Sunday 25 March 2018

எனது ஆசிரியர் -கே .பத்ராசலம்


இனிமையான எனது பள்ளிப்பருவ வாழ்க்கை முடிந்து ஏறத்தாழ 41  ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் , நான் கல்வி  பயின்ற அந்த  எழுமலை  அரசு உயர்நிலைப்பள்ளியை   இன்னும் என்  நினைவுகளில் சுமந்து கொண்டு தான் வாழ்கிறேன்.  என்னுள்  அன்பையும் , அறிவையும் ,  கலையையும் , அறிவியலையும் , கூடவே கனவுகளையும் விதைத்த அந்தப் பள்ளியையும் , தன்னலமற்ற ஆசிரியர்களையும்  எப்படி என்னால் மறக்க இயலும்.

ஆசிரியர் என்பவர்,  ஒவ்வொரு மாணவனின்  குணநலன்களையும்    பகுத்தறிந்து , அவனது திறமைகளை அவனுக்கே அடையாளம் காட்டுபவர்களாக  இருக்கிறார்கள் . அவர்களின்  வழிகாட்டுதலும் , உதவியும் தான் ஒரு மாணவனுடைய வாழ்க்கையில் மிகப்பிரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்  தான் “ஆசிரியர் பணியை அறப்பணி”  என்று போற்றுகிறோம்


எனக்கு அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள்.  குறிப்பாக எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களான திரு. வேலுச்சாமி, திரு.முத்துசாமி , திரு.சுப்பையா , திரு.கணபதி, திரு. பரமசிவம், திரு.கிருஷ்ணன், திரு. சின்னக்கண்ணன்,  திரு. முத்துக்குறும்பன்   திருமதி .லோகாம்பாள் மற்றும் எனது தலைமை  ஆசிரியர் . திரு. C.V.S. ஆசிர்வாதம் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் அப்பழுக்கற்ற பணி அவ்வப்போது என் நினைவலைகளில் சுழன்று வரும்.   அப்போதெல்லாம் , அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பணியை நினைத்து  என் மனம் நன்றிப்பெருக்கால் இலகுவாகி நெகிழ்ந்து விடுவது உண்டு. கூடவே, தொலைந்து போன அந்த  அழகான , சுகமான நாட்கள் எனக்கு ஏக்கத்தைத் தருவதும் உண்டு.

எனது பள்ளியில் எல்லா ஆசிரியர்களுக்கும் நல்ல மாணவனாக  நான் இருந்தாலும் , இவருக்கு மட்டுமே  செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறேன்.  அவர்  தான் “KPC  “ என்று சக  ஆசிரியர்களாலும் , மாணவர்களாலும் சுருக்கமாக  அழைக்கப்பட்ட  எனது மரியாதைக்குரிய ஆசிரியர் திரு. கே.பத்ராசலம் அவர்கள். அவரே எனக்குள் கனவையும் , தலைமைப்பன்பையும் . ஆளுமையையும் மற்றும் நம்பிக்கையையும் விதைத்தவர் !. இன்றும்  எனது சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் பின்னே அவரின் வழிக்காட்டுதலே உந்து சக்தியாக  இருக்கிறது என்றால் அது மிகையில்லை.


மற்ற ஆசிரியர்களிடம்   இல்லாத எந்தக்  குணம் அவரிடம் இருந்தது; எது என்னை ஈர்த்தது?  என்று யோசிக்கும் போது, அது மாணவர்களின்மீது அவருக்கு இருந்த  நம்பிக்கையும் மற்றும் தமது பணியின் மீதுள்ள அர்ப்பணிப்பும் தான் என்பதை புரிந்து கொண்டேன். மாணவர்களிடத்தில் மிகுந்த அன்பையும் , தேவைப்பட்டால் கண்டிப்பையும் காட்ட தயங்காதவர் அவர் .

நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்  போது தான் அவர் எங்கள் பள்ளியில் சேர்ந்ததாக ஞாபகம் இருக்கிறது . கணக்குப் பாடத்தில்  நிபுணர். பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பிற்கு மட்டுமே பாடம் நடத்தினார். அதனால் நான்  பத்தாம் வகுப்பில் சேர்ந்த பொழுது தான் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். கணக்கு பாடத்திலுள்ள  முக்கிய பிரிவுகளான அல்ஜீப்ரா , தோற்றங்கள் மற்றும் முக்கோணங்கள் போன்றவற்றை மிக தெளிவாகவும் , எளிமையாகவும் புரிய வைத்தார். இயல்பாகவே சிறந்த மாணவர்களில் ஒருவனாக இருந்த எனக்கு அவரின் பயிற்சி மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது.


