Sunday, 27 December 2020

வாசிப்பை நேசிப்போம்!

 

பகுதி - 1.

 

நமது வாழ்க்கை என்பது கற்றலையும் தேடலையும் உள்ளடக்கியது  . ஒரு மனிதன் பயணம் செய்யும் பாதையே இந்தச் சமூகத்தில் அவனது இருத்தலுக்கான அடையாளத்தைத்  தருகிறது.

 

வாழ்வில் உயர ஒருவனுக்கு கல்வி மிகவும் அவசியமானது; காரணம் அது தான் அவனது அறிவுக் கண்ணைத் திறக்கிறது.

 

ஆனால் அது மட்டுமே போதுமா?. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயின்று விட்டால் மட்டுமே ஒருவன் வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதனாக மாறிவிட முடியுமா?. இல்லையென்றே எனது பட்டறிவு எனக்கு சுட்டிக்காட்டுகிறது.

 

ஒருவனுக்கு , தான் பயின்ற கல்விக் கூடங்களில் கிடைக்கும் அறிவை விட , அவனது பரந்துபட்ட வாசிப்பின்  மூலம் கிடைக்கும் உலக அறிவும் , அனுபவமும் மற்றும் பட்டறிவும் தான்  அவனை செழுமைப்படுத்துகிறது என்றுஉறுதியாக  நம்புகிறேன்.  அதுவே ஒருவனுக்குள் ஆரோக்கியமான எண்ணங்களை  உருவாக்குகிறது; சக மனிதனையும் , பிற உயிர்களையும் நேசிக்கக் கற்றுத் தருகிறது.

 

இப்படித் தான் எனது பயணமும் இருந்தது.  ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த என்னை , வாழ்க்கையின் உயரத்திற்க்கே அழைத்து வந்ததற்கு இந்த வாசிப்பே முதற்க் காரணம்.  வாசிப்பே எனது  அறிவின் கதவைத் திறந்தது ; அதன் மூலம் நல்ல வாழ்க்கையையும் தந்தது .

 

இந்த வாசிப்பு பழக்கம் எனக்குள் எவ்வாறு நுழைந்தது ?, யாரெல்லாம் அல்லது எதுவெல்லாம் எனக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது ? என்னுள் மலர்ந்த இரசாயன மாற்றங்கள்  தான்  என்ன?.

 

 இந்தக்  கேள்விகள் எனக்குள் எழுந்ததும், அதற்கான பதிலை தேடி  எனது மனம் அழகான,  மற்றும்   மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்தை நோக்கி பின்னோக்கி பயணித்தது...

 

பகுதி - 2.

 

என் தாய் வழி தாத்தாவின் பெயர் வேலாண்டி. அவர் தான் அந்தக் கிராமத்தில் வாழும் உறவின்முறைக்கு  நாட்டாண்மை. கையெழுத்து போடும் அளவிற்கு படித்து இருந்தார்  அவருக்கு புத்தகங்களையே அல்லது செய்தித் தாள்களையோ படிக்கும் வழக்கம் இருந்ததில்லை ; ஆனால் மாலை வேளைகளில் இதிகாச அல்லது புராணக் கதைகளை கேட்கும் பழக்கம் இருந்தது. அவர் விரும்பும்  கதைகளை வாசித்துச் சொல்வதற்கு  அவருக்கு " முத்து" என்ற உறவினர் இருந்தார் . எனக்கு கதைகளின் மீதும் ,  வாசித்தலின் மீதும்  ஆர்வத்தை விதைத்தவர் இவரே!.  ஓரளவு எழுதப் படிக்காத தெரிந்த கூலித் தொழிலாளியான முத்துவுக்கு புத்தகம் வாங்குமளவிற்கு  வசதிகளெல்லாம் இல்லை . தேவையான  புத்தகங்களையெல்லாம் எனது தாத்தாவே  அவருக்கு வாங்கி தருவார்.

