Wednesday, 11 October 2023

நானும் காசிக்குச் சென்றேன்!


நானும் காசிக்குச் சென்றேன்!

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி , இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும் , அவர்களுக்கு முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகவும் வாரணாசி இருக்கிறது. இதர ஆறு நகரங்கள் முறையே  அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைன், மற்றும் ஹரித்வார் ஆகிய நகரங்கள் இருக்கிறது.


இதில் காசிக்கு செல்ல வேண்டும் என்பது என் மனைவியின் நீண்ட கால விருப்பமாக இருந்தது. ஆனால் எனக்கு விருப்பம் இல்லாததால், என் மனைவியை எப்போது வேண்டுமானாலும்  தாராளமாக வாரணாசி சென்று வரலாம்   என்று கூறி விட்டேன்.  கார்ல் மார்க்ஸ் , அம்பேத்கர்  மற்றும் பெரியார் வழியில் பயணிக்கும் ஒருவனுக்கு காசிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்படப் போகிறது?. 

இருந்தாலும் , நானும் உடன்  வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால்,  அவள் காசிக்கு தனியாக செல்ல விரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்தன.  

இதற்கிடையில் சென்ற செப்டம்பர் மாதத்தில்  நான் ,  " தம்மா மதுராவில் " பத்து நாட்கள் "விபாஸன்னா  ( மதச்சார்பற்ற தியானம்)  " பயிற்சியில் கலந்து கொண்டு திரும்பினேன்  . உலகத்தின் முதல் பொருள்முதல்வாதியான கௌதமபுத்தர் இந்த விபாஸன்னா தியானத்தின் மூலமே அகஒளி ( ஞானயோதயம்) பெற்றார்  . அதனால் , புத்தகயா சென்று புத்தர் ஞானம் பெற்ற  இடத்தை பார்த்து  வரவேண்டும் என்ற அவா எனக்குள் எழுந்தது. மேலும்  , என் மனைவியின் சகோதரர் (மைத்துனர்)  சமீபத்தில் இறந்திருந்த காரணத்தால் , அவரின் துக்கத்தையும் மடைமாற்ற வேண்டிய அவசியமும் இருந்தது. 

இந்தச்  சூழலில் வாரணாசி , அயோத்தி மற்றும் புத்தகயா உள்ளிட்ட இடங்களுக்கான ஆறு நாட்கள் சுற்றுலா செல்லும் வாய்ப்பு “முருகன் பயண நிறுவனம்” மூலமாக வந்தது. அதனால் , என் மனைவியின் காசி பயணக் காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்தது.  

 

பத்து பேர் கொண்ட எங்களது குழு ( 4 ஆண்கள், 6 பெண்கள்) , 03/10/2023 ந்தேதி சென்னையிலிருந்து கிளம்பி , மாலை 02-30 மணிக்கு  வாரணாசி விமான நிலையத்தை அடைந்த பொழுது வெளியே இலேசான மழை பொழிந்து கொண்டிருந்தது. சூரியன் தனது ஒளிக்கதிர்களை பின் வாங்கியிருந்தான். சூழல் மிக இதமாக   இருந்தது.

 

எங்கள் குழு விமான நிலையத்திலிருந்து, வாரணாசியில் உள்ள " பல்லவி இண்டர்நேஷனல் " தங்கும் விடுதியை நோக்கி  கிளம்பியது  .

 

வாரணாசி , நமது பிரதமர் மோடி அவர்களின் பாராளுமன்றத் தொகுதி என்பதால், நகரம் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது.  ஆனால்  , குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எந்த வளர்ச்சியும் தெரியவில்லை. அழுக்கான வீதிகள் ,  குறுகலான சந்துகள் மற்றும் பழமையான வீடுகளை உள்ளடக்கியதாகவே  வாரணாசி இருந்தது.

 

அப்படியான ஒரு குறுகலான பகுதியில் , கங்கை ஆற்றின் கரையின்  அருகில் " பல்லவி இண்டர்நேஷனல் " தங்கும் விடுதி இருக்கிறது. வெளிப்புறப் பார்வைக்கு சுமாராகத் தோன்றினாலும் , உள்புற கட்டமைப்பு நன்றாகவே உள்ளது.

 

அடுத்த நான்கு நாட்களுக்கு நாங்கள் செல்ல இருக்கும்  பிரக்யராஜ் ( அலகாபாத்) திரிவேணி சங்கமம் , அயோத்தி ராமஜென்மபூமி , காசி கங்கா நதிப்பயணம் மற்றும் புத்தகயா ஆகிய இடங்கள் பற்றிய இனிய நினைவுகளுடன் ஓய்வெடுத்தோம்.

