Saturday, 12 August 2017

நானும் ஹோமியோபதியும்

நானும்  ஹோமியோபதியும் 

I

இன்று மருத்துவ உலகம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மக்களை பல்வேறு உயிர்கொல்லி  நோயிலிருந்து பாதுகாக்க  அலோபதி மருத்துவம், ஹோமியோபதி , சித்தா, ஆயுர்வேதம் ,யுனானி , அக்குப்பஞ்சர் மற்றும் அக்குப்பிரசர் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் அதனதன் போக்கில் செயல்படுகிறது. இருந்தாலும் மனிதர்களுக்கு மரணம் என்பது சாசுவதமானது!. உலகில் உருவான எல்லா உயிரினங்களும் ஒரு நாள் அழியக் கூடியதே!. ஆனாலும் மக்கள் மரணத்தைக் வென்று நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும்,  ஒவ்வொரு மனிதனும் அவனது மனதையும் , உடலையும்  பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வது என்பது இன்றைய சூழ்நிலையில் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அவ்வாறு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனம் மற்றும் உடல் சார்ந்த மருத்துவ அறிவும் , விழிப்புணர்வும் அவசியம் தேவை என்று கருதுகிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி என்ற சிறிய நகரத்தில்  மத்திய அரசு அலுவலகத்தில் நான் பணியில் இருந்தேன். கனிந்த இதயம் படைத்தவர்களையும், கடும் உழைப்பாளிகளையும் , கரடு முரடான மனிதர்களையும் தன்னகத்தே கொண்ட ஊர் அதுபிரம்மச்சரிய  வாழ்க்கை என்பதால் ஹோட்டல் சாப்பாடு தான் . அதனால் வயிறு பாடாய் படுத்தியது. நல்ல உடற்பயிற்சி செய்த உடம்பு என்பதால்  மருத்துவமனைக்கு சென்ற அனுபவமெல்லாம் அதுவரை இல்லை. இருந்தாலும் தொடர்ச்சியான அசைவ உணவும் , இரவுப்பணியின் காரணமாக தூக்கமின்மையும் எனது வயிற்றைக் கெடுத்துவிட்டது. ஒரு நண்பரின் பரிந்துரையின்படி உசிலம்பட்டி பேரூந்து நிலையத்தின் அருகில் இருந்த அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனைக்கு பெயர் பலகை இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. பத்தடி நீளமும் , ஆறடி அகலமும் கொண்ட குறுகலான இடம் அது. அதன் நடுவில் இருந்த மேஜை முன்பு வெள்ளைச் சட்டை அணிந்திருந்த அந்த மருத்துவர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். தலை முழுவதுமாக நரைத்து இருந்தது . அவரைப் பார்த்ததும் , எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டது . அதற்குக் காரணம் , அவருக்குப் பின்னால் இருந்த அந்த  பெரிய புத்தக அலமாரிகள். அவருக்கு பின்புறம் இரண்டு , வலது பக்கம் ஒன்று என்று மொத்தம் மூன்று புத்தக அலமாரிகள்மற்றும் இடது பக்கம் கருப்பு நிறத்தில் மருந்து பாட்டில்களை உள்ளடக்கிய ஒரு உயரமான அலமாரி. அதனால் அவர் உண்மையிலேயே  ஒரு சிறந்த அறிவாளியாகத்தான் இருக்க  வேண்டும் என்று எனது  மனம் நம்பியது. பிற்காலத்தில் எனக்கு பின்னாலும் அத்தகைய புத்தக அலமாரிகள் இருக்கப் போகிறது என்று அப்போது தெரியாது . ஆம்! அது ஒரு ஹோமியோபதி மருத்துவமனை . அந்த மருத்துவரின்  பெயர் எனக்கு நன்றாக  ஞாபகம் இருக்கிறது!.  ஆம், அவர் சாந்தகுமார்!. அவரது சிகிச்சையில் அப்போது என்னுடைய வயிற்று தொந்தரவு சரியாகவில்லை என்றாலும் ஹோமியோபதி என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது என்பது ஆச்சரியமான ஒன்று!


