கடந்த
ஞாயிற்று கிழமை அதாவது 07-01-2018 ந்தேதி இறந்த
என் தந்தையின் இறுதி சடங்கை முடித்துவிட்டு அப்போது தான் மதுரையிலுள்ள
என் வீட்டிற்கு வந்திருந்தேன். இரவு மணி பத்து. சல
சலவென்று மழை. என்ன திடீரென்று
மார்கழியில் மழை செய்கிறது என்றாள் என் மனைவி. என் ஆழ்மனதில் தூங்கிக் கொண்டிருந்த
அந்த நினைவுகள் விழித்துக் கொண்டன.
முப்பத்திரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இரவு. காற்று , இடியென்று எந்த சப்தமுமில்லாமல் மழை பெய்து
கொண்டிருந்தது. பத்தடி நீளமும் , எட்டடி
அகலமும் உள்ள அந்த குடிசைக்குள் என்னையும் சேர்த்து என் குடும்பத்தினர் ஒன்பது பேர்கள் தூங்கிக் கொண்டிருந்திருந்தோம். குடிசையின்
மேற்க்கூரையில் இருந்த பல ஓட்டைகளில்
இருந்து மழை நீர் தாராளமாக சொரிந்து
கொண்டிருந்தது. என் அம்மா ஆங்காங்கே பாத்திரங்களை வைத்து மழை நீர் குடிசைக்குள்
பரவாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.
நான்
படுத்திருந்த அந்த கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தேன். அதற்கு
கீழே படுத்திருந்த என் இரு தம்பிகளும் குளிரில் புரள்வது எனக்குத் தெரிந்தது. என்
தந்தை குடிசையின் கதவோரத்தில் ஒரு சணல் சாக்கை போர்த்திக் கொண்டு உட்க்கார்ந்து
கொண்டிருந்தார். மனம் முழுவதும் வலி. பல லட்சம்
மதிப்புள்ள பளிங்கு மாளிகையில் இன்று நான் படுத்திருந்தாலும் என் மனதை விட்டு
நீங்காத காட்சி அது.
என்
குடும்பத்தில் நானே மூத்தவன். அப்போது , மத்திய அரசின்
தொலைத்தொடர்பு துறையில் ஒரு தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்திருந்தேன். அடுத்த
நாள் எனக்கு பெண் கொடுக்கும் உறவினர்கள் வர இருப்பதால் என் சொந்த ஊருக்கு வருமாறு என் தந்தை
கூறியிருந்தார். நல்ல குடும்பம் ; வசதியானவர்களும் கூட. ஆனால்.. இந்த
ஏழ்மை நிலையிலா ?.
அடுத்த நாள்
காலை என் தந்தையின் முடிவை மறுதலித்தேன். முதலில் ஒழுகாத ஒரு வீடு எனக்கு வேண்டும்.
அடுத்து ,
திருமணத்திற்கு காத்திருக்கும் என் இரு
தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
வாழ்க்கையில் நான் மிகவும் தடுமாறிப்போய் தவித்துப் போன முதல் இரவு அதுதான் என்று எனக்கு நன்றாக நினைவு
இருக்கிறது.
என் தந்தை சுப்பையா
ஒரு கூலித் தொழிலாளி. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத நேர்மையான மனிதர்.
அதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். அந்தக்காலத்திலேயே பத்தாவது வரை படித்திருந்தார்.
இருந்தாலும் எந்தப்பணியிலும் சேரவில்லை. ஒரு முறை போலீஸ் வேலைக்கு தேர்வு
செய்யப்பட்டதாகவும் , ஆனால் என்னுடைய தாத்தாவின் மறுப்பினால் அவர்
அப்பணியில் சேரவில்லை என்றும் பின்னர் தெரிந்து கொண்டிருந்தேன். சிறிது நிலம் இருந்தாலும் வானம்
பார்த்த நிலம் என்பதால் விவசாயமும் சரிப்பட்டு வரவில்லை. அதனால் வறுமையிலே
எனது குடும்பம் தத்தளித்து வந்துள்ளது. அதனால் எனது சுமை மிகப் பெரியதாக இருந்தது.
