் சுழற்ற ஆரம்பித்து விட்டது அதனால் நாம்
திரும்பவும் கற்கால மனித யுகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்றே கருதுகிறேன். இதில் காதல் மணம், கலப்பு மணம் என்பது கனவாகி போய்
விடும்!
அகவே, தற்கொலைகள் பலவிதமாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விவாதமும், விழிப்புணர்வும் அவசியம் தேவை என்று கருதுகிறேன். மருத்துவ
சிகிச்சையின் மூலமாக யாராவது ஒரு உயிரை காப்பாற்றினாலும் அல்லது ஆபத்தில் சிக்கிய
ஒருவரை காப்பாற்றியதின் மூலம் பெரிய அளவில் மகிழ்ந்து கொள்ளும் நாம் , இத்தற்கொலை மரணங்களை பற்றி
எதுவும் கண்டு கொள்வதில்லை என்பது ஆச்சரியமான உண்மை., ஆகவே, இத்தகைய தற்கொலைக்கானக் காரணங்களை நாம் விரிவாக ஆராய வேண்டும் என்றும் ,
இதை ஒரு தனிமனித
பிரச்சனையாகப் பார்க்காமல், சமூகப் பார்வையில் ஆராய வேண்டும் என்று கருதுகிறேன். மடிவது உயிர்கள்! விலை மதிப்பற்ற
உயிர்கள்!