 

1970 ஆம் ஆண்டு,  அப்போது எனக்கு பத்து வயது. ஆரம்பப்பள்ளியில் படுத்துக்கொண்டிருந்த நான் , பள்ளி முடிந்ததும் என் தாத்தாவுடன் சேர்ந்து முத்து  பாரதம் வாசிப்பதை கேட்கச் செல்வேன். அவர் வாசித்த மகாபாரதக் கதைகளான  கர்ண-அர்ச்சுனா யுத்தம் , பவளக்கொடி , அபிமன்யு வதம் மற்றும் ஆரியமாலா -காத்தவராயன் போன்ற கதைகள் என் மனதிற்குள் ஆழமாகப் பதிந்தது. கதைகளின்  வரிகளை மிகுந்த இராகத்துடனும்   , ஏற்ற இறக்கத்துடனும்   அவர் இழுத்துப் பாடும் போது என்னை மறந்து கேட்பேன். அந்தக் கதைகள் எல்லாம் பசுமரத்தாணி போல் இன்றும் என் மனதில்  பதிந்துள்ளது. குழந்தைப் பருவத்தில் மாயாஜாலக் கதைகளும் , வீரதீரங்களை போற்றும் கதைகளும் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும். அக்கதைகள் தான் அவர்களது சிந்திக்கும் ஆற்றலை கிளறி இரசிக்க வைக்கிறது; கற்க வைக்கிறது. அந்த கதைசொல்லி முத்துவே,  இளமையில், என் தாத்தா எனக்கு வாசித்தலின் சுவையை கற்றுக் கொடுத்தவன். வேலாண்டியே புத்தகங்களை வாங்கக் கற்றுக் கொடுத்தவன். இன்று எனது வீட்டில் இருக்கும் அழகான நூலகத்திற்கு வித்திட்ட ஆளுமைகள் இவர்கள் தான்.

 

எனது கிராமத்திற்குச் செல்லும்  ஒவ்வொரு முறையும்  முத்து கதைகள் வாசித்த அந்த கிராமத்துச் சாவடியை நோக்கி என் கண்கள் திரும்பும்.  இப்போது அங்கே  என் தாத்தாவும் இல்லை ; முத்துவும் இல்லை.  ஆனாலும் மேல்ச்சட்டை அணியாத,  வறுமையின் அடையாளங்களை உடலில் சுமந்து கொண்டு முத்து கதைகள் வாசித்தது என் மனக்கண்ணில் தோன்றும்  . கண்களில் ஈரம் கசியும்.

 

முத்து என்ற கதைசொல்லி இளமையில்  எனது மூளைக்குள் விதைத்த “வாசிப்பு”  என்ற விதை எனது 12  வது வயதில் , 1972 இல் துளிர்விடத் துவங்கியது. ஆம்!  எனது கிராமத்தின் கிளை நூலகம் என்னை வசீகரித்துக் கொண்டது; ஏன் தத்தெடுத்துக் கொண்டது என்றே  கூறலாம். பள்ளி நேரங்களைத் தவிர மீதி நேரங்களைநான்  நூலகத்தில்  தான் கழித்தேன். அப்போது கிளை நூலகராக இருந்தவர் பெயர் " விக்டர் ஜெயபால் " . வாசகர்கள் திருப்பித்  தரும்  நூல்களை மீண்டும் அந்தந்த வரிசையில் அடுக்கி வைக்க அவருக்கு உதவி செய்வேன்.  மிகவும் இன்முகத்துடன் பழகிய அவரின் ஒத்துழைப்பு எனக்கு நிறைய நூல்களை வாசிக்க உதவியது. ஆனால், இவருக்குப் பின்னால் வந்த கிளைநூலகர் " சதாசிவம்" அவர்களே நூலகத்தில் எனக்கு முழுசுதந்திரம் கொடுத்தார். நூலகத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை  என்னிடம் கொடுத்தார். அவ்வளவு நம்பிக்கை.  அது ஒரு சுகமான அனுபவம். புத்தகங்களை நேசிப்பவர்களுக்கே அதன் அருமை தெரியும். கிளைநூலகர் சதாசிவம் அவர்களும் எனது வாசிப்பிற்கு வித்திட்ட மனிதர்களில் ஒருவர். அவரை நன்றியுடன் இந்தத் தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

