Wednesday, 24 October 2012

முரண்பாடான காமம் !!!



கி.பி.1972  ஆம் ஆண்டு ஒரு நாள் , காலை 0800  மணிக்கு நான் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது , எழுமலை அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பேருந்துநிலையத்தைத் தாண்டி, கிழக்குப் புறமாக திரும்பி எனது பள்ளியை நோக்கி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் . என் எதிரே வந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டு அப்படியே நின்று விட்டார்கள். அவர்கள்  அனைவரின் முகத்திலும் இனந்தெரியாத திகில். நானும்  திடுக்கிட்டு பயத்தில்  திரும்பிப் பார்த்தேன்!. என்னையும் அறியாமல் என் உடல் நடுங்கி கொண்டிருந்தது. அங்கே பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் தமது  வலது கையில் ஒரு பெண்ணின் தலையுடன் நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான். இடது கையில் இரத்தம் தோய்ந்த நீண்ட அரிவாள். அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை, நிதானமாக தெரிந்தான். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து இருபது அடி  தூரத்தில் தான் காவல் நிலையம் இருந்தது. சரணடைய வந்து கொண்டு இருக்கிறான் போலும்.கொலைக்கான காரணத்தை பின்னர் தெரிந்து கொண்டேன். கொலையுண்ட அந்தப்பெண் அவனின் தாய். விதவையான அவளுக்கு வேறொரு ஆணுடன் பாலியல் தொடர்பு இருந்ததால் வெகுண்டெழுந்த அந்த வாலிபன் , தாய் என்றும் பார்க்காமல் அவளது தலையை கொய்துவிட்டான். 

சில மாதங்களுக்கு முன்பு இந்த   கி.பி.2012  ஆம் ஆண்டிலும் , இதே மாதிரியான ஒரு செய்தியை தினத்தந்தி நாளேட்டில் படித்தேன். அதே காரணம்! . ஆனால் சிறிய  வித்தியாசம். இந்தக் கொலை, வெளி ஊருக்கு வேலைக்கு சென்று விட்ட தன் தந்தைக்கு துரோகம் செய்துவிட்டு வேறொருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதால் நடந்துள்ளது. இது போன்ற பல்வேறு செய்திகள் இப்பொழுதெல்லாம் செய்தித்தாள்களில் அடிக்கடி வெளிவருகிறது. கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை!  சகோதரி உறவுமுறை உள்ள பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் வாலிபர் வெட்டிக் கொலை! சித்தியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததைக் கண்டித்த சித்தப்பா கொலை! தனது கள்ளக் காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி! தனது மாணவனை காதலித்து அவனை கடத்திசென்ற ஆசிரியை! அல்லது கள்ளக் காதலிக்காக மனைவியைக் கொன்ற கணவன்! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்?  காமம் தானே! அதுவும், சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாத முறைதவறிய காமம் தானே! இது ஏன் ஏற்படுகிறது

மேற்கண்ட முரண்பாடான காம நுகர்விற்கான விளக்கம் எனக்கு சிக்மண்ட் பிராய்டு அவர்களிடம் கிடைத்தது.அவரது இடிபஸ் சிக்கல்” (இடிபஸ் என்பவன் 401 BC  இல் வாழ்ந்த ஒரு அரசனின் தத்துப்பிள்ளை. இவன் தமது தந்தையைக் கொன்று தாயை மணந்தவன் என்பது வரலாறு) என்கிற பெற்றோர் மோகம் பற்றிய சிந்தனை, அதாவது ஆண் குழந்தை தன தாயின் மார்பில் பால் அருந்துவதில் இருந்து ஆரம்பித்த தாய்மோகம், பெண் குழந்தைகள் தன தந்தையின் ஆளுமை மூலம் பெரும் எதிர் பாலின காதல் உணர்வு போன்றவற்றை 1897 ஆம் ஆண்டே சிக்மண்ட் பிராய்டு விளக்கியுள்ளார்.  அதேபோல் , தாயை அடைய குழந்தை முனையும் போது அதற்குத் தடையாக இருப்பது தந்தையே ஆகும். ஆகவே, குழந்தைகள் தாய்க்காக தந்தை  மீது போர்க்குணத்தை அல்லது போட்டி உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு குழந்தை தனது தாயை உடைமையாக்கிக் கொள்ள நிகழ்த்தப்படுகிற போராட்டமே இடிபஸ் போராட்டமாகும்.

