Monday, 19 June 2017

சமூகத்திற்கு உரமாகும் உயர்ந்த மனிதர்கள்-2



இரா .சண்முகவேல்
ஜீவா படிப்பகம்- கீழக்கலங்கல்


தூய ஹோமியோபதி பிரச்சாரச்சங்கம்  , சங்கரன்கோவில் கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவரான மரு.முருகையா , தனது " வாதநோயும் ஹோமியோபதியும்"  என்ற நூலை 14/06/2017 ந் தேதியன்று  வெளியிடுமாறு அன்புடன் என்னை அழைத்திருந்தார். அந்த நூலைப் பெற்றுக்கொள்பவர் தான் இந்தத் தோழர் இரா.சண்முகவேல்.

மரு.முருகையா அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் புறநகர்ப்பகுதியான கிருஷ்னாபுரத்தில் தான் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த சிறிய இல்லத்தில் பலன் தரும் பல  நல்ல மரங்களை நட்டு இயற்கையழகுடன் மரு.முருகையா வாழ்ந்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அத்தகைய வீடு ஒன்று கட்டவேண்டும்  என்பது எனது மனதிற்குள் இன்றும் கனவாக இருக்கிறது.


தூய ஹோமியோபதி பிரச்சாரச்சங்கத்தின் பிரதிநிதிகள், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மற்றும் மலர்மருத்துவம் சார்ந்த மருத்துவர்களும் , அவரது ஆசிரியர் திரு . தர்மராஜ் உள்ளிட்ட மற்றும் பல நண்பர்களும் கலந்து கொண்டார்கள். முதல் நிகழ்வாக புத்தகத்தை வெளியிட்டவுடன்  நான் உரையாற்ற வேண்டும். புத்தகத்தின் முதல் பிரதியை தோழர்.இரா .சண்முகவேல் அவர்களிடம் கொடுத்தபோது தான் அவரை  முதன் முதலாக கவனித்தேன். மிகவும் எளிமையாக இருந்தார். சிவப்புச்சட்டை, இடுப்பில் பழுப்புநிறத்தில் வெள்ளை வேட்டி. அவரது உழைப்பின் வியர்வை அதில் படிந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. காலில் செருப்பு இல்லை. இது உண்மையான இடதுசாரித் தோழருக்குரிய அடையாளம் என்பதை புரிந்து கொண்டேன்.

எனது உரையை முடித்துவிட்டுமரு. முருகையா அவர்களுக்கு " பெரியார்- அன்றும்  என்றும் " என்ற விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூலை கொடுத்துவிட்டு அமர்ந்தேன். அடுத்து அனைவரும் முருகையாவின் மருத்துவப்பணியையும் எழுத்துப்பணியையையும் பாராட்டி மகிழ்ந்தார்கள். ஆனால் தோழர்.சண்முகவேல் நிகழ்ச்சியில் பேசுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவரிடம் கேட்டபொழுது மேடைகளிலோ இத்தகைய நிகழ்ச்சிகளிலோ பேசி பழக்கமில்லை என்று அமைதியாக மறுத்துவிட்டார்.  ஆனால் நீங்கள் முருகையாவிற்கு பரிசளித்த புத்தகம் மிகவும் அருமையானது; பொருத்தமானதும் கூட என்று தமது மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அடுத்து ஐயா , நீங்கள் இடது சரியா ? அல்லது தி.க வா? என்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார். ஐயா, நான் இடதுசாரிக் கொள்கைகளை கருத்திலும் , தந்தைப் பெரியாரை தோளிலும் சுமப்பவன் என்றேன். அவர் இதை மிகவும் ரசித்ததோடு மகிழ்ச்சியுமடைந்தார்.  அத்துடன் இவ்வளவு பெரிய புத்தகத்தை நீங்கள்  மதுரையிலிருந்து சுமந்து வந்திருக்கும் போதே உங்களை பற்றி ஓரளவு புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.