மேலும், வகுப்பு மாணவர் தலைவனாக நான் இருந்ததால் எங்களுக்கிடையிலான உறவும் வலுப்பெற்றது. பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்விற்கு பின்பு , சக மாணவர்களுக்கு என்னையே கணக்குப் பாடங்களை எடுக்க வைத்தார்.  கரும்பலகையில் என் கரங்கள் நடனமானத் தொடங்கின. அது ஒரு இனிமையான தருணம். ஒரு ஆசிரியர் தமது மாணவனையே  ஆசிரியராக்கிய அற்புதமான செயல் . அதனால் எனது அறிவும், சகமாணவர்களின் அன்பும் பெருகியது. அதுவே எனக்கு தலமைப்பண்பையும் தோற்றுவித்தது. கணக்குப்பிரிவு மட்டுமல்லாமல் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் நானே முதல் மாணவன். அதனால், எனது ஆசிரியர் பத்ராசலம் அவர்கள் என்னையே தனது முதல் மாணாக்கனாக வரித்துக் கொண்டார் என்பதை புரிந்து கொண்டேன்.

காலம் நகர்ந்தது. நாங்கள் பதினோறாம் வகுப்பு சென்றோம். அங்கேயும் அவரே எனது வகுப்பு ஆசிரியராக பொறுப்பில் இருந்தார். அவரின் அன்பு எனக்கு முழுமையாகக் கிடைத்தது.  அப்போது  எங்கள் பள்ளியின் மாணவர் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் சமயம் அது. எல்லா மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களின் பரிந்துரையும் எனக்கு இருந்தது. ஆனால், எங்கள் தலைமை ஆசிரியர்  திரு ஆசிர்வாதம் அவர்கள்  யாரையும் கலந்தோசிக்காமல் வீரணன் என்ற  மாணவனை   " பள்ளி மாணவர் தலைவனாக " தேர்ந்தெடுத்துவிட்டார். அவனும் நன்றாகப் படிக்கும் மாணவனே. ஆனால் சக மாணவர்களுடான அவனது  நட்பும் , உறவும் சிறப்பாக இருந்ததில்லை . அதனால் அனைத்து மாணவர்களும் அவனை "கர்வி"  என்று  வெறுத்தனர்.


அதனால் பெரும்பாலான பதினோறாம் வகுப்பு மாணவர்கள் தலைமை ஆசிரியரின் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் ,  என்னையே மாணவர்கள் தலைவனாக  தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் வைத்தார்கள். ஆனால் , இயல்பாகவே மிகவும் கண்டிப்பானவரான தலைமை  ஆசிரியர்,  தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் .ஆனால்,  அதில் எனக்கு  சிறிதும் உடன்பாடில்லை . இந்த விஷயத்தைப் பெரிது படுத்தவேண்டாம் ; நாம் கல்வியில் கவனம் செலுத்துவோம் என்று  தெரிவித்து விட்டேன். இருந்தாலும் , எனது நண்பர்கள் அழகர்சாமி, சங்கரலிங்கம், பரமசிவம், மகேந்திரன், அய்யனார் , சின்னசாமி , தங்கராஜு மற்றும் பலர் போராடத் தயாராகி விட்டார்கள்.

அப்போது எங்கள் பள்ளியில் பதினோறாம் வகுப்பு  “A”, “B” என்று இரண்டு பிரிவுகளை கொண்டிருந்தது. அதில் A பிரிவின் வகுப்புத்  தலைவனாக இருந்தவன் தான்  பள்ளி மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரணன். நான் B பிரிவின் வகுப்புத் தலைவன். ஒரு நாள் , மதிய  உணவிற்குப் பிறகு வகுப்பிற்கு சென்றேன். ஆனால் இரண்டு வகுப்பிலும்  மாணவர்கள்  யாருமில்லை. எனக்கு வியப்பாகி விட்டது. 

அங்கே நின்று கொண்டிருந்த வீரணனிடம் , "எங்கே நம் நண்பர்கள்?' என்று கேட்டபொழுது , அவர்கள் வகுப்பறையை புறக்கணித்து விட்டு வெளியேறி விட்டார்கள் என்று தெரிவித்தான். ஆம்! தங்களுக்கு பிடித்த தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தொடங்கப்பட்டப் போராட்டம் அது!. எனது வாழ்வில் நான் சந்தித்த முதல்  போராட்டம்! அதுவும் என்னைத் தலைவனாகத் தேர்தெடுக்கப் போராட்டம். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்! கூடவே பதட்டமும் ஏற்பட்டது. அடடா! நாம் போராட்டத்தில் ஈடுபட்டால் , நமது ஆசிரியர் பத்ராசலம் அவர்களுக்கு  கெட்ட பெயர் வந்துவிடுமே என்ற தவிப்பும் ஏற்பட்டது.