இவ்வாறு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, அப்பருவத்தில் தோன்றும் பாலுணர்ச்சி உந்துதல் காரணமாக அவர்களுக்கு உளப் போராட்டம் ஏற்படுகிறது. வ்வாறு உள்ளத்தில் பல போராட்டங்கள் நிகழ்ந்தாலும், பாலுணர்ச்சிக்கு எதிரான போராட்டமே முதன்மையாகக் கருதப்படுகிறது.உடலியல் மனிதனுக்குப் பாலுணர்ச்சியையும், சமுக மனிதனுக்கு பண்பாட்டு உணர்ச்சியும் மூலங்களாக இருப்பதால் இவ்விரண்டில் எதையும் விட்டுக்கொடுக்க , அதே வேளையில் முழுமையாகச் சார்ந்திருக்க முடியாத இக்கட்டான நிலை மனிதனுக்கு ஏற்படுகின்றது.  பாலுணர்ச்சி சார்ந்த கருத்தும் ( வேட்கை), பண்பாட்டு விழுமியக் கருத்தும் (ஒழுக்கம்) எதிரிடைகள் ஆகும். இயற்கை வழி வேட்கையும் , செயற்கை வழித் தடையும் கருத்தியல் போராட்டம் நடத்தும் போது பாலுணர்ச்சிக்கும் , சமுக உணர்ச்சிக்கும் அல்லது பண்பாட்டு உணர்ச்சிக்கும் இடையிலான போராட்டமே ஏற்படுகிறது.  இந்தப் போராட்டத்தில் பாலுணர்ச்சி வெற்றியடைந்தால் மனம்  பண்பாட்டு உணர்ச்சியை அடக்கி தமது பாலுணர்வை பூர்த்தி செய்துகொள்ளும். இங்கே சமுக உணர்வுகள், உறவுகள் என்ற பண்பாட்டு உணர்ச்சி மீறப்பட்டு உடைக்கப்படும் என்பதை சிக்மண்ட் பிராய்டு தெளிவாகப் பதிவு செய்துள்ளார். ஆகவே பாலுணர்ச்சி சம்பந்தமான கல்வி அறிவு என்பது அனைவருக்கும் அவசியமானது. அது இல்லாதபட்சத்தில் முரண்பாடான உறவுகள் தொடர் கதையாகத் தான் இருக்கும்.

அதேபோல் முறைகேடான பாலுணர்வு மீறலுக்கு கீழ்வரும் வேறு சில காரணங்களும் இருக்கிறது;


  1.         பாலியல் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வின்மை.
  2. அதிகக் காமஉணர்ச்சி மற்றும் பாலுணர்வு குறித்து அதிக ஆர்வம். 
  3. கணவன் அல்லது மணைவியினால் தமது இணையின் தேவைகள், விருப்பங்களை பூர்த்திசெய்ய இயலாமை.
  4. தம்பதியினர்கள் தமது விருப்பு வெறுப்புகளை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
  5. தம்பதியினர் இடையே மனமாச்சரியங்கள் மற்றும் முரண்பாடுகள் இருக்கும் பொழுது, ஆறுதலாக இருக்கும் ஆண்/பெண் நண்பர்களின் தலையீடு.
  6. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள்படங்கள் மற்றும் ஆபாசப்படங்கள் போன்றவைகள்.

மேற்கூறிய காரணங்களில் கவனம் செலுத்தி மனதை செழுமைப் படுத்தினால் மட்டுமே இத்தகைய முறையற்ற காமத்தையும் அதன் பின் விளைவுகளையும் களைய முடியும்.அதை விடுத்து சம்பந்தப்பட்டவர்களை கொன்று ஒழிப்பதால் மட்டும் இப்பிரச்சினையை தீர்க்க இயலாது.தேவை காதல் / காமம் பற்றிய விழிப்புணர்வே! .   

(இக்கருத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாய்ப்பிருந்தால் பின்னர் தொடர்ந்து எழுதுகிறேன்)
   

No comments:

Post a Comment