எனது
தந்தையின் வறுமை நிலையின் காரணமாக நானும் , என் தம்பி
இராஜேந்திரனும் எனது தாய்வழித் தாத்தாவான வேலாண்டியின் அரவணைப்பில் வளர்ந்து
வந்தோம். அவரே எனக்கு தந்தையாகவும் , ஆசிரியர் மற்றும் நண்பனாகவும் இருந்தவர்.. அவரிடமிருந்தே அன்பு, பாசம், நேர்மை , உண்மை மற்றும்
உழைப்பு போன்றவற்றை கற்றிருந்தேன். என் எல்லா வெற்றிகளுக்கும்
பின்னே " வேலாண்டி " என்ற மாமனிதன் தான் இருக்கிறான் என்பது மறுக்க
முடியாத உண்மை.
உண்மையில் , என் குடும்பத்தில் நானே அதிருஷ்டசாலியும் கூடவே
துரதிருஷ்டசாலியாகவும் வாழ்ந்து வந்திருக்கிறேன்.
அளவோடு குழந்தை பெற்றுக் கொள் என்ற அனுபவத்தைத் தவிர வேறு எதையும் என்
தந்தையிடமிருந்து நான் எதையும்கற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் , அவரது மரபணுக்குணமான நேர்மையும் , உண்மையும் எனக்குள்
வந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
என்
குடும்பத்தின் இழி நிலை எனக்குப் புரிந்ததும் , என்னுள் வைராக்கியம் பிறந்தது. முதலில் ஒரு வீடு
கட்டவேண்டும் ; தங்கைகளுக்கு
திருமணம் செய்ய வேண்டும் , தம்பிகளை
படிக்க வைக்க வேண்டும். அதன் பிறகே நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
அடுத்த ஐந்து
ஆண்டுகளில் என் இரண்டு தங்கைகளின்
திருமணம் நடந்தது; மிகப்பெரிய ஓட்டுவீட்டையும் கட்டினேன். என் தம்பிகளை படிக்க வைத்தேன். என் ஒரு தம்பி
தொழிக்கல்வி கற்று நல்ல வேலையில் சேர்ந்தான். ஏழ்மை நிலையிலிருந்த என் குடும்பம்
நடுத்தரத்திற்கு உயர்ந்தது.
இதற்கிடையில்
எனது தாய்மாமனின் மகளை நான் திருமணம்
செய்து கொள்ள மறுத்ததால் எனது குடும்பம் மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. என்
குடும்பத்திற்கு தூரமாகிப் போனேன். நான் விரும்பிய பெண்ணை எனக்கு திருமணம் செய்து
வைக்க என் தந்தை உதவவில்லை என்பது மட்டுமில்லாமல் , அந்த பெண்ணிற்கு அவரால் துன்பம் நேர்ந்து விட்டது
என்பதும் எனக்கு ஆழமான வருத்தத்தைக்
கொடுத்துள்ளது. இந்த ஒரு நிகழ்வைத் தவிர என் தந்தையிடம் எந்தத் தவறையும் நான்
அறியவில்லை.
1989 ஆம்
ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. இது, என்னை தவிர என் குடும்பத்தில் யாருக்கும்
மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. தனது அண்ணன்
மகளை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற வருத்தம் இப்போதும் என் தாயிற்கு உள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளில் நான் பெரிய
பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தேன்.
ஒருமுறை என்
தம்பி இராஜேந்திரனிடம்
ரூபாய் 2000/- கடன்
கேட்டேன்! அவன் மறுத்துவிட்டான். எந்தக் குடும்பத்திற்க்காக நான் வாழ்ந்து வந்தேனோ அந்தக்
குடும்பமே என்னை பாரமாக நினைத்தது. என்
தந்தை உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. நான் துவண்டு போன காலங்கள் அது. குடும்பத்திற்கான
என் பங்களிப்பிற்கு மதிப்பளிக்கவில்லை என்ற மனக்குறைக்குறை எனக்கு ஏற்பட்டது .