அப்போது மாணவர்கள் அனைவரும் வகுப்பைப் புறக்கணித்து விட்டு  அருகில் இருந்த திரையரங்கில் அமர்ந்திருப்பதாகவும் என்னை அழைப்பதாகவும் என் நண்பன் அழகர்சாமி கூறினான். இருவரும் அங்கே போனோம்.  என்னைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டது. இளம் கன்று பயமறியாது என்பது  போல் , தாங்கள் மிகப்பெரிய சாதனையை செய்து விட்டோம் என்று மகிழ்ச்சி ஒவ்வொருவர்  முகத்திலும் தெரிந்தது. இருந்தாலும் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. என் பொருட்டு , எனது நண்பர்கள் வகுப்பை புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.   அதனால் ,  நாம் வீரணனையே மாணவர்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறினேன். ஆனால் நண்பர்கள் மறுத்துவிட்டார்கள். எங்களுக்கு பிடித்தவன் தான் எங்களுக்குத் தலைவனாக வேண்டும்; மேலும் எங்கள் தலைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை எங்களுக்குத் தான் இருக்கிறது !  தலைமை ஆசிரியர் அல்ல!  என்று உறுதியாக இருந்தார்கள். நான் அவர்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவனாகி விட்டேன்.

தகவல் தெரிந்த எங்கள் ஆசிரியர் பத்ராசலம் ஓடோடி வந்தார். எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கிறது ; அவர் முகத்தில் கோபம் இருக்கவில்லை ; வேதனை தான் தெரிந்தது . எங்களை சமாதானம் செய்தார். ஒருவன் , ஒரு சிலரால் மட்டுமே தலைவனாக தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் , அவனை மற்ற அனைவரும் தலைவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை தான். உங்கள் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.  ஆனால் நமது தலைமை ஆசிரியர் மிகவும் நல்லவர். நம் பள்ளிக்காக பல தியாகங்களைச் செய்தவர் . அவர் மனது புண்படலாமா? , அவரின் செயலுக்கு மதிப்பளித்து பள்ளியின் நற்பெயரையும் , ஒற்றுமையையும் கடைபிடியுங்கள். என் தோள் மீது கை வைத்து , இவன் எனக்கு பிரியமானவனாக இருப்பது போல் உங்களுக்கும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று நட்போடு அறிவுரை கூறினார். அனைவரும் சமாதானம் அடைந்து பள்ளிக்குத் திரும்பினோம்.


இந்த நிகழ்ச்சி என் ஆசிரியர் மீதும் , என் பள்ளி நண்பர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையையும் , அன்பையும் , நட்பையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு எங்கள் பயணம் மிகவும் மகிச்சியாகத் தொடங்கியது. வழக்கம்  போல் எனது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி  பதினோறாம் கணக்கு பாடங்களை நானே நடத்தினேன். இப்போது,  மற்ற மாணவர்களின் தேர்வுத்  தாள்களையும் மதிப்பிடும் பணியினையும் எனக்குக் கொடுத்தார்.  அதையும் மிகவும் நேர்மையாகவும் , சரியாகவும்  மற்றும் நேர்த்தியாகவும் செய்து கொடுத்துள்ளேன். எனக்குள் நேர்மையையும் , உண்மையையும் விதைத்த தருணங்கள் அது. இப்பண்புகள் என் வாழ்வின் இறுதி காலம் வரைத் தொடரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.


நாங்கள் பதினோறாம் வகுப்பு இறுதித் தேர்விற்குத் தயாரானோம். அப்போது , என் ஆசிரியர் ஒரு நாள் என்னிடம் உனது  எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டார். ஐயா! , நான் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் . என்னுடைய தாத்தா ( அம்மாவின் தந்தை) தான் படிக்க வைக்கிறார். அதனால் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐ படிக்கலாம் என்று கருதுகிறேன் என்று பதிலளித்தேன். அவர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு ,  நீ  எனது சிறந்த மாணவன். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதற்கான வழியைக் காட்டுவது எனது கடமையாகிறது. அதனால் , "மதுரை அமெரிக்கன் கல்லூரியே " உனக்கு உகந்தது. நீ அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் ; வாழ்வில் உயர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஐயா! அங்கே கல்வி பயில செலவு அதிகம் ஆகும். இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்று பணிவுடன் கூறினேன். ஆனாலும்  , மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தான் படிக்க  வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் எழுந்தது. அவரைப் போன்று ஒரு நல்ல ஆசிரியராக , கல்லூரி பேராசிரியராக ஆக வேண்டும் என்ற வைராக்கியமும் எழுந்தது.