 

 

-2-

 

அடுத்த நாள்,  காலை உணவிற்குப் பிறகு எங்களது குழு பிரயாக்ராஜ்  என்று பெயர் மாற்றப்பட்ட அலகாபாத் நகரம் சென்று , அங்குள்ள  திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடி , ஜவஹர்லால் நேருவின் வீடான "ஆனந்த நிலையம் " பார்த்துவிட்டு , அப்படியே அயோத்தி சென்று தங்குவதாகத் திட்டம். 

 

திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள். அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் என்னுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. உண்மையில் அந்த இடத்தில் கங்கை நதியும்  மற்றும் யமுனா நதியும் மட்டுமே இணைகிறது.

 

சரசுவதி ஆறு என்பது ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் ஆறு. ரிக்  வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆற்றின் உண்மைத்தன்மை குறித்துப் பல வேறுபட்ட கருத்துகள் உள்ளன. மாக்ஸ் முல்லர் போன்றோர் இதை காகர்-ஹக்ரா நதி என்கின்றனர். சிலரோ தெற்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஹேல்மந் நதி என்கின்றனர். ஆனாலும் , இந்த சரஸ்வதி ஆறு இங்கே கலப்பதாக இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

 

இங்கே, சுற்றுலாப் பயணிகள் பலர் தங்களது மூதாதையர்களுக்கு ஈமச்சடங்குகளும் செய்கிறார்கள். அதற்கு ரூ. 1500 முதல் ரூ. 2000 /- வரை பார்ப்பன வேதிகர்கள் வசூல் செய்கிறார்கள்.  நம்மவர்களும் , இறந்து போன தமது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்கள் சொர்க்கத்தில் மனநிம்மதியுடன் வாழ வேத மந்திரங்கள் பயனளிப்பதாக நம்பி மகிழ்கிறார்கள்.

 

திரிவேணி சங்கமத்தில்  புனிதக்குளியல் செய்ய கரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். அந்த இடம் ஐம்பது அடி ஆழம் இருப்பதால் , சில படகுக்காரர்கள்,  படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை நதிகள் சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். ஆற்றின் அடியில் படகுகளுக்கு இடையில் பலகைகளை இணைத்து குளிப்பதற்கு ஏதுவாக தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஒரு நபருக்கு குறைந்தது ரூ.300 /-  கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  புனித நதியில் குளிக்கும் மகிழ்ச்சியில் மக்கள் பணத்தை வாரி வழங்குகிறார்கள்.

 

அந்த படகோட்டிகள் அனைவரும்  ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள்.  அவர்களுக்கு படகு முதலாளிகள் குறைந்த மாத ஊதியமே கொடுக்கிறார்கள். எங்களுக்கு  படகோட்டியாக வந்தவர்  35 வயது மதிப்புள்ள  ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவருடன் உரையாடிய போது அவர் BA ( SOCIALOGY ) வரை படித்திருக்கிறார். திரிவேணி சங்கம படித்துறையில் ,  அவருடைய முதலாளிக்கு 75 படகுகள் இருப்பதாக கூறினார். ஒரு நாளைக்கு மூன்று முறைகள் பயணிகளை புனிதக்குளியலுக்கு அழைத்துச் செல்வதாக கூறினார்  . ஒரு படகில் குறைந்தது பத்து நபர்கள் பயணிக்கலாம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ரூ. 9000 /-  ( அதிகபட்சம்) வசூல் செய்யலாம் . ஆனால், அவருக்குச்  சம்பளம் மாதம் ரூ. 7000 /-  மட்டுமே . இதைத் தான் மார்க்ஸ் " உழைப்புச் சுரண்டல்" என்று குறிப்பிடுகிறார்.

 

பின்னர்  , மதிய உணவிற்குப் பிறகு " ஆனந்த இல்லம் " இல்லம் செல்வதாக திட்டம். ஆனால், அருகில் இருந்த ஹனுமான் கோவில், மற்றும் " சக்திபீடம் " கோவிலுக்குச் சென்றதால் , மதியஉணவு தாமதாகிவிட்டது. அதனால் , " ஆனந்த இல்லம்" சென்ற போது மாலை 5 மணியாகிவிட்டது ( அனுமதி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 .30  வரை)  . ஆனந்த இல்லம் நுழைவு   மாலை 4.45  மணி வரை தான் உண்டு . அதனால் நாங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. எங்களுக்கு மட்டுமல்ல , வேறு சில தமிழ் குழுக்களுக்கும் இதே  கதி தான். அந்த இடம் முழுவதிலும்  தமிழில் புலம்பல்கள் அதிகம் கேட்டன.  