ஆனால், இது எனக்கு
மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத் தந்தது. யாரையும் சார்ந்திருக்காதே என்ற அனுபவத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது.. எனக்கு உதவாமல்
மறுத்ததின் மூலம் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுத்தான் என் தம்பி. வாழ்க்கையில் உயர மேலும் உழைக்க வேண்டும் என்று
உத்வேகத்தை கொடுத்த தருணம் அது.
விழித்துக்
கொண்டேன். படித்தேன்!
படித்தேன்! ... உழைத்தேன்! உழைத்தேன்! . பதவி உயர்வு , பணம், வீடு அனைத்தும்
தேடி வந்தது. இன்று நான் மிக மிக உயரத்தில்!!!. தன்னிறைவான மனிதனாக இருக்கிறேன். இதற்கு காரணமான என் தம்பிக்கு நான்
நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு வேளை அவன் எனக்கு உதவி
செய்திருந்தால் ,
தம்பி
இருக்கிறான் என்ற தைரியத்தில் நான் சோம்பேறியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும்
, இப்போதும்
மழைநீர் ஒழுகிய அந்த குடிசை என் மனதை விட்டு நீங்கவில்லை. உன்னிடம் இருக்கும்
அதுவும் நிரந்திரமில்லை. மாறக்கூடியது சொல்லிக் கொண்டே இருக்கிறது.
ஒரு நாள் , என் தந்தைக்கு உடல்
நலமில்லை என்று செய்தி வந்தது. அவரது
மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில்
வெடிப்பு ஏற்பட்டு , ஒருபக்கவாதம் உருவாகி
ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர்
உடல்நலமில்லாமல் இருந்த அனைத்துத் தருணங்களிலும் நான் அவர் கூடவே
இருந்திருக்கிறேன். ஒரு மகனுக்குரிய கடமையை செய்திருக்கிறேன். அவர் நலமாகி எழுந்து வந்துள்ளார். ஆனால் , இந்த முறை, நான் 2000 மைல்களுக்கு
அப்பால்! . எனக்கு தெரிந்து விட்டது; எனது தந்தை தனது இறுதி
பயணத்திற்குத் தயாராகி விட்டார். என்னால் உடனடியாக வர இயலவில்லை. எந்த பதவி , பணத்தையும்
வசதியையும் எனக்கு கொடுத்ததே , அதுவே எனக்குத்
தடையாகவும் இருந்தது. அவர் இறக்கும் போது அவரது மூன்று மகன்களில் ஒருவர்
கூட அருகில் இல்லை. மிகவும் துர்பாக்கியசாலி. ஆனாலும், என் தந்தை இறக்கும் தருணத்தில் கட்டாயம் என்னை நினைவு
கூர்ந்திருப்பார்.
எந்த மண்ணில்
என் தந்தை உருண்டு புரண்டாரோ அதே மண்ணில் இன்று புதைக்கப்பட்டுவிட்டார். அவர் சேர்த்து
வைத்திருக்கும் சிறிதளவு சொத்தை பிரிப்பதற்காக அவரது குழந்தைகள் தயாராகி
வருகிறார்கள். அதற்கான
ஏற்பாடுகளை செய்யுமாறு என்னுடைய கடைசி தம்பிக்கு கூறிவிட்டு வந்துவிட்டேன். இந்த மண்ணை
விட்டுப் போகும் போது நாம் எதையும் எடுத்துக் கொண்டு செல்லப்பபோவதில் என்று
நன்றாகத் தெரியும்.
வீட்டின்
வெளியே மழை நின்றிந்தது.
No comments:
Post a Comment