Thursday, 27 December 2012

மனிதன்! மதம் !! சாதி !!!


சாதி ! இது , இந்திய துணைக் கண்டத்தில் மறக்கமுடியாத வார்த்தை ! மனித இனத்தை வருணப் பிரிவுகளாக பிளவுபடுத்தி வைத்திருக்கும் மந்திரச்சொல்!. பரிணாம வளர்ச்சியின் மூலம் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியவர்களை,  பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்தவர்களை,  மதத்தின் அடிப்படையிலும், சாதியின் பிரிவிலும்  ஒதுக்கி பிரித்து வைத்தக் கொடுமை எவ்வாறு ஏற்பட்டது?.  எத்தனை மதங்கள் ? சாதிகள், கடவுள்கள் இந்த உலகில்  உலவுகின்றன! இவற்றால் மனிதகுலத்திற்கு இலாபமா? அல்லது சாபமா? . மத்திய கிழக்கு ஆசியாவில், மதத்தின் பெயரால்  நடந்து முடிந்த சிலுவைப் போர்களை உலகம் மறக்கத்தான் முடியுமாஇருந்தாலும் பிற உலக நாடுகளில் பெரிதும் தலைதூக்காத இனப்பாகுபாடும் சாதீயமும் இந்தியாவில் மட்டும் வேர் விட்டு மரமாக வளர எது காரணமாக இருந்தது? . ஆழமாக பார்க்கவேண்டிய விசயம் இது!.

முதலில், ஆப்பிரிக்காவில் குரங்காகப் பிறந்து , மனிதனாக உருவெடுத்து, இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் உணவிற்காக  உலகின் மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தனர். அதனால் அவர்களுக்குள் பல்வேறு பிரிவுகளும், அந்தந்தப் பிரிவுகளுக்கு தலைமை தாங்க பலம்மிக்க தலைமையும் உருவானது. ஒவ்வொரு இனக்குழுவிற்கும் முதலில் ஒரு பெண்ணே தலைமை தாங்கி இருக்கிறாள்.  அவளுக்கு  தன் இணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்  முழு உரிமை இருந்தது. கூட்டுக் கலவி முறையில் வாழ்ந்த மக்கள் பின்னர் தங்களுக்கு இடையே உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு வாழத் துவங்கினர். மணஉறவு அந்தந்த குழுகளுக்கிடையிலேயே நடந்தது.  

உணவிற்காக முதலில் காட்டு விலங்குகளை வேட்டையாடத் துவங்கிய மனிதன், பின்னர் குதிரை, ஆடு மற்றும் நாய்கள்  போன்ற விலங்குகளை  வளர்க்கத் துவங்கி , அவைகளையே உணவாகிக் கொண்டான்.   ஒரு இனக்குழு வளர்த்த  விலங்குகளை அபகரிக்கத் துவங்கிய மற்ற இனக்குழுக்கள்  அத்துடன் அந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களையும் அபகரிக்கத் துவங்கினார்கள். அந்த குழுக்களுக்கு இடையே போட்டியும் சண்டையும் ஏற்பட்டன. அந்தந்த இனக்குழுவைக் காக்கவே தலைவனும், ஆயுதங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தான் வலுவான ஆண் , அதிகாரத்தை பெண்ணிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். இவ்வாறு தான் ஆண் ஆதிக்கச் சமுதாயம் உருவானது!