 

எனக்கு தான் கூடுதல் இழப்பு. என்னைப் பொறுத்தவரை பிரயாக்ராஜில் பார்க்கவேண்டிய இடங்களாக ஆனந்த இல்லம் மற்றும் ஆல்பர்ட் பூங்காவில் உள்ள மாவீரன் சந்திரசேகர ஆஜாத் சுடப்பட்ட இடம் ஆகியவை இருந்தது. ஆனால், நேரம் இல்லாதால் இந்த இடங்களை என்னால் பார்க்க இயலவில்லை .   எனக்கு கடுமையான வருத்தம் ஏற்பட்டது. இன்னொருமுறை பிரயாக்ராஜ் வர வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

 

அடுத்து, திரிவேணி சங்கமத்தில் இருந்த பிச்சைக்காரர்கள் கூட்டம்  பற்றி கட்டாயம் குறிப்பிட்டே ஆக  வேண்டும். படகுத்துறை முழுவதும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள்  மற்றும் குழந்தைகள்  அலைந்து திரிகிறார்கள். குறிப்பாக,   9 வயது முதல் 12 வயது  குழந்தைகள் பிச்சைக்காரர்களாக இருந்தார்கள்  . அவர்களுக்கு  உணவு, இருப்பிடம் மற்றும் கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அந்த இடமே சாட்சியாக  இருக்கிறது.  மறுபுறம் , உழைக்காமல் உண்ணும் மனம் படைத்த ஒரு கூட்டம் உருவாகியுள்ளது என்ற எண்ணமும் எழுந்தது. மேற்கு வங்கத்தில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வழியிலும் இத்தகைய பிச்சைக்காரர்கள் கூட்டம் நிரம்பி வழிவது  என் நினைவில் வந்து போனது. மனதில் பலவிதமான எண்ணங்களுடன் அயோத்தி நோக்கி பயணத்தைக் துவக்கினோம். இரவு பத்து மணிக்கு அயோத்தி அருகில் உள்ள பைசாபாத் நகரில் உள்ள  ஒரு விடுதியில் தங்கினோம். 

வாரணாசியிலிருந்து பிரயாக்ராஜ் தூரம் 169  கி.மீ. மற்றும்  பிரயாக்ராஜிலிருந்து அயோத்தி 203 கி.மீ. தூரமாகும். இங்கிருந்து அயோத்தி 7 கி.மீ தூரம் என்று தெரிந்தது. என்னதான் குளிரூட்டப்பட்ட கூண்டுந்துப் ( VAN)  பயணமாக  இருந்தாலும் களைப்பு மிகுதியாக இருந்தது.  

அடுத்தநாள் , அயோத்தி! இராமஜென்மபூமி பயணம்..!

 

 -3-

 

அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரமாக இருந்தது.  உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தில் , சரயு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 135 கி.மீ., தூரத்திலும் , புதுதில்லியிலிருந்து 605 கி.மீ. தூரத்திலும் மற்றும் பாட்னாவிலிருந்து 402 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

 

இங்கு தான் பாபர் மசூதி இருந்தது. இதுவே ராமஜென்மபூமி   என்றும் நம்பப்படுகிறது. அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அவ்விடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் பரப்பப்பட்டது. அதன் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் 06-12-1992 ந்தேதி தகர்த்தெறியப்பட்டது. இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதி , மக்களின் அமைதியை சீர்குலைத்த ஊர் அயோத்தி ஆகும்..

 

அயோத்தியில் நாங்கள் பார்க்கவேண்டிய இடங்களாக , கட்டப்படும் புதிய இராமர் கோவில்   , ஹனுமான் கோவில் மற்றும் சரயு நதி ஆகியவை இருந்தது. அயோத்திக்கு வெளியே எங்களது கூண்டுந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஆட்டோவில் தான் பயணம் செய்ய வேண்டும். அனைத்து இடங்களையும் பார்க்க  ஒரு நபருக்கு ரூ. 300 /- கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

அயோத்தி நகரச் சாலைகள் அனைத்தும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. நாங்கள் முதலில் , ராமர் கட்டுவதற்கான தூண்கள் , சிற்பங்கள்  தயார் செய்யப்படும் கட்டுமானப்பகுதிக்கு சென்றோம். எத்தனை பளிங்குத் தூண்கள் ! பிரமித்து போய் விட்டேன். அங்கே, தமிழ்நாடு சங்பரிவார் அமைப்பு கொடுத்த 630 கிலோ வெண்கலமணியும் இருந்தது. அந்த மணியில் ஒலியெழுப்பினால் 500 தூரம் வரை கேட்கும் ( சற்று மிகை தான்) என்று எங்களது வழிகாட்டி  தகவல் தந்தார்.  