1977 ஆம் ஆண்டு ,  பள்ளி இறுதித் தேர்வு வந்தது. எனது  தலைமை ஆசிரியரிடம்  தேர்விற்கான நுழைவுத் தாளை பெற்றுக் கொண்டு , எனது ஆசிரியர் பத்ராசலம் அவர்களிடம் சென்றேன். அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தார்; வேறெதுவும் கூறவில்லை. ஆனால் , அந்த சிரிப்பிற்கான விளக்கத்தை  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆம்! பள்ளியின் முதல் மாணவனாக நான் வர வேண்டும் என்பதையே   அந்தச் சிரிப்பு சொல்லாமல் சொல்லியது.


ஆனால்,  நடந்தது என்னவோ  மிகவும் வேதனைக்குரியது.  


இங்கே என்னைப் பற்றி சில விபரங்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமையாகிறது.    சிறு வயதிலிருந்தே எனக்கு சினிமா பார்ப்பது  மிகவும் பிடிக்கும். அதுவும் எம்.ஜி.ஆர். படம் என்றால் விரும்பித் திரும்ப திரும்பப் பார்ப்பேன். நடிகர்  திலகம் சிவாஜி படங்களையும் பார்ப்பேன். ஆனால் , சினிமா பார்த்ததினால் என் கல்விக்கு  எந்த பாதிப்பும் இருந்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆனால் , சினிமாவினால் எனக்கு மிகப்பெரிய வேதனை   காத்திருக்கிறது என்று அப்போது தெரியாது.

எங்களது பள்ளி இறுதி தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் சிவாஜி நடித்த "எங்கள் தங்க ராஜா " என்ற படம் நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் எனக்கு கணக்குத் தேர்வு. அதில் ஒரு சந்தேகம் கேட்க என் நண்பன் அழகர்சாமி வந்திருந்தான். அவனுக்கு அதை விளக்கிவிட்டு அப்படியே சிற்றுண்டி சாப்பிடுவதற்காக  கடைக்கு வந்தோம். அப்போது நேரம் இரவு ஏழு மணி. திடீரன்று , நாம் சினிமாவிற்கு செல்லலாமா? என்று அழகர்சாமி கேட்டான். உடனே சினிமா வெறி தொற்றிக் கொண்டது.  நானும்   மறுக்கவில்லை. ஏனென்றால் கணக்கு தான் எனக்கு மிகவும் கைவந்த கலையாயிற்றே!.   அவ்வளவு தன்னம்பிக்கை!.  அப்போதெல்லாம் கிராமங்களில் 07-30 மணிக்குத் தான் சினிமாவைத் துவங்குவார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் நாங்கள் இருவரும் தியேட்டருக்குள் இருந்தோம்.

எங்கள் தங்க ராஜா படம் மிகவும் சுவாரசியமாகத் தான் இருந்தது  ;  இடைவேளையும்  வந்தது. நாங்கள் இருவரும் சிறுநீர்  கழிக்க எழுந்தோம்!. திரும்பிப்  பார்த்தால் , எங்களுக்குப் பின்னே என் ஆசிரியர் பத்ராசலம் உட்க்கார்ந்திருந்தார்.  என் மனம் துணுக்குற்றது. அவர் முகத்தில் கடுங் கோபம் கொப்பளித்தது. கூடவே  வேதனை படர்ந்திருந்ததும்  தெரிந்தது. அனலாக வார்த்தைகள் வந்தன; உனக்கு நன்றாகக் படிக்கிறோம் என்ற கர்வமடா, அதனால்  தான் நாளை கணக்குத் தேர்வை வைத்துக் கொண்டு  இன்று சினிமாவிற்கு வந்திருக்கிறாய். பொன்னான நேரத்தை வீணடித்து விட்டாய். என் நம்பிக்கையையும் தகர்த்து விட்டாய். போ! என்றார். மனதில் வேதனையை மலையாக சுமந்து கொண்டு வெளியேறினேன். எனக்கு வாழ்க்கையில் முதன்முதலாக தவறு செய்து விட்ட குற்ற உணர்வு எழுந்த  தருணம் அதுவே!.


அடுத்தநாள் கணக்குத் தேர்வை மிகவும் பதட்டத்துடனே அணுகினேன். நூற்றுக்கு நூறு வாங்கமுடியாது என்று தெரிந்துவிட்டது. ஆனால் 85 மார்க் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. பதட்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அடுத்த தேர்வுகளில் இந்த இழப்பை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற வெறி எழுந்தது. இதரத் தேர்வுகளை நன்றாகவே எழுதினேன். தேர்வு முடிவும் வந்தது.