 

அப்போதெல்லாம் எனக்கு  நாவல்கள் வாசிப்பது தான் மிகவும் பிடிக்கும்;  குறிப்பாக சரித்திர நாவல்கள். சாண்டில்யன் , கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன் மற்றும் கோவி. மணிசேகரன் போன்றவர்களின் நாவல்களை மிகவும் விரும்பி வாசிப்பேன். வரலாற்று கதைகளை வாசிப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. சமூக நாவல்களில் தி.ஜானகிராமன்,  எம்.வி. வெங்கட்ராம் , லட்சுமி மற்றும் ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களின் நாவல்கள் பிடிக்கும். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மிகவும் பிடிக்கும். ஜெயகாந்தனை ஓரளவிற்கு பிடிக்கும். சாண்டியல்யன் என்னைக் கவர்ந்த சரித்திர நாவலாசியராக இருந்தாலும்,  அரு. ராமநாதன் எழுதிய " வீரபாண்டியன் மனைவி" என்ற சரித்திர நாவலே என்னைக் கவர்ந்த  சிறந்த சரித்திர நாவலாகும். மற்றும் சோவியத் இலக்கியங்களான போரும் வாழ்வும், அன்னா கிரினா, தாய் மற்றும் சக்கரவர்த்தி பீட்டர் போன்ற நாவல்கள் அனைத்தையும்  எனது பதினாறு வயதிற்குள்ளேயே வாசித்து முடித்துவிட்டேன்.

 

இதில் ஒரு துரதிருஷ்டம் என்னவென்றால், எந்த வகையான நூல்களை வாசிக்க வேண்டும் என்று எனக்கு யாரும் சொல்லித் தரவேயில்லை. இலக்கியத்தின் வாசனை. என்  குடும்பத்தினருக்கு தெரியாது; எல்லாமே நானே தேர்ந்தெடுத்துக் கொண்டது தான் . அதனால் ,  கார்ல் மார்க்ஸ் , ஏங்கல்ஸ், லெனின் , ஸ்டாலின் , பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற சமூகசிற்பிகளைப் பற்றி எனது பள்ளி பருவத்தில் நான் அறிந்திருக்கவில்லை. மார்க்சியத்தையும், பெரியாரையும்  மற்றும் அம்பேத்கரையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை  எனது கல்லூரி வாழ்க்கை , அதாவது , மதுரை அமெரிக்கன் கல்லூரி தான் கற்றுத் தந்தது.

 

பகுதி - 3.

 

1977-81 ஆம் ஆண்டு , அமெரிக்கன் கல்லூரியில் படித்த போது, எனக்கு தமிழ் துறை பேராசிரியராக இருந்தவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள். அவரின் புன்னகையும், நகைச்சுவையும் எல்லா மாணவர்களையும் ஈர்த்தது என்றால் மிகையில்லை. ஆனால்,  மாணவர்களிடம் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை அவர் விதைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உண்மையாகவும் இருந்தது. ஆனால் , இளங்கலை பட்டம் படித்தபோது எனது தமிழ் துறைப் போராசிரியராக இருந்தவர் பேரா.சுவாமிநாதன் ஆவார். எனக்குள் இருந்த  இலக்கிய அறிவை அறிந்து கொண்டார் இவரே  .

 