 

அதையொட்டி ஹனுமான் கோவில் செல்லும் தெரு இருக்கிறது. அந்தத் தெருவில் தான் ஒரு லட்சத்திற்கும் மேலான  கரசேவகர்கள் பாபர் மசூதியை இடிக்கச் சென்றார்கள் என்பதை வழிகாட்டி உற்சாகத்துடன் தெரிவித்தார். அந்த திகிலான காட்சி என் மனக்கண்ணில் வந்து போனது. அங்கிருந்த ஹனுமானுக்கு   " பலசாலி ஹனுமான்" என்ற பெயர் இருப்பதாக அறிந்து கொண்டோம்.

 

ஹனுமான் கோவிலுக்கு எதிரில் " சீதா மாளிகை" இருக்கிறது.  இந்த இடத்தில் தான் இராமருக்கு பட்டாபிஷேகம்  நடந்ததாகவும் கூறினார்கள். இந்த மாளிகையில் தான் சீதா , இராமருக்கு சமையல் செய்து உணவு பரிமாறினார் என்று அங்கிருந்த வழிகாட்டி கூறினார். என்னுடன் வந்த நண்பர் ஒருவர், " அதெப்படி இராணியான சீதா சமையல் செய்திருப்பார்"? வேலைக்காரிகள் தானே  சமையல் செய்திருப்பார்கள்! என்று நறுக்கென  கேட்டுவிட்டார். அந்த வழிகாட்டியின் முகம் சிறுத்துவிட்டது. நான் , என் நண்பரிடம் இவ்வாறெல்லாம் இங்கு பேசக்கூடாது! இப்பகுதி மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பானது கவனம் தேவை என்று நாசுக்காக தெரிவித்தேன். அந்தப் பகுதி முழுவதும் " ஜெய் ஸ்ரீராம் " ஒலி பரவிக் கிடந்தது.

 

அடுத்து , இராமர் கோவில் கட்டப்படும் இடத்திற்குச் சென்றோம். வழிநெடுகிலும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மக்கள் சாரை சாரையாக சென்றார்கள். அங்கு தற்போது சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால் நடந்து செல்வது மிகவும் சிரமமாக  இருந்தது. இராமர் கோவில் பாதையில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சிரமம் இருப்பதில் ஆச்சரியமில்லை தான்.   இந்தப்பகுதி சீரடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தோன்றியது.

 

கோவில் கட்டுமானப்பகுதி நடைபெறும் இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்பு பாதுகாப்பு அரண் இணைக்கப்பட்டுள்ளது. கேமிரா, கைபேசி மற்றும் இதர மின்னணு கருவிகள் அனைத்தும் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை. இலவச காப்பகம் உள்ளது , அங்கே விட்டுச் செல்லவேண்டும்.

 

புதிய ராமர் கோவில்  பல்லாயிரக்கணக்கான சதுர அடியில்  மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் தளம் முடிவடைந்திருந்தது. கோவில் கட்டுமானப்பணிக்காக அந்தப்பகுதியில் இருந்த  பலவீடுகள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். பாபர் மசூதி அங்கே இருந்ததற்கான சுவடு துளியும் இல்லை. கோவில்பணி நிறைவடையும் போது, இந்த  "இராமர் கோவில்"  இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிகத்தலமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

 


அந்தப்பகுதி முழுவதும் நவீன துப்பாக்கிகளுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனுள்ளே ஒரு இடத்தில் பாலஇராமர் கோவில் உள்ளது; அதற்கு சிறப்பான பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது. கோவிலை விட்டு வெளியே வரும் பாதைகளின் இருபுறங்களிலும்  தங்கும் விடுதிகளும் , வர்த்தக பகுதிகளும் கட்டப்பட்டு வருகிறது. அவற்றின் அஸ்திவாரத்தைப் பார்த்து உண்மையில் நான் மலைத்துப் போனேன்.