ஆறு பாடங்களில் மூன்றில் நானும் , இரண்டில் வீராணனும் , ஒரு பாடத்தில் சங்கரலிங்கமும் முதல் மதிப்பெண் எடுத்திருந்தோம். ஆனால் வீரணன் முதலாவதாக வந்தான் ; ஒரு மார்க் வித்தியாசத்தில் சங்கரலிங்கம் இரண்டாவது ; நான் மூன்றாவதாக வந்தேன். கணக்குத் தேர்வு என்னை வீழ்த்தி விட்டது; ஆம்!, எனது கணக்கு தவறாகி விட்டது. அப்போது என்னிடத்தில்  எழுந்த வேதனையை  வார்த்தைகளால் வடித்து விடமுடியாது. என் ஆசிரியருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு மேல் எழுந்தது.  இருந்தாலும் , ஆசிரியர் என் தோளில் தட்டி ஆறுதல் கூறினார்.  இதில் பெரும்  மகிழ்ச்சி என்னவென்றால் அவர் பாடம்  எடுத்த சிறப்பு கணக்குப்பாடத்தில் நானே முதல்வன். 


அடுத்து ,  கல்லூரியை நோக்கி என் கவனம் திரும்பியது. அமெரிக்கன் கல்லூரி என்னை ஈர்த்துக் கொண்டது . வீரணன் தமிழ்நாடு அரசின் தொழிற்கல்விக்கூடத்தில்  சேர்ந்தான் . எங்கள் பள்ளியிலிருந்து 56 பேர்கள் மேற்படிப்பிற்காக மதுரை வந்தடைந்தோம். அமெரிக்கன் கல்லூரியின் நூலகம் என்னை செழுமைப் படுத்தியது.  என் அறிவு விசாலமானது. இந்தியாவின் மிகசிறந்த கலைக்கல்லூரியில் படித்த பெருமை எனக்கு கிட்டியது. ஆம்! என் ஆசிரியர் பத்ராசலத்தின் கணிப்பு மிகச்சரியே!

1981 ஆம் ஆண்டு பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது  மத்திய அரசின் தொலைபேசித்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். எங்கள் கல்லூரியில் தான் அதற்கானத் தேர்வும் நடந்தது. அதில் வெற்றி பெற்று "தொலைபேசி இயக்குனராக " பணியில் சேர்ந்தேன். என்னுடன் பயின்ற எல்லா மாணவர்களையும் புறந்தள்ளி ,  முதலாவதாக மத்திய அரசுப்பணியில் சேர்ந்த பெருமையை என் ஆசிரியருக்கு காணிக்கையாக்கினேன். மகிழ்ச்சியில் அவர் முகம் மலர்ந்ததைக்  கண்டு மனதின் ஆழத்தில்  காயமாக இருந்த அந்த வடு மறைய ஆரம்பித்தது, அவருக்கு நினைவுப்  பரிசாக அப்போது பிரபலமாக இருந்த  "ஹிரோ " பேனாவை அளித்தேன்.

 காலம் உருண்டோடியது.

1995 ஆம்  ஆண்டு என்று நினைக்கிறேன் . உசிலம்பட்டிப் பேருந்து நிலையத்தில் எழுமலை செல்லவதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தேன் . பேருந்து புறப்படத் தயாராக இருந்த பொழுது என் ஆசிரியரும்  , அவரது நண்பரும் ஓடி வந்து ஏறினார்கள்.  பேருந்தில் அமருவதற்கு இடம் இல்லாததால் முன் பகுதியில்    நின்று  கொண்டிருந்தார். முதுமை அவரை அணுகி இருந்ததை பார்க்க முடிந்தது. இருந்தாலும் முகத்தில் இருந்த தெளிவும் , வசீகரமும் அப்படியே இருந்தது. பின்னால் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த எனக்கு  நிலைகொள்ளவில்லை. உட்க்கார்ந்திருக்க மனம் மறுத்தது. என் ஆசிரியரை அழைத்து என் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டேன். என்னைப் பார்த்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருப்பதை அறிந்து  கொண்டேன். தனது நண்பரிடம் "எனது மாணவன்"  என்று அறிமுகம் செய்து வைத்தார். அவர் முகத்தில் தெரிந்த  பெருமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

ஒரு நல்ல மாணவன், அவன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்  கூட தனது ஆசிரியரை மதிப்பான் என்பதை வரலாறு எனக்கு கற்றுக் தந்துள்ளது . அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வு  என் ஞாபகத்திற்கு வருகிறது.

வளம் கொழிக்கும் அரபு  நாடுகளில்  ஒன்றான  ஓமான்  நாட்டின் அரசர் சுல்தான் காபூஸ் கான்  மிகப்பெரிய செல்வந்தர். , சிறந்த   அறிவாளி . தமது இளமைக்காலத்தில் இந்தியாவில், உள்ள புனா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.