எங்கள் கல்லூரியின் இளங்கலை பட்டத்திற்கான முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தில் தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வும் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கான புத்தகங்களை  தேர்ந்தெடுக்கும் நல்ல வாய்ப்பை   எனக்குக் கொடுத்தார். அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்,   ஜெயகாந்தனின் " ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவல் மற்றும் " மாலை மயக்கம்" என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகும் கவிதை நூலுக்கு கவிஞர் வைரமுத்துவை நான் பரிந்துரை செய்திருந்தேன். அவர் எழுதிய "  தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின்  அஞ்சலி " என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. ஆனால், ஒருவரின் கவிதையை மட்டுமே  வாசித்தால் கவிதையின் நுணுக்கங்களை தெளிவாக கற்றுக்கொள்ள முடியாது என்று பேரா. சுவாமிநாதன் கருதினார் . ஆகவே ,  வைரமுத்து , மேத்தா, மீரா மற்றும் அப்துல் ரகுமான் போன்றவர்களின்  சிறந்த பத்து கவிதைகளை சேகரித்து ஒரு தொகுப்பாக வைத்துக் கொண்டோம். இதன் மூலம் நாவல்கள்  மற்றும் சிறுகதைகளை  மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த எனக்கு கவிதையின் வாசனையைக் கற்றுத் தந்தவர் பேரா.சுவாமிநாதன் தான்.

 

நான் முதன்முதலாக பணம் கொடுத்து வாங்கிய  புத்தகம் ஜெயகாந்தனின் " ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புத்தகமே !. அப்போதெல்லாம் நூல்கள் வாங்குமளவிற்கு எனக்கு போதுமான வசதிகள் இல்லை.  மலிவு விலையில் வெளியிடப்பட்ட திருக்குறள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகளை மட்டுமே வாங்க முடிந்தது. புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மதுரையில் உள்ள  புத்தக கடைகளுக்கு அடிக்கடி செல்வேன்.  பிடித்த  புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் எடுப்பேன், விலையைப் பார்ப்பேன்; கையிருப்பு போதுமானதாக இருக்காது. அப்படியே எடுத்த இடத்தில் வைத்து விடுவேன் ; மனம் வலிக்கும் .

 

அமெரிக்கன் கல்லூரி,  இந்தியாவின் மிகச்  சிறந்த கல்லூரிகளில் ஒன்று மட்டுமல்ல , அது மிகச் சிறந்த நூலகத்தையும் தன்னகத்தே கொண்டது. அதனால் எனது கல்லூரி பாடத்தோடு வாசிப்பும் வளர்ந்தது. இங்கு தான் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் பற்றியும் , கம்யூனிசம்-சோசலிசம் பற்றியும் அறிந்து கொண்டேன். லெனின் நவம்பர் புரட்சியை  அறிந்து கொண்டேன். மாமேதை அம்பேத்கரைப் பற்றி  அறிந்து கொண்டேன். பெரியாரைப் புரிந்து கொண்டேன்   அதனால் எனக்குள் இருந்த ஆன்மீக உணர்வு கொண்ட வலது சாரி சிந்தனைகளின் மீது சம்மட்டி அடி விழுந்தது. நாளடைவில்,  இடதுசாரி சிந்தனைக்குள் நுழைவதற்கு எனக்கு களம் அமைத்துக் கொடுத்தது  அமெரிக்கன் கல்லூரியும் அதன் ஒப்பற்ற நூலகமும் தான்.

 

பகுதி - 4.

 

1981 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொலைபேசித் துறையில் " தொலைபேசி இயக்குனராக " பணியில் சேர்ந்தேன். வாழ்க்கைச் சக்கரம் வேகமாக சுழன்றது . நிறைய புதிய நண்பர்கள் வந்தார்கள் ; பிரிந்தார்கள். ஆனால் புத்தகங்கள் மட்டும் பிரியவே இல்லை. கூடவே வந்து கொண்டு தான் இருக்கிறது.  1992 ஆம்  ஆண்டு பணி மாறுதல் ஏற்பட்டு  மதுரைக்கு வந்தேன்.  தோழர்கள் வி.பாலு மற்றும் மு.சங்கையா ஆகியோரின் நட்பு கிடைத்தது .   இவர்களின் அறிமுகம் எனது வாழ்க்கையின் திசையையே  மாற்றி புதிய தளத்திற்கு அழைத்துச் சென்றது .