பின்பு அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது , அவர் கீழக்கலங்களில் (சங்கரன்கோவில்) "ஜீவா படிப்பகம் " நடத்தி வருவதும் , லெட்சுமி வடிவு புத்தக நிலையம் வைத்திருப்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அவர்,  அப்பழுக்கற்ற இடதுசாரி சிந்தனையாளர் ஜீவா அவர்களின் தீவிரத் தொண்டர்  என்பதையும், அவரது பிறந்தநாளை  ஆண்டுதோறும்  சங்கரன்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடுவதையும் தெரிந்து கொண்டேன். அந்த விழாவில் குழந்தைகளுக்கு புத்தகங்களையும் , நகரில் சாதனை புரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவதும் அவருக்கு பிடித்தமானது என்று மரு.முருகையா தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாமல், இந்தப் " பெரியார்- அன்றும்  என்றும் " என்ற புத்தகத்தின் நூறு பிரதிகளை  அவர் சங்கரன்கோவில் பகுதியில் விற்று இருப்பதும் தெரிய வந்தது. அதனால் அவரின் மேல் எனக்கு இருந்த மரியாதை மிகவும் அதிகரித்தது . அவரை பற்றி மேலும்  தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு, ஐயா , தயவு செய்து நீங்கள் இரண்டு நிமிடங்களாவது மருத்துவம் பற்றியோ அல்லது உங்களுக்கு பிடித்தமான செய்திகள் பற்றியோ பேசவேண்டும் என்று உற்சாகப்படுத்தினேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 

அவர் தமது உரையை ஒரு பாடலிலிருந்து துவங்குகிறேன் என்று ஆரம்பித்தார். அப்பாடல் இதோ;

சொர்க்கம் ஒரு சுகமா ! சுமையா !
சுற்றம் ஒரு நிழலா! நெருப்பா!
உறவு நம் சிறகா! பகையா!
உற்றார் இங்கு வரவா! பயமா!

உறவைப்பிரிஞ்சு காட்டு யானை
மதம் பிடித்து அலையுது
உறவிலே தான் மனித வாழ்க்கை
கருப்பட்டியாய் இனிக்காது.

ஆயி மகமாயி
ஒரு நியாயம் சொல்லவாடி
தாயி பிள்ளை சேலை உறவு
ஒரு நேரம் வருமாடி

                          (சொர்க்கம்….)

குருவிக்கும் உறவு
இங்கு துறவிக்கும் உறவு
குடும்பம் என்பதே
வாழ்க்கை அழகு
பகைவன் இடத்திலும்
பண்பு கொண்டாடும்
பண்பு மிகுந்தாலே
வாழ்க்கை அழகு

அடுக்குப்பானை போல உறவு
ஒண்ணை ஒண்ணை தாங்கணும்
எடுத்தெறிந்து பேசினாலும்
உறவு இங்கு மாறிடும்
                       (ஆயி.. மகமாயி)

காய்ந்திடும் நிலவு
இங்கு சாய்ந்திடும் பொழுது
இரவும் பகலுமே இயற்கை உறவு

ஐந்து விரல்களும்
ஐந்து விதங்கள் தான்
உரிமை கொள்ளுமே உழைத்திடும் பொழுது
உடைந்து போன தங்கத்தை
சூடு வைத்து ஓட்டலாம்
கிழிந்து போன சேலை கூட
அன்பை வைத்துக் கட்டலாம்


ஆயி மகமாயி
ஒரு நியாயம் சொல்லவாடி
தாயி பிள்ளை சேலை உறவு
ஒரு நேரம் வருமாடி

சொர்க்கம் ஒரு சுகமா ! சுமையா !
சுற்றம் ஒரு நிழலா! நெருப்பா!
உறவு நம் சிறகா! பகையா!
உற்றார் இங்கு வரவா! பயமா

               -கவிஞர் பரிநாமன்*

(*கவிஞர் பரிநாமனின் இப்பாடலில் தவறு இருந்தால் மன்னிக்கவும். சரியான வரிகளைத் தெரிவிக்கவும் )

அழகான இந்த பாடல் , பற்களற்ற அந்த 76 வயது இளைஞனின் வாயிலிருந்து இனிமையான ராகத்தோடு வெளிவந்த பொழுது , அரங்கு அமைதியுடன் உள்வாங்கிக் கொண்டது. சிறிதும் குழப்பமின்றி, நினைவு தடுமாற்றமின்றி  மிக அழகாகப் பாடினார் தோழர்.சண்முகவேல். இடதுசாரி கவிஞன் பரிநாமனின் இப்பாடலைப் பற்றிய விபரங்கள் எனக்கு தெரிந்திருக்கவில்லை. .  அதனால் நான் கேட்டு கொண்டதற்கிணங்க சதா அவரது மனதில் தாளமிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாடலை  நினைவுகளிலிருந்து எழுதிக் கொடுத்தார். அவரது நினைவாற்றல் எனக்கு வியப்பைத் தந்தது.