இந்திய ஜனாதிபதி முனைவர் சங்கர் தயாள் சர்மா  அவர்கள் , ஒரு முறை அரசு முறைப்பயணமாக ஓமான் சென்றார். அவரை வரவேற்க ஓமான் அரசர் சுல்தான் காபூஸ் கான் அவர்கள் மஸ்கட் விமான நிலையத்திற்கு நேரிடையாக வந்தார்.  பொதுவாக , அரசுமுறைப் பயணமாக  ஓமான் வரும் பிற நாட்டு ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் வரவேற்கும் பழக்கம் அந்நாட்டில் இல்லை. மரபைமீறி அரசரே நேரில் வந்தது  ஓமான் உயர் அதிகாரிகளுக்கு  மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. விமானம்  நின்று படிகள் இணைக்கப்பட்டதும் மாண்புமிகு சர்மா அவர்கள் வெளிப்படுகிறார். அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு மகிச்சியுடன் இறங்கி வருகிறார். அவரை தமது காரில் உட்க்காரவைத்து  அவரே காரை ஒட்டிக் கொண்டு அரண்மனை அழைத்து செல்கிறார். இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிந்தது. 

அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். சம்பிரதாயமான கேள்விகள் முடிந்த பிறகு  அந்த நாட்டு நிருபர் ஒருவர் அந்த கேள்வியை அரசரிடம் வைக்கிறார். " இது நாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் , ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வர வேண்டும், அப்படி என்ன அவரின்  சிறப்பு?

அங்கே ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. அரசர் பதிலளிக்கிறார்;

" நான்  இப்போது அரசனாக இருக்கலாம், அவர் ஜனாதிபதியாக இருக்கலாம், ஆனால் நான் இந்தியாவில் புனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசிரியர் அவர். வெறுமனே கல்வி  போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றியும் தெளிவான பார்வையை எனக்குள் கொடுத்தவர்.   இன்றளவும் நான் ஓரளவு பண்பாளனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்." 

இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள். கொஞ்ச காலம் அந்த மண்ணில் இருந்தவனில்லையா? , அந்தப் பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப்போகிறது!  என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார்.  மாண்புமிகு இந்திய ஜனாதிபதி சர்மா அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போகிறார். .  அங்கே , இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதிக்கு கிடைக்காத பெருமை, ஒரு ஆசிரியருக்குக் கிடைத்தது.

நான் , ஓமான் அரசனல்ல ; ஆனால் என் ஆசிரியர் பத்ராசலமும் , சுல்தான் காபூஸ் கான் மதித்த அவருடைய ஆசிரியருக்கு சமமானவரே!

சில மாதங்களுக்கு  அவரை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. அதனால் காவல்துறையில்  உதவி ஆய்வாளராக பணிபுரியும் என் பள்ளித் தோழன் தங்கராஜிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். அவன் , என் ஆசிரியர் இருக்கும் கிராமத்தை அறிந்துள்ளதாகவும் , அவரின் இருப்பை உறுதி செய்து கொண்டு அழைப்பதாக கூறியுள்ளான்.  .

அவரை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு . கிடைக்குமா என்று தெரியவில்லை. அப்படிக் கிடைத்தால் அவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு நிறைய உள்ளது. அவரது மாணவன் இன்று மிக உயர்ந்த நிலையில் இருக்கிறான் . அவனது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்துள்ளான்; அவனது பெற்றோர்களுக்கும் , உடன்பிறந்தவர்களுக்கும் தமது கடமையை செவ்வனே செய்து வருகிறான்; பலவேறு சமூக அமைப்புகளிலும் , தொழிற்சங்கங்களிலும் தமது கடமையைச் செய்கிறான் என்பதையும் , அதற்கு   அடிப்படைக் காரணம் அவர் என் மனதில் விதைத்த விதைகளே என்பதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதற்காக அவருக்கு மனமார நன்றி பாராட்ட  வேண்டும். அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.  


சு.கருப்பையா
மதுரை
+919486102431

Monday 22 January 2018

தந்தையின் மரணம்.

கடந்த ஞாயிற்று கிழமை அதாவது  07-01-2018 ந்தேதி  இறந்த  என் தந்தையின் இறுதி சடங்கை  முடித்துவிட்டு  அப்போது தான் மதுரையிலுள்ள என் வீட்டிற்கு வந்திருந்தேன்.  இரவு மணி பத்து. சல சலவென்று  மழை. என்ன திடீரென்று மார்கழியில் மழை செய்கிறது என்றாள் என் மனைவி. என் ஆழ்மனதில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நினைவுகள் விழித்துக் கொண்டன.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  ஓர் இரவு. காற்று , இடியென்று எந்த சப்தமுமில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. பத்தடி நீளமும் , எட்டடி அகலமும் உள்ள அந்த குடிசைக்குள் என்னையும் சேர்த்து   என் குடும்பத்தினர் ஒன்பது பேர்கள்  தூங்கிக் கொண்டிருந்திருந்தோம். குடிசையின் மேற்க்கூரையில் இருந்த  பல ஓட்டைகளில் இருந்து  மழை நீர் தாராளமாக சொரிந்து கொண்டிருந்தது. என் அம்மா ஆங்காங்கே பாத்திரங்களை வைத்து மழை நீர் குடிசைக்குள் பரவாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