 

அப்போது வி.பாலு , "தூய ஹோமியோபதி பிரச்சாரச் சங்கம்-AProCH " என்ற சமூக அமைப்பில் உறுப்பினராக இருந்தார். ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் சாமுவேல்  ஹானிமன் அவர்கள் கண்டுபிடித்த ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை மக்களிடையே கொண்டு செலுத்துவதற்கான ஒரு சமூக அமைப்பு அது. எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் இலவச மருத்துவ முகாமும் , ஹோமியோபதி விழிப்புணர்வு கல்வியையும் அவர்கள் கொடுத்து வந்தார்கள் . வி.பாலு , என்னை அந்த அமைப்பில் சேருவதற்கு ஆலோசனை கூறினார். அந்த அமைப்பில் உறுப்பினராக சேருவதற்கு நான் சென்ற போது என்னிடம்  கேட்கப்பட்ட முதல் கேள்வி, " உங்களுக்கு வாசிப்பது பிடிக்குமா?,. என்பது தான் .  ஏனென்றால் , ஹோமியோபதியில் சோம்பேறிகளுக்கு இடமில்லை என்பது அவர்களது புரிதல். AProCH அமைப்பு என்னை அரவணைத்துக் கொண்டதில் எந்த வியப்பும் இல்லையே!

 

இந்த AProCH அமைப்பில் சேர்ந்த பிறகு தான் ஆங்கில நூல்களை கட்டாயம்  வேண்டிய அவசியம் எழுந்தது. அப்போதைய காலகட்டத்தில்  ஆங்கில நூல்களை சரளாக வாசித்து  புரிந்து அளவிற்கு போதுமான  ஆங்கில அறிவு என்னிடம் இல்லை. நான்  பள்ளியிலும் , கல்லூரியிலும் ஆங்கிலத்தை மனப்பாடம் செய்து படித்தவன் தான்.  அதுவரை பாடபுத்தகங்களைத் தவிர எந்த ஆங்கில நூல்களையோ  அல்லது நாவல்களையோ  வாசித்ததும் இல்லை.  ஆனால், இப்போது ஆங்கிலத்தில் இருக்கும் ஹோமியோபதி  நூல்களை நன்றாக புரிந்து படிக்க வேண்டிய நிலை.  சவால் நிறைந்த இந்தப்பணி எனக்கு உண்மையிலேயே உத்வேகத்தையும் , உற்சாகத்தையும் கொடுத்தது.  மிகக் குறுகிய காலத்திலே ஆங்கிலம் எனக்கு வசப்பட்டது. ஹோமியோபதி என்ற மிகச் சிறந்த மருத்துவ அறிவு என் மூளைக்குள் வந்து அமர்ந்து கொண்டது. இன்று நூற்றுக்கணக்கான ஆங்கில நூல்கள் என் புத்தக அலமாரியை அலங்கரித்துள்ளது.

 

பிறகு, 1996 ஆம் ஆண்டில்  , எனது இலாகாவின் பதவி உயர்விற்கான தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்விற்கு தேவையான  புத்தகங்களை வாங்குவதற்கு  என்னிடம் பணம் இல்லாததால் , ரூபாய் ஐந்தாயிரம் வட்டிக்கு  வாங்கி , புத்தகங்களை வாங்கினேன்.  எனது கடுமையான உழைப்பும் நினைவாற்றலும்  அந்தத் தேர்வை எளிதாக வெற்றி பெறச் செய்தது. எனக்கு பதவி உயர்வும் கிடைத்தது.. இந்த பதவி உயர்வானது , எனது பொருளாதார நிலையை மேம்படுத்தி ,  நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு என்னை வாழ்க்கையின் உயரத்திற்க்கே இழுத்து வந்துள்ளது.

 

கடந்த காலங்களில்,  நான் வாங்க  வேண்டும் என்று ஆசைப்பட்ட , வாங்க நினைத்த அனைத்து நூல்களையும் வாங்கிக் குவித்தேன்.  மார்க்ஸ்-ஏங்கல்ஸ் நூல்கள் , கார்க்கி , டாலஸ்ட்டாய் போன்றவர்களின் மற்றும் பிற  சோவியத் இலக்கியங்கள் கம்யூனிசம், பகுத்தறிவு களஞ்சியங்கள் , தமிழின் சிறந்த நாவல்கள் , சாகித்ய அகாடமி பரிசு பெற்ற பெரும் பாலான நூல்கள் , அண்ணல் அம்பேத்கரின் "எழுத்தும் பேச்சும் " என்ற 37 தொகுதிகளும்  என் இல்லம் தேடி வந்தது . இவற்றைத் தவிர தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களையும் சேகரித்து வைத்துள்ளேன். மிகவும்  தகுதி வாய்ந்த நூல்களை கொண்ட அழகான " நூலகம்" என் வீட்டிலேயே அமைந்துவிட்டது.