 

பின்னர், அருகில் இருந்த இன்னொரு ஹனுமான் கோவிலுக்கு சென்றோம். அது 84  படிக்கட்டுகள் கொண்ட உயரமான கோவில் ஆகும். எங்கள் குழு சற்றுச் சிரமத்துடனே ஏறினார்கள். இங்கும் குழந்தை பிச்சைக்காரர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது, இராமர் கோவில் கட்டிமுடிந்ததும் அந்தப்பகுதி முழுவதும் பிச்சைக்காரர்கள் கூட்டம் அதிகரித்து விடும்  என்று தோன்றியது. அதனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

 

அதன்பிறகு , சரயு நதியைப் பார்க்கச் சென்றோம்.   அழகான நதி .  தண்ணீர் அமைதியாக  பாய்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே சில பந்தல்கள் போடப்பட்டிருந்தன. அங்கே சிலர் தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்கள். வானம் மப்பும் மந்தாரமாகவும் இருந்தது.  சலனமற்றுப் பாய்ந்த சரயு நதி என்னை இராமன் காலத்திற்கு இழுத்துச் சென்றது. இராமாயணக் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த நதியில் தான் இராமனும் அவனது சகோதரர்களும் நீந்தி விளையாடி இருப்பார்கள்!.




இந்த நதியில் தான், பார்ப்பன அரச குருக்களின் சதியால் தண்டனைக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்டு இலட்சுமணன் இறந்தான் என்றும் , பின்னர் துக்கம் தாளாமல் இராமன், பரதன் மற்றும் சத்துருக்கனன் ஆகியோர்களும் சரயு நதியில் மூழ்கி இறந்தார்கள் என்று நான் வாசித்த வரலாற்றுக் குறிப்புகள் என் நினைவிற்கு வந்தது. சரயு நதி, இராமனுக்கு முன்பும், அவர் காலத்திலும் பாய்ந்தது போலவே,  இன்று நம்  காலத்திலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை அற்புதமான ஆற்றலைக் கொண்டது.

 

அப்போது, பலமாக மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையும் , காற்றும் மகிழ்வைத் தந்தது. அந்த இனிய நினைவுகளுடன் நாங்கள் வாரணாசி திரும்பினோம்.


 

-4-

 

மூன்றாம் நாள் நிகழ்வுகளாக,  கங்கை நதி நீராடல் , படகு சவாரி , காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி ஆலயம் , காசி விசாலாட்சி கோவில் , கங்கை நதி பூஜை  மற்றும் வணிகம் போன்றவைகள் இருந்தன.

 

உடன் வந்த ஆன்மீக செம்மல்கள்,  காலை ஆறு மணிக்கு எழுந்து,  கங்கையில் நீராடச்  சென்றார்கள். நானும் உடன் சென்றேன். காசியின் தெருக்கள் மிக குறுகலாக இருந்தது. தெருவெங்கும் பெருந்திரளான கூட்டம். அந்த கூட்டத்தில் ஏழைகள் , பணக்காரர்கள் , வர்த்தகர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் என்று அனைவரும் கலந்து இருந்தார்கள். கங்கையில் நீராடுவதற்காக ஏறத்தாழ 24 படித்துறைகள் இருப்பதாக எங்களது வழிகாட்டி தெரிவித்தார். அவற்றில் சில படித்துறைகள் மிகவும் குறுகலானவை.

 

அந்த காலை வேளையிலேயே வியாபாரம் ஆரம்பித்துவிட்டது. யாத்திரிகர்கள் பல்துலக்க வேப்பங்குச்சிகள் வழிநெடுகிலும் கிடைத்தன. அதை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. ஆனால், கோமியம்  மற்றும் மாட்டுச்சாணம் விற்கப்படாதது  ஆச்சரியமாக இருந்தது.

 

கங்கை நதியில் தண்ணீர் தாராளமாக பாய்ந்து கொண்டிருந்தது. தண்ணீரே இல்லாத தமிழ்நாட்டு நதிகளை பார்த்து வெறுத்துப்போன நம் கண்களுக்கு வற்றாத கங்கைநதிக் காட்சி  இதமாக இருந்தது. படித்துறை அருகில் கங்கை நீர் சேறாக இருந்தது , இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் நீராடினார்கள்.

 





நாங்கள் முதலில் படகு சவாரியை முடித்து விட்டு கங்கையில் நீராடலாம் என்று திட்டமிட்டிருந்தோம். முருகன் பயண நிறுவனத்திற்கு சொந்தமான படகு ஒன்று அங்கு இருப்பது எங்களுக்கு வசதியாக இருந்தது. நபர் ஒன்றுக்கு  ரூ.300 /- கொடுத்தோம். கங்கை நதிக்கரையில் இருந்த அனைத்து படித்துறைகளையும் காட்டினார்கள். எல்லா இடங்களிலும் மக்கள் புனித நீராடிக் கொண்டிருந்தார்கள்.