அவரது உரையின் போது தான் ஒரு சாதாரணமான மனிதன் என்றும் அதிகம் படித்தவனில்லை , மருத்துவமும்  தெரியாது, ஏன்! கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவமனைக்கும்  சென்றதில்லை. என்னை இந்த புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நண்பர் முருகையா கேட்ட பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். இங்கு வந்த பிறகு தான் அவரைப் பற்றி அதிகமாகவும், ஹோமியோபதியின் மகத்துவத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் தோழர்.சண்முகவேல். அத்தோடு தான் இந்த 76 வயதிலும் தினமும் 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவதால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை பக்கம் செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் நகைசுவையாக குறிப்பிட்டார்.


அவரது போலித்தன்மையற்ற எளிமையான வாழ்வு என்னை மிகவும் கவர்ந்தது. நான் சந்தித்த அரிய இடதுசாரித் தோழர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.  அவரிடம் மேலும் பேசிக்கொண்டிருந்த பொழுது மக்கள் நன்மைக்காக இந்த இரண்டு இடது சாரி இயக்கங்களும் ஒன்று சேரவேண்டும்  என்பதையும்,  அதற்கு இதுவே சரியான தருணம்  என்ற தமது கணிப்பையும் வெளிப்படுத்தினார். ஆனால்  மார்க்ஸ் , ஏங்கல்ஸ் மற்றும் லெனின் கற்பித்த அல்லது கடைபிடித்த கம்யூனிசப் பாதையிலிருந்து விலகி,  சமரசத்துடன் செயல்படும் ஓட்டெடுப்பு அரசியலுக்குள் வெகுதூரம் பயணித்துவிட்ட அந்த இயக்கங்கள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள்  சமீபத்தில் இல்லை என்பதை தோழர்.இரா.சண்முகவேல் அவர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆண்டுகள் பல ஆகலாம். அதுவரை, அவர் நம்பிக்கையுடன் அவரது பாதையில் பயணிக்கட்டும்.


புத்தக வெளியீட்டு விழா முடிந்து நான் வீடு திரும்பும் போது ஒரு அப்பழுக்கற்ற இடதுசாரி தோழனை பார்த்துவிட்ட திருப்தி எனக்கு இருந்தது. இவர்களை போன்றவர்களே சமூகத்திற்கு உரமாக இருக்கிறார்கள். இந்தியாவில் , கோவில்கள் இருக்கும் வரை எப்படி இந்துக்கள் இருப்பார்களோ அது போல் தோழர்.சண்முகவேல் போன்றவர்கள் இருக்கும் வரை இடதுசாரி இயக்கங்களும் இருக்கும்.

சு.கருப்பையா

Mob: +919486102431

Sunday, 18 June 2017

சமூகத்திற்கு உரமாகும் உயர்ந்த மனிதர்கள்

சமூகத்திற்கு உரமாகும் உயர்ந்த மனிதர்கள்



சடகோபன்

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு (2007 இல் ) மதுரை நாராயணபுரம் பகுதியில் "புத்தகத்தூதன்" என்ற பெயரில் சிறிய புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்தவர் தான்  இந்த சடகோபன். எனது நண்பர் ஒருவரின் பணி ஓய்விற்கு பரிசளிக்க ஒரு புத்தகம் வாங்க தேடிப்பிடித்து அந்தக்கடைக்கு சென்றேன். அது ஒரு சிறியகடை என்பதால் அதிக புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் உங்களுக்கு பிடித்த நூல்களை என்னால் வாங்கித் தர முடியும் என்று புன்னகையோடு கூறினார். இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்தது.கூடவே அவர் எனது நண்பர் வா.நேருவின்  நெருங்கிய நண்பர் என்பதும்  தெரிய வந்தது. பெரியாரையும் , அவரது கருத்துக்களையும் உயிராக நேசிக்கும் மனிதர். இப்படிதான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