 

இப்போது , எனது வாசிப்பின் தரம் உயர்ந்துள்ளது. அதற்கு முழுக்காரணமாக இருப்பவர்   தோழர். மு.சங்கையா. இவர் தான் நல்ல நூல்களை எனக்கு அடையாளம் காட்டியவர். ,சாதி,மத மற்றும்  சமூக மாற்றத்தை உருவாக்கும் சமூகவியல் சாய்ந்த நூல்களை வாசிக்க வேண்டும் என்று என்னை கூர்தீட்டியவர் .  நல்ல புத்தகங்களே சிறந்த நண்பர்கள்  என்பார்கள். ஆனால் எனக்கு நல்ல புத்தகங்களோடு நல்ல நண்பர்களும் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. என் நண்பர்களான   மு.சங்கையா, முனைவர். வா. நேரு, வி. பாலகுமார் மற்றும் சமயவேல் போன்ற அனைவரும் சிறந்த எழுத்தாளர்களாக இருப்பவர்கள். எங்களுக்குள் "வாசிப்போர் களம் " என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்  . அதில் நல்ல நூல்களை பற்றி அடிக்கடி கலந்துரையாடல்கள் நடத்துவோம் . அதன் மூலம் எங்கள் பட்டறிவையும்  வளர்த்துக்  கொள்கிறோம். ஆகவே, வாசிப்பு ஒரு மனிதனை வளர்த்தெடுக்கிறது; முழுமையாக்குகிறது என்று திடமாக நம்புகிறேன்.

 

பகுதி - 5.

 

இந்த வாசிப்பு அனுபவம்  என்னோடு நின்று விடக்கூடாது என்று நான் கருதுவது உண்டு. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  என் நண்பர்கள், உறவினர்கள் , சக ஊழியர்கள் என்று அனைவருக்கும் புத்தகங்களையே பரிசளிக்கிறேன். குறிப்பாக  திருமண விழா, இல்லவிழா ,  தொழிற்சங்க மாநாடுகள், பணிஓய்வு பாராட்டுவிழா என்ற அனைத்திற்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக புத்தகங்களை மட்டுமே பரிசளிக்கிறேன். அதில் எனக்கு ஒரு மனநிறைவு கிடைக்கிறது. நல்ல நூல்களை வாங்கிக் கொடுப்பதற்கு என் நண்பர் புத்தகத்தூதன் சடகோபன் இருக்கிறார். என் நூலகத்தில் உள்ள பலநூல்களை  தேடித்தேடி அவர் வாங்கிக் கொடுத்ததே ! அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

 

எனது இந்தப் பயணத்தில் நான் பல நூல்களை வாசித்திருந்தாலும் , சில நூல்கள் என்னை புடம் போட்டிருக்கின்றன . அந்த நூல்களை பற்றி சொல்வது எனது கடமையாகிறது. அவையாவன;

 

Ø  திராவிட சிற்ப இரகசியம்- திருகூடசுந்தரம்.

Ø  ஜெயம் - தேவ்தத் படநாயக்

Ø  மனவளக்கலை -மகரிஷி வேதாத்திரி.

Ø  இந்திய வரலாற்றில் பகவத் கீதை -பிரசாந்த் பஜாஜ்

Ø  இந்துமதம் எங்கே போகிறது- ராமானுஜ தாத்தாசாரியா

Ø  காலந்தோறும் பிராமணீயம்- அருணன்

Ø  கடவுள் உருவான கதை- அஜய் கன்சால்.