அதன் பிறகு , 1983 ஆம் ஆண்டில்  ஒரு நாள் எனது குடும்பத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவம் ஏற்பட்டு விட்டது எனது இரண்டாவது தம்பியை   வலிப்பு நோய் தாக்கியது . அப்போது , அவன் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான் . மிகவும் புத்திசாலி. வகுப்பில் அவனே முதல் மாணவன், அவனுக்கு , மதுரையில் இருந்த சிறந்த மனநல மருத்துவர் சபேசனிடம் தான் சிகிச்சை எடுத்தோம் . அவர் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டும் என்று சில மருந்துகளை பரிந்துரை செய்தார். அது எப்டாயின் மற்றும்  டெக்கிரிடால் என்ற மருந்துகள் தான். இன்றும் இந்த மருந்துகளே வலிப்பு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று தெரிகிறதுசில சமயங்களில் வலிப்பு நோயின் அதிதீவிரத் தாக்குதலால் மூளைக்குழப்பம் ஏற்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டியதும்  வந்தது. அந்த மாதிரி சமயங்களில் பத்து நாட்களுக்கு உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவனை  கார்டினால் ஊசி மருந்து கொடுத்து தான் தூங்க வைக்க முடியும்இப்படி வருடத்திற்கு இரண்டு தடவையாவது நிகழ்ந்து விடும். எனது சிறிய வருமானத்தில் என் தம்பியின் மருத்துவச் செலவும் குடும்ப நிர்வாகமும்  மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் எனது சகோதர பாசத்திற்கு முன்பு அதெல்லாம் எனக்கு சிரமமாகத் தோன்றவில்லைஆனால் , அப்போது அவனுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில்  சிகிச்சை கொடுக்கலாம் என்று ஏன் எனக்கு தோன்றவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது!. இருந்தாலும் இந்த மாதிரியான மன நோய்களில் ஆங்கில மருத்துவத்தில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வசதி இல்லாமல் பல குடும்பங்கள் இன்றும்  தற்கொலை செய்துகொள்வதை நாம் பத்திரிக்கைகளில் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம்.


அதன் பிறகு 1991 ஆண்டு என்று கருதுகிறேன். எனது தாய்மாமனின் 12 வயது  மகனுக்கு வயிற்றுவலி இருந்தது. அவனை மதுரையிலுள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது வலது பக்க சிறுநீரகத்தில் கட்டி உருவாகி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதித்திருந்தது. அதனால் அதை நீக்கிவிட வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். இடதுபக்க சிறுநீரகம் நன்றாக செயல் படுவதாகவும் , அதனால் உயிர் வாழ்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தார்கள். 

ஆனால் நடந்தது என்னவோ மிகவும் துரதிருஷ்டமான முடிவு. அறுவை சிகிச்சை செய்து வலது பக்க சிறுநீரகத்தை நீக்கிய பிறகு , இடது பக்கச் சிறுநீரகம் அந்த அதிர்ச்சியில் செயல் படாமல் போய்விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள் . எவ்வளவோ மருத்துவம் செய்தும் அந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்க முடியவில்லை.  மாற்று சிறுநீரகம் பொருத்துவது தான் சரியானது என்பது தெரிந்து விட்டது. ஆனால் அதற்கு அதிகப்பணம் தேவைப்பட்டது. ஏற்கனவே இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகி இருந்தது. மேலும் பல லட்சங்களை செலவு செய்யக் கூடிய வசதியும் ஏழை விவசாயியான என் மாமனிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் , மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை செய்த பிறகு அந்த சிறுநீரகமும் சரியாக செயல்படத் துவங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. எங்கள் குடும்பமே பெரும் துயரத்தில் ஆழ்ந்தது.

மனம் முழுவதும் வேதனையைச் சுமந்து கொண்டு , மருத்துவமனையிலிருந்து அவனையும் சுமந்துகொண்டு வீடு திரும்பினோம். அவன் இறக்கப் போகிறான் என்று தெரிந்தும் மருத்துவத்தைத் தொடர முடியாமல்  அவனை வீட்டிற்கு அழைத்து வந்ததை   என்னால் தாங்க முடியவில்லை . என் கரங்களில் தவழ்ந்த அந்த அழகான குழந்தை , எங்களால் காப்பாற்ற இயலாமல்  கைவிடப்பட்டு மரணித்தது. என் மனதில் ஆழமாக பதிந்து விட்ட அந்த வலி இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த  பிறகும்  இப்போதும் இருந்து கொண்டே உள்ளது  . அந்த வலி தான் ஹோமியோபதியை  நான்   ஆழமாக  கற்றுக்  கொள்வதற்கும்  , உயிராக   நேசிப்பதற்கும்  உந்து   சக்தியாக   இருக்கிறது .




II


ஹோமியோபதி மருத்துவ அறிவியலறிவு  எனக்கு கிடைப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் எனதருமை நண்பர் வி. பாலு தான். இத்தகைய நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அவருக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். அது ஒரு சுவையான கதை.


1992 ஆம் ஆண்டு , நான்  உசிலம்பட்டியிலிருந்து மாற்றலாகி மதுரையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  என்னுடைய உற்சாகமான தொழிற்சங்கப் பணியினாலும் ,அனைவரிடமும் நன்றாக பழகும் தன்மையினாலும் கவரப்பட்ட  நண்பர் வி.பாலு ஒரு நாள் நீங்கள் எங்களது ஹோமியோபதி மருத்துவச்  சங்கத்தில் சேர்ந்தால் ஹோமியோபதி மருத்துவத்தை கற்பதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் சமூகத்திற்கும் தொண்டாற்ற முடியும் என்று ஊக்கப்படுத்தினார். ஏற்கனவே, எனது மைத்துனனின் மரணம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் என்னை யோசிக்க வைத்தது. அவரது ஆலோசனையை ஏற்றுக் ஏற்றுக் கொண்டு ,"தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்சங்கத்தில் இணைந்தேன். இப்படித்தான் “AProCH”  எனக்கு அறிமுகமானது.