ஒரு இனக்குழுவின் திறமையான தலைவன் அந்த இனக்குழுவைச் சேர்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டான் , போற்றப்ப்பட்டான். அம்மக்கள், அவனுக்கு முக்கியத்துவமும் , மரியாதையும் கொடுத்தனர் .  அவன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். அவன் இறந்த பிறகும் , அவனது உருவம் சிலையாக வடிக்கப்பட்டு வணங்கப்பட்டான்! அவனுக்குப் பிடித்தமான உணவினை படையல் செய்து நினைவு கூர்ந்தனர்.  ஏற்கனவே , இயற்கை சக்திகளான சூரியன், மழை, காற்று மற்றும்  இடி போன்றவற்றைப் பார்த்து பயந்த வாழ்ந்த அம்மக்கள்அவைகளை மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்திகளாக உருவகப்படுத்தி வணங்க ஆரம்பித்திருந்தனர். அத்துடன் இந்தத் தலைவனையும் சேர்த்து வணங்கத் துவங்கினர். மதுரைவீரன், ஐயப்பன், அய்யனார் , முனியாண்டி மற்றும் கருப்பசாமி போன்றவர்கள் எல்லாம் மாபெரும் வீரனாக இருந்து கடவுளாக வணங்கப்பட்டவர்கள் தான். இவ்வாறு தான் உருவ வழிபாடும் , கடவுளும் , அந்தக் கடவுளுக்கான உருவமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு பயத்துடன் கூடிய ஒரு நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது. இதுவே ஆன்மிகம் மற்றும் மதம் என்ற கருத்துமுதல்வாதத்தின் துவக்கம். அதேபோல் , ஒரு இனக்குழுவின் தலைவன் கடைப்பிடித்த நல்ல கொள்கைகளும் , செயல்பாடுகளும் மற்றும் அனுபவங்களும் எழுதிவைக்கப்பட்டு பின்வரும் சந்ததியினர்களுக்கு சொல்லப்பட்டன. அவனது நம்பிக்கையும், பக்தியும்   அவனது குழுவில் இருந்த பூசாரிகளால் வேதங்களாகவும், உபநிடதங்கலாகவும்  பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவில் சாதிகள் எவ்வாறு உருவாகின?

இதற்கு கி.மு. 2000 இல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களும் , அவர்கள் உருவாக்கிய ரிக்,யசூர், சாம, அதர்வன  போன்ற வேதங்களுமே முழுப் பொறுப்பு! இந்த ஆரியர்களே பார்பனர்கள் அல்லது பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  அவர்கள் கடைப்பிடித்த வருணாசிரமக் கொள்கைகளே  இன்று நம் மக்களை சாதீயப்பிடிக்குள் சிக்க வைத்துள்ளன.  அவர்கள் வேதங்களை காரணங்காட்டி மனிதர்களை  பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று நான்கு வகைகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வேலைகளை செய்யவேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். இதில் சத்திரியர் அரசு/ஆட்சிப் பொறுப்பையும், வைசியர்கள் வணிகத்தையும் , சூத்திரர்கள் மற்ற மூன்று வருணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடிமைகளாக இருந்து , அவர்கள் பணித்த வேலைகளை செய்யவேண்டும் என்றும், சத்திரிய,வைசிக மற்றும் சூத்திர சாதியினரை இயக்கும் சூத்திரதாரியாக பிராமணர்களும் இருந்தனர்.  இந்தப் படிநிலைகளை இன்று வரை இந்து மதம் கடைப் பிடித்து வருகிறது என்பது கேவலமான உண்மை!,

இதற்கு எதிர்மறையாக , இந்து மதம் போதித்த வருணாசிரமக் கொள்கையை எதிர்த்து , தனிமனித ஒழுக்கத்தையும் , பண்புகளையும் உள்ளடக்கி உருவான சமண மதமும், புத்தமதமும் அதைத் தோற்றுவித்த மகாவீரர் மற்றும் கௌதமபுத்தர் இவர்களது மறைவிற்குப் பிறகு சில நூறு ஆண்டுகளுக்குள் மறைய ஆரம்பித்துவிட்டது. இதில் புத்தமதமே பொருள்முதல்வாத கோட்பாடுகளை கடைப்பிடித்த முதல் மதம் என்பதையும், புத்தரே இந்தியாவின் முதல் பொருள்முதல்வாதி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. புத்தமதத்தை ஆதரித்த மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கு  வித்திட்ட புஷ்யமித்திர சுங்கனுக்குப் பிறகு ஆரியர்கள் ஆதிக்கம் மேலோங்கி , வருணாசிரமக் கோட்பாடும் , சாதீயமும் தலை தூக்க ஆரம்பித்திவிட்டன என்பதை இந்திய வரலாறு தெளிவாகக் குறிப்பிடுகிறது.  