 

அரிச்சந்திரன் படித்துறையில் இரண்டு பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அரசனாக இருந்தாலும் , கடனை அடைக்க வெட்டியான் போல்  சுடுகாட்டில் பிணம் எரித்ததால் , அரிச்சந்திரனை வெட்டியனாக  கருதி அந்தப்பெயர் சூட்டிவிட்டார்கள் என்று கருதுகிறேன்.   இன்னொரு படித்துறையில் 24  மணி நேரமும் பிணங்கள் எரிக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. அந்தப்பகுதியில் உள்ள சுவர்களில் கருமைநிறம் படிந்திருந்தது. காய்ந்த விறகுகள் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களை எரிப்பதற்கு எந்தச் சிரமம் இருக்காது போல் தோன்றியது. இப்போதெல்லாம் காசி மக்கள் பிணங்களை கங்கை ஆற்றில் வீசுவதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


 

நாங்களும்  லலிதா படித்துறையில் நீராடினோம். ஏராளமான மக்கள் தங்களது  பாவங்களை கங்கை நதியில் கரைத்து புனிதமானார்கள் . அங்கே எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின்னர் தங்கும் விடுதிக்கு ஆட்டோவில் திரும்பினோம்.. நீராடப்  போகும் போதும், திரும்பும் போதும் நபர் ஒன்றுக்கு ரூ. 20 /- கொடுத்தோம். அது மிக சரியான தொகையாகவே தெரிந்தது.

 

காலை உணவிற்குப் பிறகு காசியில் உள்ள ஹனுமான் , இராமர் மற்றும் சக்தி கோவில்களுக்கு செல்லவும், மதிய உணவிற்குப் பிறகு  மாலை நான்கு மணிக்கு  மேல் அன்னபூரணி, காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி ஆலயங்களுக்கும் செல்லலாம்  என்றும் திட்டம் வகுத்துக் கொண்டோம்.

 

ஹனுமான் , இராமர் மற்றும் சக்தி கோவில்களுக்கு செல்ல ஆட்டோவில் நபர் ஒன்றுக்கு ரூ.200 /- கொடுத்தோம். எல்லா கோவில்களிலும் கைபேசி உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் குழுவினர்  எந்தக் கோவிலையும் விட்டுவைக்கவில்லை. அவர்களுக்கு பக்தியில் கால் வலி தெரியவில்லை; எனக்கு கால்களில் கடுமையான வலி வந்துவிட்டது (உடல் நலம் குன்றியவர்கள் இந்தக் கோவில்களை தவிர்க்கலாம் ).

 

எங்களுக்கு மதிய உணவு , அன்னபூரணி ஆலயத்தின் சார்பில் நடத்தப்படும் சத்திரத்தில் இலவசமாக கிடைத்தது. நிறைவான உணவு. பின்னர், வீட்டிற்குத் தேவையான மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்க நேரம் கிடைத்தது. என் குழுவினர் அவரவர் விருப்பத்திற்கு இணங்க பொருள்களை வாங்கிக் குவித்துக் கொண்டார்கள்.

 

மாலை நான்கு மணிக்கு, காசி   விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வரிசையில் நின்றோம். இக்கோவில் பற்றி நான் வாசித்த சில வரலாற்றுக் குறிப்புகள் என் நினைவிற்கு வந்தது.

 

“ காசி விசுவநாதர் கோயில் என்பது சிவபெருமானின் கோயிலாகும். விசுவநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆணையால் முன்பிருந்த காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. இடித்த இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டது. பின்னர் பள்ளிவாசலின் மேற்கு சுவரை ஒட்டிய பகுதியில் புதிய காசி விஸ்வநாதர் கோயிலை மராட்டியப் பேரரசின் இந்தூர் பகுதி இராணி அகில்யாபாய் ஓல்கர்,1780-ஆம் ஆண்டில் கட்டி எழுப்பினார்.  இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவன் லிங்க வடிவத்தில் இருக்கிறார்”. 

 

இந்த நினைவுகளிலிருந்து நான் விடுபட்டபோது, பெருந்திரளான மக்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. அந்த கூட்டத்தில் தமிழர்கள் 20 சதவீதம் பேர் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. எங்கும் தமிழ் குரல் தான்.

 

காசி விஸ்வநாதர் லிங்க வடிவில் இருக்கும் மூலப்பகுதிக்குச் செல்லும் நான்கு திசைகளில் மூன்றின் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு புறத்தில் வெளியே செல்வதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எங்கும் மக்கள் கூட்டம் ; மற்றும் நெருக்கடி .  எல்லாப் பகுதிகளில் இருந்தும்  " ஹர ஹர மஹாதேவ் " ஒலி பரவிக் கொண்டேயிருந்தது. 