ஆனால் இந்தச் சங்கத்தில் சேருவதற்கு  மற்ற சங்கங்களை போன்று சந்தா கொடுத்து  மட்டும் சேர்ந்து விட முடியாது.   அதற்கென்று உள்ள நிர்வாகக் குழுவினரால் , உறுப்பினராக சேர இருப்பவரை பேட்டிக்கண்டு , அவருக்கு சமூக சேவை செய்யும் மனப்பான்மையை இருக்கிறதா ? , பரந்துபட்ட வாசிப்பனுபவம் இருக்கிறதா? , இவரால் சங்கத்திற்கும் சமூகத்திற்கும் பயன் இருக்குமா ? என்றெல்லாம் சோதித்து பார்த்துத்தான் சேர்த்து கொள்வார்கள். ஒவ்வொரு  ஞாயிறு தோறும் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் சேவை மையத்தை நாடி வரும் அனைவருக்கும்  இலவசமாக மருத்துவ சேவை செய்வதும் , அதன் உறுப்பினர்களுக்கு ஹோமியோபதி விழிப்புணர்வுக் கல்வியைப் போதிப்பதும் அதனுடைய தலையாயப் பணியாகும்.

அதனால் தான் 1991 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்  சங்கம் கடந்த 26 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும்  தனது கிளைகளை உருவாக்கி மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் வித்திட்டு வருகிறது. இப்படித்தான் தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்சங்கம் என்னையும் உள்வாங்கிக் கொண்டது.

கடந்த 23 ஆண்டுகளாக  நான்  தினமும் சுவாசிக்கும் மூச்சுக் காற்றோடு  , ஹோமியோபதியையும் சேர்த்தே சுவாசிக்கிறேன்.  எனது குடும்பம், நண்பர்கள் , பெரும்பாலான உறவினர்கள் அனைவரும் ஹோமியோபதி மருத்துவத்தின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் செல்லுமிடமெல்லாம்  மக்களிடம் ஹோமியோபதியின் சிறப்புகளை எடுத்தியம்பி , தேவைப்பட்டால் அவர்களுக்கு மருந்தளித்து நலப்படுத்தியும் வருகிறேன். அலோபதி மருத்துவத்தின் தீமைகளையும் , நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அவலத்தையும் , பணம் சம்பாதிப்பதே  ஒன்றே அவர்களின் குறிக்கோள் என்பதையும் எடுத்துக்கூறி அவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறேன்.





குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத பல பெண்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் அந்தத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்து  அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைத்திருக்கிறேன்.  சோரியாசிஸ் , புற்றுநோய்  மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற நோய்தாக்குதலுக்கு உள்ளான  எத்தனையோ துயரர்களுக்கு மருந்தளித்து நலப்படுத்தியிருக்கிறேன். எனது சிகிச்சையின் மூலம் நலம்பெற்ற பலரின் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு திருப்தியைக் கொடுத்திருக்கிறது அவர்கள் நெகிழ்ச்சியோடு கரம் கூப்பி நன்றி தெரிவிக்கும் போதெல்லாம் எனது வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


ஹோமியோபதி அறிவு என்னுள் சுடர்விட்ட பிறகு தான் எனது தனியியல்பு பண்பு, ஆளுமை, மற்றும் புரிதல் ஆகியவைகள் செழுமையடைந்திருக்கிறது. என்னுள் இருந்த தன்முனைப்பு , அகந்தை மற்றும் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு தூர விலகின. குறிப்பாக ,   என்னுள் முகிழ்த்த ஹோமியோபதி அறிவே என் துறை சார்ந்த போட்டித் தேர்வுகளில் என்னை வெற்றி பெற செய்து ,  எனது பதவி உயர்விற்கும் வித்திட்டது ; அதன் மூலம் எனது பொருளாதார நிலை உயர்ந்து சமூக அந்தஸ்து கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமல்லமல் இந்தியா முழுவதும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

இத்தனைக்கும் காரணம் ஜெர்மானிய மாமேதை சாமுவேல் ஹானிமன் [1755-1843] கண்டெடுத்து உலகிற்கு நல்கிய ஹோமியோபதி மருத்துவம் தான். அவர் இறந்த பிறகு பாரிஸ் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்ட  அவரது   கல்லறையில் " நான் வீணான வாழ்க்கை வாழவில்லை" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த வரிகள், அவர் எவ்வளவு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதற்கான அடையாளச்சின்னமாக இருக்கிறது.





No comments:

Post a Comment