Sunday, 26 October 2014

ஆனாலும் ...

அழிந்துபோன காதல் உணர்வின் ரணங்கள்  என் மனதில் மறையத் துவங்கியிருந்த நேரம் அது!. எனது திருமணத்தைப் பற்றிய திட்டங்கள் எதுவும் அப்போது என்னிடம் இல்லை. இருந்தாலும் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் தம்பிக்கு அவசரம்.  ஏனென்றால் அவனுக்கு வழிவிட்டாக வேண்டுமல்லவா

என் மனைவியை முதலில் பார்த்தவுடன் மனதிற்கு நிறைவாகத்தோன்றியது , அமைதியாக மனம் அவளை ஏற்றுக் கொண்டது. எங்கள் திருமணம் முடிந்தவுடன் என்னைப் பற்றியும் , எனது நிறைவேறாத காதல்பற்றியும், குடும்பத்தைப்பற்றியும்  எல்லா உண்மைகளையும் என் மனைவியிடம் தெரிவித்து விட்டேன். எனக்கு உண்மை பேசுவதே பிடிக்கும் . உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவனல்ல! இந்த உண்மைத் தன்மையே எனக்கு பல சோதனைகளையும் வேதனைகளையும் தந்துள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது கடந்த காலத்தைப்பற்றி என் மனைவி அடுத்தவர்கள் மூலம் தெரிந்து கொள்வதை விட நானே  சொல்லிவிடுவது நல்லதல்லவா?

என் மனைவி அமைதியாக கேட்டுக் கொண்டாள்! முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனாலும்அவளது மனதிற்குள் வருத்தமும் , ஏமாற்றமும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தப் பெண்ணிற்கும்  தனது கணவன் வேறொரு பெண்ணை நேசித்தவன் என்ற உண்மை தெரிய வரும் பொழுது அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தராது என்ற உளவியலில் உண்மையை அப்போது நான் புரிந்து கொள்ளவில்லை.. இருந்தபோதிலும் எங்களது வாழ்க்கை இனிமையாக நடைபோடத் துவங்கியது; இருக்கிறது.

எனக்கு திருமணமான சில மாதங்களுக்கு பிறகு இளம் பிராயத்தின் சுகமான நினைவுகளை எனக்கு கற்றுக்கொடுத்தவள் தனது வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டாள். மூன்று ஆண்டுகளுக்குள் விதவைக்கோலம். இடையில் இரண்டு குழந்தைகள் வேறு. என் மனம் இரணமாக வலித்தது. அவளின் பெற்றோர்களின் நிர்பந்தத்தினால்  அவளது  அவசரத் திருமணத்திற்கு காரணமாகி இந்த துன்ப நிலை உருவாக காரணமாகி விட்டோமே என்ற குற்றஉணர்வு மனதிற்குள்ளே என்னை அழ வைத்தது. இன்று வரை அந்த வடு  ஆறவே இல்லை.

ஆனாலும், என் மனதிற்குள் ஆழமாக பதிந்து போன அந்த உருவத்தை என்னால் வேரோடு களைந்து எரிய முடியவில்லை. தூக்கி எரிந்துவிட்டதாக நான் நம்பும் போதெல்லாம் அந்த உருவம் மேலும் வலுப்பெற்று மனதை  ஆக்கிரமித்துள்ளது. இப்படித்தான் காதலில் தோல்வி அடைந்த  ஒவ்வொருக்கும், அவர்களது முதல் காதல் அனுபவம் ஆழமாக பதிந்திருக்கும், வேதனையை கொடுத்துக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். 

எனது குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்லத்துவங்கியவுடன் , எனது முழுக்கவனமும் குழந்தைகளின் மேல் சென்றது. அதன் பிறகு எனது பதவி உயர்வு , அதையொட்டி வீடு , வாகனம் என்று நிறைவான வாழ்க்கை  எனக்கு உள்ளது.  என்னை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவி. இருபத்தி ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன, இருந்தாலும்  நிறைவேற அந்த முதல் காதல் நீ வாழ்க்கையில் வெற்றிபெற்றவன் அல்ல,  குறைபாடு உள்ளவன் என்று குத்திக்காட்டிக்கொண்டே உள்ளது. இப்போதும் அந்த உருவமும், நினைவும் என் மனதின் ஆழத்தில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது.  அது வெற்றி பெற்ற காதலர்களைப் பற்றி தெரிந்து  கொள்ளும் போதும் படிக்கும்போதும் மகிழ்ச்சியிலும், தோல்வியை சந்தித்தவர்களைப் பற்றி அறியும்போது துன்பத்திலும் என் கண்கள் தானாக கண்ணீரை சுரக்கின்றன . காதல் இவ்வளவு வலிமையானதா? காதலில் வெற்றியடைந்தவர்களை விட தோல்வி அடைந்தவர்கள் தான் காதலை விதைக்கிறார்களா? .
ஆனாலும் அந்த முதல் காதல் மரணமற்றது!.