Tuesday, 2 April 2013

கல்வெட்டு!


சுழன்று  கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் மிக வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் பெற்ற வெற்றிகளையும், தோல்விகளையும்  ஆழ்மனதிலிருந்து  மீட்டெடுத்து அவ்வப்போது அலசிக்கொண்டே இருப்பார்கள். வெற்றிகளை சுவைத்த  மனிதன் அதன் சந்தோஷத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற முயற்சிக்கிறான். தோல்விகளைச் சந்தித்தவன் மீண்டும் எழ முயற்சிக்கிறான் அல்லது  நொறுங்கிப்போய் வீழ்ந்து விடுகிறான்.

ஒருவன் பொருளாதார  வீழ்ச்சியில்  மீண்டெழுந்து வந்தாலும் வரலாம், ஆனால் காதலில் தோல்வி  அடைந்துவிட்டால் அதன் விளைவு அவனது மனதில் ஆறாத வடுவை அல்லது அடையாளத்தை விட்டு வைத்திருக்கும்.  பின்னர் அவன் வேறொரு பெண்ணை மணந்து சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும் அந்த வடு நினைவின் ஒரு மூலையில் மறைந்து இருந்து கொண்டு காலத்திற்கும் முள்ளாக குத்தி உறுத்திக் கொண்டிருக்கும். அதனால் தான் அனுபவசாலிகள் காதலில் வெற்றிபெற்றவன் கஷ்டப்படுவான், தோல்வி அடைந்தவனே அதை வாழ வைத்துக்கொண்டிருப்பான் என்று கூறுவார்கள்.

அந்த நிறைவேறாத காதலின்  வேதனையை சுமந்து கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன் என்ற வகையிலும், ஒரு நல்ல பெண்ணின் திசை மாறிய வாழ்க்கைக்கு பொறுப்பாகி விட்ட குற்ற உணர்வுடனும் இதை எழுதுகிறேன்.

*வா.........!

அவள் எனக்காக பிறந்திருக்கிறாள் என்று நான் நம்பினேன் . அவளே எனக்கு காதல் என்கிற சுகமான சுமையை அறிமுகப்படுத்தியவள். ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் என் உள்ளம் கவர்ந்த அழகி அவள் மட்டுமே!. அவள் எனக்குப் பிடித்துப்போன பின் வேறு எந்த பெண்ணையும்  நான் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதும் நிஜம். இருவரும் மனதிற்குள்ளே காதலை வளர்த்து வந்தோம். அதே சமயத்தில் நாங்கள் தூரத்து உறவினர்களும் கூட ஆனால் அவளது பெற்றோர்கள் ஏழை. என்னுடைய பெற்றோர்களும் ஏழையாக இருந்தாலும், வசதியான தாய் மாமன்களிடம் வளர்ந்து வந்தேன். தோற்றத்திலும், செயல்பாடுகளிலும், படிப்பு மற்றும் விளையாட்டுக்கள் மூலமும் நான் அனைவரையும் கவரும்  தன்மை படைத்தவனாக இருந்தேன். என்னைப் பிடிக்காதவர்களோ அல்லது வெறுப்பவர்களோ எங்கள் கிராமத்தில் யாரும் இல்லையென்றால் அது மிகையில்லை.  அதனால் பல பெண்கள் என்னை விரும்பியதுண்டு. குறிப்பாக, *……. என்னை விரட்டி,விரட்டி காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் என்னைக் கெஞ்சியதுண்டு . அவளை  நான் ஏற்க மறுத்தபோது, அவள் வடித்த கண்ணீர் எனக்கு இன்னும் ஞாபகத்திற்கு வருகிறது.  அதுவும், அவள் திருமணமாகிச் சென்ற பின்னர் மனம் வெதும்பி அவளுடைய அம்மாவிற்கு எழுதிய கடிதத்தை படிக்க நேர்ந்த போது நான் மிகவும் வேதனைபட்டதுண்டு. அதேபோல் என்னை விரும்பிய இன்னொரு பெண்ணான *பூ…….. எனது தூய காதலைத் தெரிந்து கொண்டபின்னர்தன்னை தேற்றிக்கொண்டு என் காதல் பெற்றி பெறவேண்டும், உனக்கு அவள் பொருத்தமானவளே என்று அழுதுகொண்டே கூறியதும் என் மனதை நெகிழச்  செய்த  நிகழ்வுகள். என்னை விரும்பிய  இவர்களையெல்லாம் மறுத்துவிட்ட எனக்கு, மீள முடியாத வேதனை தந்தது எனது மாமன் மகளே! 