நான் படுத்திருந்த அந்த கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தேன். அதற்கு கீழே படுத்திருந்த என் இரு தம்பிகளும் குளிரில் புரள்வது எனக்குத் தெரிந்தது. என் தந்தை குடிசையின் கதவோரத்தில் ஒரு சணல் சாக்கை போர்த்திக் கொண்டு உட்க்கார்ந்து கொண்டிருந்தார்.  மனம் முழுவதும் வலி. பல லட்சம் மதிப்புள்ள பளிங்கு  மாளிகையில்  இன்று நான் படுத்திருந்தாலும் என் மனதை விட்டு நீங்காத காட்சி அது. 

என் குடும்பத்தில் நானே மூத்தவன். அப்போது , மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்திருந்தேன். அடுத்த நாள் எனக்கு பெண் கொடுக்கும் உறவினர்கள் வர இருப்பதால் என் சொந்த ஊருக்கு வருமாறு என் தந்தை கூறியிருந்தார்.  நல்ல குடும்பம் ; வசதியானவர்களும் கூட. ஆனால்.. இந்த ஏழ்மை  நிலையிலா ?. 

அடுத்த நாள் காலை என் தந்தையின் முடிவை மறுதலித்தேன். முதலில் ஒழுகாத ஒரு வீடு எனக்கு வேண்டும். அடுத்து , திருமணத்திற்கு காத்திருக்கும் என் இரு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.  வாழ்க்கையில் நான் மிகவும் தடுமாறிப்போய் தவித்துப் போன  முதல் இரவு அதுதான் என்று எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

என் தந்தை சுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத நேர்மையான மனிதர். அதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். அந்தக்காலத்திலேயே பத்தாவது வரை படித்திருந்தார். இருந்தாலும் எந்தப்பணியிலும் சேரவில்லை. ஒரு முறை போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ,  ஆனால் என்னுடைய தாத்தாவின் மறுப்பினால் அவர் அப்பணியில் சேரவில்லை என்றும் பின்னர் தெரிந்து கொண்டிருந்தேன்.  சிறிது நிலம் இருந்தாலும்  வானம் பார்த்த நிலம் என்பதால் விவசாயமும் சரிப்பட்டு வரவில்லை. அதனால் வறுமையிலே எனது குடும்பம் தத்தளித்து வந்துள்ளது. அதனால் எனது சுமை மிகப் பெரியதாக இருந்தது.

எனது தந்தையின் வறுமை நிலையின் காரணமாக நானும் , என்  தம்பி இராஜேந்திரனும் எனது தாய்வழித் தாத்தாவான வேலாண்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தோம்.  அவரே எனக்கு தந்தையாகவும்  , ஆசிரியர் மற்றும் நண்பனாகவும் இருந்தவர்..  அவரிடமிருந்தே அன்பு, பாசம், நேர்மை , உண்மை மற்றும் உழைப்பு போன்றவற்றை கற்றிருந்தேன். என் எல்லா வெற்றிகளுக்கும் பின்னே " வேலாண்டி " என்ற மாமனிதன் தான் இருக்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உண்மையில் என் குடும்பத்தில் நானே அதிருஷ்டசாலியும் கூடவே துரதிருஷ்டசாலியாகவும் வாழ்ந்து வந்திருக்கிறேன்.  அளவோடு குழந்தை பெற்றுக் கொள் என்ற அனுபவத்தைத் தவிர வேறு எதையும் என் தந்தையிடமிருந்து நான் எதையும்கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் , அவரது மரபணுக்குணமான நேர்மையும் , உண்மையும் எனக்குள் வந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

என் குடும்பத்தின் இழி நிலை எனக்குப் புரிந்ததும் , என்னுள் வைராக்கியம் பிறந்தது. முதலில் ஒரு வீடு கட்டவேண்டும் ; தங்கைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் , தம்பிகளை படிக்க வைக்க வேண்டும். அதன் பிறகே நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்  இரண்டு தங்கைகளின் திருமணம் நடந்ததுமிகப்பெரிய ஓட்டுவீட்டையும் கட்டினேன்.  என் தம்பிகளை படிக்க வைத்தேன். என் ஒரு தம்பி தொழிக்கல்வி கற்று நல்ல வேலையில் சேர்ந்தான். ஏழ்மை நிலையிலிருந்த என் குடும்பம் நடுத்தரத்திற்கு உயர்ந்தது. 

