Saturday, 4 February 2017

முதுமை! தனிமை !

இன்று முதுமையும் , உறவுகளின் உதாசீனமும் குடும்ப உறவை கேள்விக்கு உட்படுத்துகின்றன.

ஒரு நாள்நான் கோவைக்கு பயணம் செய்து கொண்டிருக்கும் போது என்னுடன் சில வருடங்களுக்கு  முன்பு பணிபுரிந்த நண்பரும் கூடவே பயணித்தார்அவர் பணி ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆகி இருந்தன.என்னைப் பார்த்ததும் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரது ஓய்வு ஊதியக்கணக்கை நான் தான் முடித்துக் கொடுத்து இருந்தேன். அவரைப் போன்று ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு  பணி முடித்து கொடுத்த திருப்தியும் எனக்கு உண்டு.

மனிதர் மிகவும் நேர்மையானவர், சிறந்த ஆன்மீகவாதி!, நேர்த்தியாக ஆடை அணிவார்இவரைப் பார்த்தவுடன் ஹோமியோபதி மருந்தில்ஆர்சனிக்கம் ஆல்பம்” மருந்துக்குரியவர் என்பதை  என்று புரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு  முன்பு தன்னுடைய  மனைவி இறந்து போனதாகவும் , ஒரே மகன் திருமணம் புரிந்து குழந்தையுடன் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நீங்கள் நலமா? என்று கேட்டவுடன்மனிதர் என் கைகளைப் பிடித்து கொண்டு கண்ணீர் விட்டார்.

மருமகள், மகன் இருவரின் உதாசீனத்தால் அவரது வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். ஒரே மகன். அவனின் பாராமுகம் அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. தனிமையின் தாக்கம் அவரின் ஆயுளை அதிகப்படுத்திவிட்டது. என்னதான்  வசதி இருந்தாலும் அன்பை பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாத பொழுது அல்லது தவிர்க்கப்படும் போது அது மிகுந்த மனவேதனையைக் கொடுக்கும்.

அவருக்கு ஆறுதல் கூறினேன். நண்பர்களின் தொடர்பு மற்றும் சமூகப்பணிகள் மூலம்  இன்னும் சந்தோசமாக வாழமுடியும் என்று ஊக்கப்படுத்தினேன். சிறிது தெளிந்ததும், நான் இன்னொரு வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொள்ளலாமா? என்று அமைதியாகக் கேட்டார்.

ஆம்! முடியும் !.

அதற்கு ஓய்வூதிய விதிகள் அனுமதித்து உள்ளன என்று கூறினேன். அவருக்கு திருப்தி ஏற்பட்டன. தன் மனக்குறையை மருதமலை முருகனிடம் முறையிடவே தான் செல்வதாகவும் , அம்முருகனே நேரில் வந்ததாகவும் நெகிழ்ந்து விட்டார்.

சில நாட்களுக்கு முன்பு மீண்டும்  அவரைப் பார்த்தேன். இன்னும் தனியாகவே வாழ்கிறார். ஆனால்  அவர் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. தனியாக வாழமுடியும் என்று தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளார். அவரிடம் தன்னம்பிக்கையும் தெரிந்தது. எனக்கும் மகிழ்ச்சியே!. ஆனால் அவரைப் போன்று இன்னும் எத்தனை பேர்கள் தவிப்புடன் வாழ்வார்கள்?


இக்கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது!.