 

காசி விஸ்வநாதர் இருந்த மூலப் பகுதிக்குள் நுழைவதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது . ஒரு தாய் , காசி விஸ்வநாதருக்கு செலுத்த வேண்டிய பாலை என் தலையில் கொட்டி அபிஷேகம் செய்தார். பலர் , லிங்க வடிவில் இருந்த காசி விஸ்வநாதரை தொட்டு மகிழ்ந்தார்கள். சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு முப்பது வினாடிக்குள் " காசி விஸ்வநாதர்" தரிசனம் முடிந்தது. என் மனைவியின் முகத்தில் திருப்தி தெரிந்தது. அவரது விருப்பத்தை நிறைவேற்றிய நிம்மதி எனக்கும் கிடைத்தது.

 


பின்னர் அருகில் இருந்த அன்னபூரணி ஆலையத்திற்குச் சென்றோம். அங்கே கூட்டம் அதிகம் இல்லை. என் குழுவினர் , சிறப்பு தரிசனத்திற்கு கட்டணமாக ரூ. 100 /- கொடுத்து அன்னபூரணியின்  அருகில் சென்று தரிசனம் செய்தார்கள் . அன்னபூரணியின் முன்பு ஒரு பாத்திரத்தில் பணம் குவியலாகக் கிடந்தது.  அங்கிருந்த கோவில் பூசாரிகளில் ஒருவர் அப்பணத்தை எண்ணி அடுக்கிக் கொண்டிருந்தார்.

 

மாலை ஏழு மணிக்கு கங்கை நதிக்கு பூஜை நடைபெற்றது. அதற்கு அமர்வு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 200 /- கொடுத்தோம். இதில்   ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு , காசியின் குறுகலான பல தெருக்களின் வழியே நடந்து சென்று "விசாலாட்சி"  கோவிலுக்குச் சென்றோம்.  காசி விசாலாட்சி எங்கள் குழுவினருக்கு உடனே தரிசனம் தந்தார். இரவு ஒன்பது மணிக்கு , களைப்புடன் எங்கள் விடுதிக்கு திரும்பினோம். திரும்பும் வழியில் காசியின் தெருக்களில் , பல மண்டபங்களில் , பல யாத்திரிகர்கள் தங்களிடையே மூதாதையர்களுக்கு படையல் செய்து கொண்டு இருந்தார்கள்.  காசி இன்னும் பழமையின் சின்னமாகவே இருக்கிறது.

 

அடுத்த நாள் ,  நாங்கள் புத்தகயா  செல்ல இருப்பதால் அந்த நினைவே எனக்கு புத்துணர்ச்சியைத்  தந்தது.

  

-5-

 

எங்கள் குழு , வாரணாசியிலிருந்து அதிகாலை 04.30  மணிக்கு கூண்டுந்து வாகனத்தில் புத்தகயா நோக்கி பயணத்தை துவங்கியது.  

 

 புத்தகயா அல்லது புத்தகயை அல்லது போத்கயா , பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கயாவிலிருந்து 10  கி.மீ தூரத்திலும் , வாரணாசியிலிருந்து 248  கி.மீ தொலைவிலும் ,  பீகார் மாநிலத்தின், தலைநகர்  பாட்னாவிலிருந்து 96 கிமீ    தொலைவிலும் அமைந்துள்ளது. கௌதம புத்தர் இங்கிருந்த அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத்தளமாகத் திகழ்கிறது.  இது இப்போது மகாபோதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நகரங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் குசிநகர், லும்பினி, சாரநாத், கபிலவஸ்து, சாரநாத் மற்றும் சாஞ்சி ஆகும்.

 

எங்கள் குழு காலை 12 மணியளவில்  கயா சென்றடைந்தது. புத்தகயா செல்லும் முன்பு கயாவிலுள்ள பல்கு அல்லது பல்குனி ( FALGU) ஆற்றின் கரையில் தங்கள் மூதாதையர்களுக்கு ஈமக்கிரிகைகள் செய்ய எங்கள் குழுவினர் விரும்பினார்கள்.  நாங்கள் அங்கே சென்ற போது  கிட்டத்தட்ட 50000  முதல்  75000   பேர்கள் கூடியிருந்தார்கள். நான் மலைத்துப் போய்விட்டேன். எங்கள் குழுவினர் ஈமக்கிரிகைகள்  செய்து முடிக்க மாலை 03.30  மணியாகிவிட்டது. அதன்பிறகு , இராமர் பாதம் கோவில் சென்றார்கள். அதனால் மாலை 05.00 மணியாகிவிட்டது.