இதற்கிடையில் எனது தாய்மாமனின் மகளை நான்  திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் எனது குடும்பம் மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. என் குடும்பத்திற்கு தூரமாகிப் போனேன். நான் விரும்பிய பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தை உதவவில்லை என்பது மட்டுமில்லாமல் , அந்த பெண்ணிற்கு அவரால் துன்பம் நேர்ந்து விட்டது என்பதும் எனக்கு  ஆழமான வருத்தத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஒரு நிகழ்வைத் தவிர என் தந்தையிடம் எந்தத் தவறையும் நான் அறியவில்லை.

1989 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. இது, என்னை தவிர என் குடும்பத்தில் யாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.  தனது அண்ணன் மகளை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற வருத்தம் இப்போதும்  என் தாயிற்கு உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் நான் பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தேன்.

ஒருமுறை என் தம்பி இராஜேந்திரனிடம் ரூபாய் 2000/- கடன் கேட்டேன்! அவன் மறுத்துவிட்டான். எந்தக் குடும்பத்திற்க்காக நான் வாழ்ந்து வந்தேனோ அந்தக் குடும்பமே  என்னை பாரமாக நினைத்தது. என் தந்தை உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. நான் துவண்டு போன காலங்கள் அது. குடும்பத்திற்கான என் பங்களிப்பிற்கு மதிப்பளிக்கவில்லை என்ற மனக்குறைக்குறை எனக்கு ஏற்பட்டது  .

ஆனால், இது எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத் தந்தது. யாரையும் சார்ந்திருக்காதே என்ற அனுபவத்தை  எனக்கு கற்றுக் கொடுத்தது.. எனக்கு உதவாமல் மறுத்ததின் மூலம் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுத்தான் என் தம்பி.  வாழ்க்கையில் உயர மேலும் உழைக்க வேண்டும் என்று உத்வேகத்தை கொடுத்த தருணம் அது.



விழித்துக் கொண்டேன். படித்தேன்! படித்தேன்! ... உழைத்தேன்! உழைத்தேன்! . பதவி உயர்வு , பணம், வீடு அனைத்தும் தேடி வந்தது. இன்று நான் மிக மிக உயரத்தில்!!!. தன்னிறைவான மனிதனாக இருக்கிறேன். இதற்கு காரணமான என் தம்பிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு வேளை அவன் எனக்கு உதவி செய்திருந்தால் , தம்பி இருக்கிறான் என்ற தைரியத்தில் நான் சோம்பேறியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும் , இப்போதும் மழைநீர் ஒழுகிய அந்த குடிசை என் மனதை விட்டு நீங்கவில்லை. உன்னிடம் இருக்கும் அதுவும் நிரந்திரமில்லை. மாறக்கூடியது சொல்லிக் கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் , என் தந்தைக்கு உடல் நலமில்லை என்று செய்தி  வந்தது. அவரது மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில்  வெடிப்பு ஏற்பட்டு  , ஒருபக்கவாதம் உருவாகி ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் உடல்நலமில்லாமல் இருந்த அனைத்துத் தருணங்களிலும் நான் அவர் கூடவே இருந்திருக்கிறேன். ஒரு மகனுக்குரிய கடமையை செய்திருக்கிறேன்.  அவர் நலமாகி எழுந்து வந்துள்ளார்.  ஆனால் , இந்த முறை, நான் 2000 மைல்களுக்கு அப்பால்! .  எனக்கு தெரிந்து விட்டது; எனது தந்தை தனது இறுதி பயணத்திற்குத் தயாராகி விட்டார். என்னால் உடனடியாக வர இயலவில்லை. எந்த பதவி , பணத்தையும் வசதியையும்  எனக்கு கொடுத்ததே , அதுவே எனக்குத் தடையாகவும் இருந்தது. அவர் இறக்கும் போது அவரது மூன்று மகன்களில் ஒருவர் கூட அருகில் இல்லை. மிகவும் துர்பாக்கியசாலி. ஆனாலும், என் தந்தை  இறக்கும் தருணத்தில் கட்டாயம் என்னை நினைவு கூர்ந்திருப்பார். 

எந்த மண்ணில் என் தந்தை உருண்டு புரண்டாரோ அதே மண்ணில் இன்று   புதைக்கப்பட்டுவிட்டார். அவர் சேர்த்து வைத்திருக்கும் சிறிதளவு சொத்தை பிரிப்பதற்காக அவரது குழந்தைகள் தயாராகி வருகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு என்னுடைய கடைசி தம்பிக்கு கூறிவிட்டு வந்துவிட்டேன். இந்த மண்ணை விட்டுப் போகும் போது நாம் எதையும் எடுத்துக் கொண்டு செல்லப்பபோவதில் என்று நன்றாகத் தெரியும்.


வீட்டின் வெளியே மழை நின்றிந்தது.