இன்று எனது இல்லத்தில் தரமான ஒரு நூலகம் இருக்கிறதென்றால் அதற்கு நண்பர் சடகோபன் தான் காரணம். அவரின் இனிய குணம்,  நேர்மையான வியாபாரம் ,தந்தைப் பெரியாரின் கொள்கைகளின் மீது ஆழ்ந்தபற்று போன்ற காரணங்கள் எங்களின் நட்பை ஆழப்படுத்தியத்தில் ஆச்சரியமில்லைதான். ஆனாலும் புத்தக விற்பனையின் மூலம் மட்டுமே ஒருவர் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது மிகச்  சிரமமான காரியம். முதலீட்டுத் தகுந்த இலாபம் கிடைப்பதில்லை.  அதிலும் தான் விற்பனை செய்யும் எல்லாப் புத்தகங்களுக்கும், நண்பர் சடகோபன் 10% கழிவு தருவதில் தயக்கம் காட்டியதில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த புத்தகக்கடை என்பது ஒரு " தொண்டு" அல்லது ஒரு " கடமை " என்றே மகிழ்ந்து வந்தார். தகவலின் பேரில் பலரின் வீடுகளுக்குச் சென்று கூட புத்தகங்களை கொடுத்து வந்துள்ளார். பல மத்திய , மாநில அரசுக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளைத் தேடித்பிடித்து அங்கு புத்தக அரங்கு போட்டுள்ளார்.

ஆனாலும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் நாராயணபுரத்தில் இருந்து நத்தம் ரோடு மற்றும் ஆத்திகுளம் பகுதிகளுக்கு தமது கடையை மாற்றிக் கொண்டே இருந்தார். போதுமான வருமானம் இல்லாததால் அவரின் சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மனம் முழுக்க புத்தகங்களும் ,சேவையுமே நிறைந்திருந்ததால் அவரால் வேறு பணியிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட இயவில்லை. ஒரு நாள் அவரது புத்தககடைக்குச் சென்றபொழுது கடை பூட்டப்பட்டிருந்து . என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனம் மிகவும் வலித்தது. அவருடன் கைபேசியில் தொடர்பு கொண்டபொழுது திருச்சியில் உள்ள  ஒரு புத்தக்கடையில் தற்காலிகமாக  பணியில் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் புத்தகங்களை விட்டு தன்னால் விலகி இருக்க முடியாது என்றும் வேறொரு திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று

அவரின் தணியாத தாக்கத்தினாலும்  விடாமுயற்சியினாலும்   ஒரு சிறிய ரக கூண்டு வண்டியை வாங்கி அதில் " நகர்வு புத்தகச் சந்தையை " அமைத்துவிட்டார்.  இந்த நகர்வுச் சந்தையை கடந்த 28/08/2015 ந் தேதி திரு கு. சாமித்துரை,வழக்கறிஞர் மற்றும் தலைவர்,(MMVA) தமிழ் இலக்கிய மன்றம் மதுரை துவக்கி வைத்தார். இன்று புத்தகதூதனின்  நகர்வு புத்தகச் சந்தைமக்கள் கூடும் பகுதிகளிலெல்லாம் காத்திருக்கிறது.



இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் வா.நேரு நல்ல புத்தகங்களை விற்று அதில் தான் வாழ்க்கை நடத்துவேன்  என வாழ்பவர் சடகோபன் என்றும் கையைச் சுட்டுக் கொண்டாலும் மீண்டும் புத்தக விற்பனையை வேறு வகையில் யோசிப்பவர் என்றும் தெரிவித்தார். தோழர்.சங்கையா , "அறிவு வீடு தேடி வருகிறது" என்று மகிழ்ச்சியை தெரிவித்தார் .

ஒவ்வொரு வீட்டிலும் தரமான 100 புத்தகங்களாவது  இருக்க வேண்டும் என்பதே சடகோபனின் கனவு.  இந்தக் கனவுகளுடன் மதுரையின் வீதிகளை சளைக்காமல் சுற்றி வருகிறார் புத்தகத்தூதன் சடகோபன் (அவரின் கைபேசி : 94433 62300). சமூகத்தை நேசிக்கும் இவரைப் போன்றவர்கள் கட்டாயமாக  வெற்றி பெறவேண்டும்.