 




ஆன்மா இல்லையென்று  மறுத்த புத்தரின் பூமியில் , இறந்தவர்களின் ஆன்மாவை குளிர்விக்க பூஜைகள் செய்வது , அவரது கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் செயலாகும் என்பதோடு மட்டுமல்லாமல் , புத்தரின் தத்துவத்தை ஏறி மிதித்து செல்வதாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.   கயாவில்  பகுத்தறிவிற்கு வேலை இல்லை!   

 

பின்னர் நாங்கள் புத்தகயா கிளம்பினோம். புத்தரின் கொள்கைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவன் என்பதால்  புத்தகயா பயணம் எனக்கு மனநிறைவைத் தந்தது.  மாலை 06.00 மணிக்கு புத்தகயா சென்றடைந்தோம். இங்கும் அதிக கூட்டம் இருந்தது. ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகம் இருந்தது. வழக்கம் போல் இங்கும் கைபேசி போன்ற மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கடுமையான பாதுகாப்பும் இருந்தது. எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த புத்தரையும் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.  

 


புத்தர் கோவில் , தரைதளத்திலிருந்து 10 அடிக்கு  கீழே அமைந்திருந்தது. வாயிலில் நுழையும் போதே புத்தரின் சிலை பிரகாசமாகத் தெரிகிறது. மனம் சாந்தமடைகிறது; கூடவே மனநிறைவும் கிடைக்கிறது. இந்தியாவில் பார்ப்பனியத்தை  வீழ்த்தி , புத்தமதத்தை உருவாக்கி கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் , ( அதாவது கி.மு 525 முதல் கி.பி 450 வரை )  மக்களுக்கு விடுதலை தந்த அம்மாமனிதன் மீது எனக்கு மிகுந்த மரியாதை எழுந்தது. அவரின் உருவச் சிலைக்கு முன்பு தலைவணங்கி மரியாதை செய்தேன். மனம் நிறைவாக இருந்தது. அமைதியான மனதோடு புத்தரின் கோவில் பகுதியை விட்டு வெளியேறினேன்.

 





இந்த அருமையான சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த என் மனைவிக்கு நன்றி தெரிவித்தேன். அவரும், காசிக்கு அழைத்து வந்ததற்கு எனக்கு நன்றி தெரிவித்தார்.

 


மாலை 7 .30  மணிக்கு நாங்கள் புத்தகயாவிலிருந்து கிளம்பி , அதிகாலை இரண்டு மணிக்கு வாரணாசி வந்து சேர்ந்தோம். 

 

 

-6-

 

அடுத்தநாள் 08/10/2023 ந்தேதி  மாலை 02 -55 மணிக்கு நாங்கள் விமானம் மூலம்  சென்னை திரும்ப வேண்டும்.   உண்மையில் இந்தப் பயணம் எனக்கு புதிய அனுபவங்களைத் தந்தது. கூடவே கீழ்காணும் எண்ணங்களும் எழுந்தது;

 

Ø  இந்திய மக்களை ஆன்மீகப் பாதையிலிருந்து மீட்டெடுப்பது மிகவும் சிரமம்.

Ø  இந்து மதம் சடங்கு , சம்பிரதாயங்கள் மூலம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

Ø  மக்கள் மனதில் கடவுள் நம்பிக்கையை புகுத்தி , மக்களை  அரசே சுரண்டி வருகிறது.

Ø  குறிப்பாக , உத்தரப்பிரதேச மாநிலம் மூட நம்பிக்கைகளின் கூடாரமாக இருக்கிறது. அந்த மக்களை  சிந்திக்க வைக்க இன்னும் பல பத்து ஆண்டுகள்  ஆகலாம்.

Ø  உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்துக்களைத் தவிர பிற மதத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Ø  உ.பி, இந்தியாவிற்குள் " இந்து நாடாக" காட்சி தருகிறது.

Ø  இந்த நிலை  நீடித்தால் , இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லாது; வீழ்ச்சியில் அடியெடுத்து வைக்கும்.

 

மேற்கண்ட நினைவுகளுடன் நான் வாரணாசி விமானநிலையம் வந்து சேர்ந்தேன். என்னுடன் இந்த பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் மிகவும் அன்புடனும் , நட்புடனும் பழகினார்கள். எந்த முரண்களும் இல்லை; நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள்.  உண்மையில் எனக்கு புதிய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இந்த இனிய அனுபவங்களோடு என்னைச் சுமந்து கொண்டு  விமானம் சென்னைக்குத் திரும்பியது.

 

சு,கருப்பையா

மதுரை.

+919486102431