Ø  கடவுள் கற்பனையே- ஏ.எஸ்.கே

Ø  உயிரினங்களின் தோற்றம்- சார்லஸ் டார்வின்

Ø  சிக்மண்ட் பிராயிட் - தி.கு.ரவிச்சந்திரன்.

Ø  இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு- தவத்திரு தர்மதீர்த்த அடிகளார்.

Ø  மார்க்சீய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்ஸர்

 

மேற்கண்ட நூல்களை தவிர்த்து பல நாவல்கள் என்னை மிகவும் பாதித்தது உண்டு. அவையாவன;

 

Ø  அம்மா வந்தாள்- தி.ஜானகிராமன்

Ø  மோக முள்- தி.ஜானகிராமன்

Ø  வேள்வித்தீ          - எம் .வி.வெங்கட்ராம்.

Ø  நித்தியகன்னி-எம் .வி.வெங்கட்ராம்

Ø  ஒருவீடு ஒரு மனிதன் ஒரு உலகம்– ஜெயகாந்தன்

Ø  சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்

Ø  கோபல்லகிராமம்- கி.ராஜநாராயணன்

Ø  கோபல்லபுரத்து மக்கள்- கி.ராஜநாராயணன்

Ø  ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி.

Ø  வீரபாண்டியன் மனைவி- அரு.ராமநாதன்.

Ø  கடற்புறா- சாண்டில்யன்

Ø  பொன்னியின் செல்வன்- கல்கி.

Ø  வேங்கையின் மைந்தன்- அகிலன்

Ø  கீழைத்தீ  - பாட்டாளி.

Ø  சோளகர் தொட்டி- ச.பாலமுருகன்.

Ø  தோட்டியின் மகன்- தகழி சிவசங்கரன் பிள்ளை.

Ø  கழிசடை- அறிவழகன்

Ø  தாகம்- கு.சின்னப்பபாரதி

Ø  சித்தார்த்தன்- ஹெர்மன் ஹெசே

Ø  கோவேறு கழுதைகள்- இமயம்

Ø  உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

Ø  மாதொரு பாகன்- பெருமாள் முருகன்

 

மேற்கண்ட பட்டியலில் உள்ள நூல்கள் மிகச் சிறந்த நூல்கள் என்று கூற நான் விரும்பவில்லை. சிலருக்கு இந்நூல்கள் பிடிக்காமலும் போகலாம்.  அதனால் இந்த நூல்கள் எனக்குப் பிடித்த நூல்கள் என்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மேலும், இக்கட்டுரையை என் சுய பெருமைக்காக எழுதவில்லை. வாசிப்பு எனக்கு வாழ்வதற்கான ஒழுங்கினைக்  கற்றுக் கொடுத்தது என்ற உண்மையை பதிவு செய்யவே எழுதியிருக்கிறேன். நன்றி நண்பர்களே ! விடைபெறும் நேரம் வந்துவிட்டது. இந்தக்கட்டுரையை முடிக்கும் முன்பு,  என் மனைவி தேன்மொழிக்கு என் மனம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் . இத்தனை ஆண்டுகளாக கணக்குப் பார்க்காமல் புத்தகங்களை  வாங்கி குவிக்கும் போதெல்லாம்  அவள் சிறிதும் வருத்தப்பட்டதில்லை .  வீட்டு வேலைகளுக்கு எந்த உதவியும் செய்யாமல் புத்தகங்களில் நான் மூழ்கி விடும் போதெல்லாம்  அவள் முனங்கி கொள்வதும் இல்லை. நூல்களைத் துடைத்து , நாப்தலின் உருண்டைகள் போட்டு நூலகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவளே! என் உணர்வை நேசிப்பவளாக என் மனைவி  இருப்பதால் எனது பயணம் சிறிதும் சலனமின்றி நிம்மதியாகச் செல்கிறது.

 

வாசிப்பை நான் நேசித்தேன்; ஆதலால் வாழ்க்கை என்னை நேசிக்கிறது!!!

 

 

சு.கருப்பையா

மதுரை

+919489102431