*மு..... ! அவள் எனக்காகவே பிறந்திருப்பதாக என்னைத் தவிர, என் குடும்பத்தினர் அனைவரும் நம்பி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவளும் அழகானவளே! எந்த வாலிபனையும் கவரும் அழகு அவளுக்கும் இருந்தது. ஆனால், என் மனதை ஏற்கனவே  வேறொரு பெண் ஆக்கிரமத்து விட்டதால்  அவளின் மேல் என் மாமன் மகள் என்ற அன்பைத் தவிர காதல் கனியவில்லை  . ஆனால் * ப..... போல், *பூ....போல் இவளால் என்னை விட்டுத்தர முடியவில்லை. இவளின் உரிமைப் போராட்டம் ,எங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்டது.  

அப்பொழுது, நான் மத்திய அரசுப்பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து இருந்தது.   நல்ல சம்பளம்  வாங்கிக் கொண்டிருந்தேன்.  மனம் நிறைய மகிழ்ச்சி நிறைந்திருந்தது. ஒரு நாள்  என் தந்தையுடன் சென்று, எனது காதலை, ஆசையை வெளிப்படுத்தி எங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகோள் வைத்தேன். அப்போது இரவு எட்டு மணி இருக்கும், மங்கலான அத்தருணத்தில் என் தந்தையின் மனதில் எனது வார்த்தைகள் தோற்றுவித்திருக்கும் மாறுதல்களை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனாலும் நம்பிக்கை இருந்தது.  பொறுமையாக இரு தம்பி, இது சம்பந்தமாக உன் தாத்தாவிடமும், மாமாவிடமும் பேசி நல்ல முடிவை எடுப்போம் என்று கூறினார். அன்று எனது மனம் நிறைந்திருந்தது. சிக்கலான ஒரு பிரச்சனையை எனது  தந்தையிடம் விட்டுவிட்ட திருப்தியும், எனது நீண்டநாள் கனவும் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.

ஆனால் நடந்தது என்னவோ முற்றிலும் எதிர்பாராதது!.

அடுத்த நாள் எங்கள் வீடு கலவர பூமியானது. அந்தபெண்ணின் கண்ணியத்தில் களங்கம் சுமத்தப்பட்டது. அவளது பெற்றோர்கள் அவமானப்படுத்தபட்டார்கள்.  எங்கள் இருவருக்கும் மட்டுமே பரிச்சயமானக் காதல் அந்தக் கிராமம் முழுவதும் பேசப்பட்டது. அவள் அவமானத்தால் குன்றிப் போய்விட்டாள். அவளது கண்களில் அருவியாய்க் கொட்டிய கண்ணீர்த்துளிகள், என் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. என் நண்பர்கள் என்னிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டார்கள். அவளும் தான். என் காதல் கொஞ்ச கொஞ்சமாக வீழ்த்தப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலையில் நான் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருந்தேன். கிட்டத்தட்ட நொறுங்கிப் போய்விட்டேன் என்றே கூறலாம்.. பனிரெண்டு ஆண்டுகளாக எனக்கு மகிழ்ச்சியையும், எதிர்கால கனவையும் கொடுத்துவந்த எனது காதல் அக்கிராமத்தின் தெருக்களிலே போட்டு மிதிக்கப்பட்டன. 

எனது குடும்பத்தினர் அனைவரும் எனது காதலை நிராகரித்து, மாமன் மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துவிட்டார்கள். அதன் பிறகு இப்பிரச்சனை சம்பந்தமாக என் தந்தை என்னுடன் எதுவும் பேசியதில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவளுக்கு வேறொருவனுடன்  திருமணம் நடந்தது. ஆம்!  எனது பொக்கிஷம் எங்கிருந்தோ வந்தவனால் களவாடப்பட்டது,  கனவுகள் திருடப்பட்டுவிட்டது. நான் சூனியத்தின் பிடியில் சிக்கினேன்.

ஒரு நாள்..., பணி முடிந்து நான் வீட்டினுள் நுழையும் போது எனது வீடே உறவினர்களால் நிறைந்திருந்தது. அம்மா, சித்தி,மாமன்கள், தாத்தா, பாட்டி  என்று  ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஏறத்தாழ 50 பேர்கள் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் அனைவரின் வேண்டுகோளும் ஒன்று தான்! நான் எனது மாமன் மகளை திருமணம் செய்ய வேண்டும். எனது அம்மாவும், பாட்டியும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தனர். எனது அம்மாவின் கண்ணீர் அத்தருணத்தில் எனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.  ஆனால் எனது பாட்டியின் அழுகை என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. ஏனென்றால் , அவளே எனக்குத் தாயாக, பாட்டியாக, பாதுகாவலனாக இருந்து ஆளாக்கியவள் (அவளை அழ வைத்தமைக்காக பல நாட்கள் நான் வருந்தியதுண்டு).   அவர்களது கோரிக்கையை ஏற்காவிடின், அனைவரும் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

