Friday, 3 May 2013

கருணைக்கொலை


கடந்த ஏப்ரல் 16 ந் தேதி "டைம்ஸ் ஆப் இந்தியா" மதுரை பதிப்பு [TOI ] பக்கம்-3  இல் வந்த இந்த துயரமான செய்தியை பலர் படித்திருக்கக்கூடும். இதை ஒரு செய்தியாக மட்டும்  பார்க்காமல் சராசரி மனித உணர்வோடு புரிந்து கொண்டால் தான்,  பாசம் மிகுந்த ஒரு தந்தையின் வேதனையை, வலியை உணர முடியும். அதன் சுருக்கமான விபரம் இதோ;

கன்னியாகுமரி மாவட்டம் , அனியபரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாத்துரை( வயது-55) என்பவர், தனது மகன் செல்வினை ( வயது 24) நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் மன நோய்க்கான சிகிச்சை பெறும்போது , கழுத்தை நெறித்துக் கொன்றார்.  செல்வின், SSLC வரை படித்த, மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபன். தனது 15 வயது வரை மற்றவர்களைப் போல் நன்றாகத்தான் இருந்துள்ளான். அதற்குப் பிறகு தான் மனநோய் ஏற்பட்டுள்ளது. அதனால் படிப்பை தொடர இயலாமல் , வயல் வெளிகளிலும் , வீடியோ கடைகளிலும் கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளான்.  அவனது பெற்றோர், இந்த மன நோய் குணமடைய எல்லா  இந்துக் கோவில்களுக்கும் , ராஜாவூர் கிறித்துவ கோவிலுக்கும் அழைத்து சென்றுள்ளார்கள்.( ஏழைகளுக்கு இது தானே உயர்ந்த மருத்துவம்!. ) செல்வினுக்கு நோய்க்குறிகள் அதிகரிக்கும் போதெல்லாம் முரட்டுத் தனமாக நடந்து கொள்வதும் , தகுதியற்ற வார்த்தைகளையும் பயன் படுத்துவதும் வழக்கம். அத்தகைய சமயங்களில் அவனை கட்டுப்படுத்துவதற்கு, ராஜாவூர் கிறித்துவகோயில் காவலாளி முரட்டுத் தனமாக அடித்துள்ளான். இதை நேரில் பார்த்த அய்யாதுரை மனம் வெதும்பி காவலாளியை கண்டித்துள்ளார். பின்னர், அஞ்சுக்கிராமம் காவல் நிலையத்திலும் காவலாளி மீது புகார் செய்துள்ளார். அதை விசாரிக்க வந்த போலிஷ்க்காரர்,  அய்யத்துரைக்கு அறிவுரை வழங்கி மேற்கண்ட மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார்.. அங்கேயும் நோய்க்குறி முற்றியதால் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் செல்வின் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதோடு, திட்டியும் உள்ளான். இதனால் மிகுந்த வேதனையும், அவமானம் அடைந்த அய்யாதுரை, கூடுதலாக தன் மகன் படும் அவஸ்தையை பொறுக்க முடியாமல் அவனது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். ( இல்லை விடுதலை கொடுத்தார்) “. பின்னர் போலீசுக்குத் தகவல் கொடுத்து சரணடைந்துள்ளார்.

என்ன நண்பர்களே! வாசித்து விட்டீர்களா? இப்போது, உங்களை அய்யாதுரை நிலையிலும்,செல்வினை உங்கள் மகனாகவும் நினைத்துகொள்ளுங்கள், மேலே உள்ள பாராவைப் திரும்பவும் படியுங்கள். அப்போது தான் அய்யாதுரையின் வேதனையையும், வலியையும் நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.

பொதுவாக மனநோயாளிகள் உள்ள குடும்பங்கள், அவர்களுக்கான  மருத்துவ சிகிச்சைக்காக பல்லாயிரம் ரூபாய்களை செலவழித்து, மனரீதியாக துன்பப்பட்டு வேதனையில் வாழ்ந்து வருவது தான் யதார்த்தம். அவர்களுக்கு, இந்த சமூகம் ஆதரவாகவோ அல்லது உதவிகரமாகவோ இருப்பதில்லை. மாறாக அவர்களை ஒதுக்கி வைத்திருப்பதே உண்மை. செலவினை மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்ல உறவினர்கள் யாரும் வராததால் , செல்வினின் தாய் ஜெபக்கனி தனியாக எடுத்து சென்றது என் இதயத்தை உலுக்கி விட்டது. அந்தத் சூழ்நிலையில் மகனை பறிகொடுத்து, கணவனை சிறையில் அடைத்து பறிதவித்த அந்தத் தாய்மனம் எவ்வளவு வேதனை கொண்டிருக்கும்?. இது தான் நாகரிகம் பெற்ற மனித குலத்திற்கான அடையாளமாவெட்கம்!.

எனக்கென்னவோ, அய்யத்துரையின் செயலில் நியாயமே தெரிகிறது. கையறு நிலையில் , வேதனையில் சிக்கித் தவித்த அம்மனிதன்,  தன் மகன் படும் கஷ்டத்தை சகித்துக் கொள்ளமுடியாமல்,  அவனை கொல்ல முடிவெடுத்த போது மனதிற்குள் எவ்வளவு அழுதிருப்பான். கோபமும், வருத்தமும் தணிந்து, தனது ஒரே மகனை தன் கையால் கொன்றுவிட்டோமே என்று எண்ணி புழுங்கும் போது அய்யதுரையின் வேதனையை யாரால் பகிர்ந்து கொள்ள இயலும். அந்த பரிதாபத்துக்கு உரியவனிடம் எனக்கு இரக்கமே மிஞ்சியுள்ளது. அய்யாத்துரை! நான் உனது வழக்கை விசாரிக்கப்போகும் நீதிபதி இல்லை , உன்னை விடுதலை செய்ய!. ஒரு சாமானியன். உனக்காக என்னால் அழ மட்டுமே முடியும். உன் மகனைக் கொன்றதற்காக சட்டம் உனக்கு மூன்று முதல் பனிரெண்டு அல்லது ஆயுள் தண்டனை வழங்கலாம்!. ஆனால் நீ இப்போதே செத்து விட்டவன் என்பதை என்னால் யூகிக்க முடியும். இருந்தாலும், இதைச் சொல்கிறேன்; உனது வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம்  மட்டும் எனக்கு கொடுக்கப்பட்டால், உனக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை  வழங்கி  , அதையும் ஒரு அனாதை விடுதியில்,  காவலனாகவோ  அல்லது அரசு மனநல விடுதிக்காப்பாளன் ஆகவோ கழிக்குமாறு உத்தரவிடுவேன்! அது தான் உனது குற்றத்திற்கான சரியான தண்டனையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்! ஏனென்றால், நீ செய்தது கொலை இல்லை! கருணைக்கொலை!!