அதனைத் தொடர்ந்து , இந்து மதம் குறிப்பிட்ட  முதல் மூன்று வருணத்தாருக்கு அடிமையாக இருந்து  அவர்கள் விரும்பிய வேலையைச்  செய்த பலமிழந்த மக்களை தொடர்ந்து கீழான வேலைகளை செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பிறகு அவர்களது சந்ததினர் அந்த வேலைகளை செய்யப் பணித்தனர். மறுத்தவர்கள் தண்டிக்கப் பட்டனர். அவர்களது குடியிருப்பை  நகருக்கு வெளியே அமைத்து தனியாக வாழ பழக்கினார்கள். இப்படிதான் சேரிகள் உருவாகின.  அந்த மக்கள் , அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் சாதிகளாகப் பிரிக்கப்பட்டார்கள். உதாரணமாக , துணிகளை சுத்தப்படுத்தியவர்களை "வண்ணான்" என்றும் , பறை அடித்தவனை " பறையன்" என்றும் , சவரம் செய்தவனை "அம்பட்டன்" என்றும் , நிலங்களை சீர் செய்து உழவு தொழில் செய்தவனை "பள்ளன்"  என்றும் செருப்புத் தைப்பவனை " சக்கிலியன்" என்றும்  அழைத்தனர்.  மொத்தத்தில் அவர்கள் சூத்திரர்கள்!  

இப்படி காலங்காலமாக  சூத்திரர்களாக , கொத்தடிமைகளாக வாழ்ந்து வரும் மக்களே இன்று " தலித்துகள்" என்று அழைக்கப்படுகின்றனர்.  இதில் கொடுமை என்னவென்றால் , இந்த சூத்திரர்களுக்குள்ளே     நான் பெரியவன், நீ எனக்கும் அடிமை என்ற மனநிலையும் தொடர்ந்து இருந்து வருவது   தான். இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, சுரண்டப்பட்ட இந்த மக்கள் மீண்டெழ ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது! ஆம்! அது ஆங்கிலேயர்களின் இந்திய வருகை தான்  

ஆங்கிலேயர்கள்  இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய மட்டுமே  வந்தவர்கள் என்றாலும் , அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை, மக்களிடையே இருந்த புரையோடிப்போன  சாதி,மதப் பேதைமை, ஒற்றுமையின்மை போன்றவைகள் , அவர்கள் இந்திய ஆட்சியை கைப்பற்ற காரணிகளாக அமைந்தன .  அதற்கு பெரிதும் துணையாக இருந்தவர்கள் இந்த தலித்துகளே! இந்திய ஆதிக்க சமூகத்தால் அடக்கி, ஒடுக்கப்பட்டிருந்த இவர்களை  ஆங்கிலேயர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கவும், வீட்டு வேலைகளை செய்யவும் ஆரம்பித்த இம்மக்களை, ஆங்கிலேயர்கள் பின்னர் இராணுவத்திலும் சேர்த்துக்கொண்டார்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி அறிவினையும் கொடுத்தனர். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இத்தலித்துக்கள் சாதீய அடக்குமுறைகளுக்கு பதிலடியாக அதாவது இந்தியச் சகோதரர்களுக்கு எதிராக போரிடத் துவங்கினார்கள். இவர்களுடன், அப்போது  சிறுபான்மையினரான இருந்த சில இஸ்லாமியர்களையும் ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் சேர்ந்து கொண்டார்கள்.  என்னதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப் படுத்தி இருந்தாலும்,  அவர்கள் காலத்தில் தான் ஒருங்கிணைந்த இந்தியா உருவானது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை! அது மட்டுமல்லாமல் , சாதீயமும் அச்சமயத்தில் ஒடுங்கியிருந்தன.

ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகினப்பிறகும், கலாச்சார மற்றும் பண்பாட்டுத்தளத்தில் அபரீதமான வளர்ச்சி ஏற்பட்டப்பிறகும் இன்று  பிற்ப்போக்கான சாதீயக்  கோட்பாடு   மீண்டும் மக்கள் மனதிலே  புதுப்பிக்கப் படுகிறது! இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல சாதிக் கட்சிகள் பல உருவாகிவிட்டன! திரும்பவும் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்! அதுவும் திட்டமிட்டு அவர்களது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமான தாக்குதல்!  இது இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும்  ஊறு விளைவிக்கவல்லது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.  மொத்தத்தில் , சாதீ.. இப்போது தமது கொடிய நாவினை சுழற்ற  ஆரம்பித்து விட்டன.  இது ஆரோக்கியமான இந்திய தேசத்தை உருவாக்கப்போவதில்லை! அதனால் இளைஞர் சமுதாயமே ! விழித்தெழுங்கள் ! இந்தியாவின் வருங்காலம் உங்கள் கையில்!  இந்தச் சாதீயத்தை வேருடன் வீழ்த்துங்கள்!