நான் மிக அமைதியாகக் கூறினேன், " மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால்  நீங்கள் குறிப்பிடும் வேறு எந்தப் பெண்ணையும் மறுக்காமல் திருமணம் செய்து கொள்கிறேன்".   தற்கொலை செய்து கொள்பவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பம் ஆனால் நான் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன்! இதுவே எனது திடமான பதில். இது தான் சுதந்திரமாக, சுயமாக நான் எடுத்த முதல் முடிவு.  மனம் மிகவும் கனத்திருந்தது. அன்றே வீட்டை விட்டு வெளியேறி, வெளியில் தங்க ஆரம்பித்தேன்.  என் குடும்ப உறவில் தற்காலிக விரிசல் ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு, என் மாமன் மகள் மு.. வுக்குத் திருமணம் நடந்தது. சந்தோசமாக நடக்கவேண்டிய அத்திருமணம் விரக்தியுடனும், அழுகையுடனும் நடந்ததாகத் தெரிந்து கொண்டேன். என் உறவுகளை சிரமப்படுத்தியதற்காக நான் வருந்தினேன்.  அதே போல் தான் என் திருமணமும் நடந்தது. என் தாய்மாமன்கள், சித்திகள், தாத்தா,பாட்டி என்று  யாரும் வரவில்லை. அவர்கள் பெயரைக்கூட பத்திரிக்கையில் போடக்கூடாது என்று கூறி விட்டார்கள்.  என்னைத் தவிர என் திருமணத்தில் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. எனது திருமணப் படங்களை பார்க்கும் போது சந்தோசத்திற்குப் பதிலாக என் பெற்றோர் , தம்பிமற்றும் தங்கைகளின் இறுகிப்போன முகங்கள் தான் தெரியும்.

என் மனைவி நல்லவள். அவளிடம் எல்லா உண்மைகளையும் கூறினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். தன் கணவனை கவர்ந்த இன்னுமொரு பெண்ணும் இருக்கிறாள் என்பதை எந்த ஒரு பெண்ணும் சீரணித்துக் கொள்வது மிகவும் கடினமே.  என்னைச் சரியாக புரிந்து கொண்டாள். எங்கள் வாழ்க்கை இன்று வரை எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாக உள்ளது. 

என் திருமணம் முடிந்து ஓராண்டிற்குள் அந்தச் அதிர்ச்சி செய்தி  எனக்குக் கிடைத்தது.  ஆம்! வா..  விதவை ஆகிவிட்டாள். அவள் கணவன் மாரடைப்பால் இறந்துவிட்டான். திருமணம் ஆகிய நான்கு  வருடத்திற்குள் ஒரு பெண், ஆண் என்று இரண்டு குழந்தைகளை தந்துவிட்டு அவன் விடைபெற்றுக் கொண்டான். மிகவும் வருத்தமடைந்தேன். என் கண்கள் எனக்குத் தெரியாமலே தானாக கண்ணீரைச் சொரிந்தன. அவளின் இந்த பரிதாப வாழ்க்கைக்கு நானே காரணம் என்ற குற்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டது. அநேகமாக என் இறுதிக் காலம் வரை அதிலிருந்து விடுபட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் .

அதன் பிறகுதமிழக அரசின் விதவை நலவாழ்வுத் திட்டத்தின் கீழ்  அவளுக்கு வேலை கிடைத்தது. அதனால்  அவளது வாழ்க்கைச் சுமை ஓரளவு குறைந்திருக்கலாம்.  ஆனால்,  ஆசைகள், கனவுகள், இளமை,  மற்றும் சந்தோசங்கள் எல்லாவற்றையும் அவள்  இழந்திருப்பாள்  தானே? .

ஆண்டுகள் பல உருண்டுவிட்டன.

இப்போது, அவளது பெண்ணிற்கும் திருமணமாகிவிட்டது. ஆம்! காதல் திருமணம் தான். தன் பெண் விரும்பியவனுக்கே அவளை திருமணம் செய்து கொடுத்துவிட்டாள்.  தகவல் கிடைத்ததும் நான் மிகவும் மகிழ்ந்தேன். தனக்கு கிடைக்காததை தன் பெண்ணிற்கு பெற்று தந்து விட்டாள். நிச்சயமாக  அவள் மனதில் உண்மையான காதலின் சுகமான ராகங்கள் ஞாபகம் வந்திருக்க வேண்டும் . 

நானும் பல ஆண்டுகளாக குற்ற உணர்வுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்! எப்போதாவது அவளை நேருக்கு நேராக பார்க்க நேரிடலாம் ! அப்போது அவள் கரங்களை பிடித்துக் கொண்டு அவளிடம் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இது என் ஆசையும் கூட.  இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனாலும், இளமையில் பதிந்து விட்ட அந்த முதல் காதல் இன்னும் என்னை துன்புறுத்தவே செய்கிறது.  என்  மனதில் ஆழமாகப்  பதிந்து விட்ட அந்தக் கல்வெட்டு  என் உயிர் உள்ளவரை வாசிக்கப்படும் !

( * முழுப் பெயர்கள் குறிப்பிடாதற்கு மன்னிக்கவும்)