Saturday, 11 November 2017

சொல்லத் தோன்றுகிறது!

அப்போது இரவு  எட்டு  மணி. இதமான குளிர் காற்று முகத்தில் பரவி புத்துணர்ச்சியைத் தந்தது  .   என்னுடைய நண்பர் சதாசிவனி என்னை பார்க்க வந்திருந்தார். அதனால் வீட்டிற்கு வெளியே நின்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் எங்களைக் கடந்து சென்றார்.

சதாசிவனி, அந்தப் பெண்ணை பாருங்கள் என்றார். பார்த்தேன். அவளுக்கு வயது முப்பது இருக்கும் ; பெண்கள் அணியும் ஜீன்ஸ் கால்சாராய் அணிந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தார்.  ஆனால் , அந்த முகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சோகம் படிந்துள்ளதாக எனக்குத் தோன்றியது. ஓரிரு நிமிடத்தில் அவள் எங்களைக் கடந்தும் சென்று விட்டாள். 

சதாசிவனி, அந்தப்பெண்ணை ஒரு விலைமாது என்று குறிப்பிட்டார்.  என்னால் நம்ப  முடியவில்லை. உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற வேள்வியை எழுப்பினேன் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் இருவரின் வீடும் அருகருகில் தான் இருந்தது. இந்தப்பெண்ணின் நடவடிக்கை பிடிக்காமலே நான் வேறு வீட்டிற்கு சென்று விட்டேன் என்றார்.

என் நண்பர் சதாசிவனி மிகவும் ஒழுக்கசீலர். நேர்மையானவர். அளவுகடந்த கடமையுணர்வு உள்ளவர்.  தனது எண்பத்தி ஐந்து வயதான தாயை மிகவும் கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாத்து வருபவர். தனது தாயை  வீட்டை வெளியேற்றி விட வேண்டும் என்று கூறிய  மனைவியையே விவாகரத்து செய்து விட்டவர். அதனால் அவர் வார்த்தையை சந்தேகப்பட முடியாது. மனம் வலித்தது .

அடுத்து அவர் கூறியது   தான் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது . அந்தப் பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர் . கணவர் ஒரு வியாபாரி. அவரின்  வியாபாரம் நொடித்துப் போனதால் , தனது குழந்தைகளை வளர்ப்பத்ற்காகவும் இன்னபிற தேவைகளுக்காகவும் இந்த பெண் இவ்வாறான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் அவரது கணவரும் இதை அனுமதித்து இருக்கிறார் , அவரது விருப்பத்தின் பேரிலே அவள் விலை பொருளாகி இருக்கிறார் என்பது தான்..  

தனது காதல் கனவுகள் சிதைந்து நரக வாழ்க்கையில் தள்ளப்பட்ட அந்தப் பெண்ணிடம் எப்படி சந்தோசம் இருக்கும். அவள்  முகத்தில் படர்ந்திருந்த சோகத்தின் கதை இப்போது எனக்கு சரியாக புரிந்தது. எனக்கு தெரிந்த வரை இல்லற வாழ்வு தோல்வி அடைந்த எல்லாக் குடும்பங்களிலும் பெண்களே தண்டனை அனுபவிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இது ஒரு சமூக நோய். இத்தகைய பரிதாப நிலை  களைந்து எரிய படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் எப்படி?. அந்தப்பெண்ணின் சீரழிந்த வாழ்வு அவளை மட்டுமல்லாமல் , அவளுடன் தொடர்பில் இருக்கும் அனைவரையும் பாதிக்குமல்லவா? இதற்கான தீர்வு தான் என்ன?. எனக்குத் தெரியவில்லை.  


நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை நடைபயிற்சியின் போது   அந்தப்பெண்ணைப்  பார்த்தேன். அவரது  மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய வாகனத்திற்காக காத்திருந்தார். தமது இரு கரங்களுக்கும் இடையே அமர்ந்திருந்த மகனின் தலையில்கண்களில்  பாசம் மிளிர  கொள்ளை  அழகுடன் முத்தமிடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு தாய் தான் என் கண்களுக்கு தெரிந்தாள்; விலைமாதல்ல!