Wednesday, 15 August 2012

இந்திய சுதந்திர தினம் !



நமது நாடு இன்று 15/08/2012 , தமது 66  வது சுதந்திரதினத்தை வெகு பாதுகாப்புடன் கொண்டாடுகிறது. குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, கல்லூரி, பள்ளிக்கு  மற்றும் அரசு அலுவலகங்களுக்கு  விடுமுறை கொடுத்து ஒரு சம்பிரதாயமாக கொண்டாடுகிறார்கள். 

நானும்  பள்ளியில் படித்த பொழுது , இந்த நாள்  ஆங்கிலயரிடமிருந்து நாம் விடுதலை அடைந்த நாள் , காந்தி தாத்தாவும், நேருவும், சர்தார் பட்டேல் போன்றவர்கள் அரும்பாடு பட்டு இந்த சுதந்திரத்தை பெற்று கொடுத்தார்கள் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஹைதர் அலி , திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன் , மருது சகோதரர்கள் போன்ற மன்னர்களெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள் என்றும்  சொல்லி வைத்திருந்தார்கள். அந்த நாளில் மூவர்ணக் கொடியேற்றி, இனிப்பு சாப்பிட்டபொழுது மிகவும் இனித்தது.

பின்னாளில், நமது  நாடு  ஆங்கிலேயருக்கு  அடிமைப்பட்ட விதத்தையும் , சுதந்திரப்போராட்டம் நடந்த வரலாற்றையும் விரிவாக படித்த பொழுது மனது மிகவும் வலித்தது.   நாம் எத்தனை சிறந்த வீரர்களை பெற்று இருந்தோம்! , எவ்வளவு வளங்கள் இருந்துள்ளன! . அவற்றையெல்லாம் சாதி,மத, இன , மன வேற்றுமையாலும், சில சுயநல துரோகிகளாலும் நாம் இழந்து விட்டோமே என்ற தாக்கம் என்னை பெரிதும் பாதித்தது.  

நாம் ஏன் அடிமைப்பட்டு போனோம் ?

கி.பி.1636 இல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆங்கிலேயர்களோடு வர்த்தக ஒப்பந்தம் போடவில்லை என்றால் , கி.பி.1757  இல் நடந்த பிளாசிப் போரில் மிர்சாபர் , சிராஜ் உத்தவுல்லாவை ராபர்ட் கிளைவிடம் காட்டிக் கொடுக்கவில்லை  என்றால் நாம் அடிமைப்பட்டு, சீர்குலைந்து இருக்க மாட்டோமே என்ற ஆதங்கம் என்னை பெரிதும் வேதனைப் படுத்தியது.  அன்று வங்கத்தில் காலூன்றிய ஆங்கிலயர்கள் கி.பி.1947  வரை நமது நாட்டை ஆட்சி செய்து,  நமது நாட்டின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்று விட்டார்களே!   

வட இந்திய மாநிலங்கள் ஆங்கிலயர்களிடம் இலகுவாக  வீழ்ந்த பின்னரும் , தென்னிந்திய மன்னர்கள் வெகுண்டெழுந்த விதம் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டும். குறிப்பாக மைசூர் ஹைதர் அலி, திப்புசுல்தான் , கட்டபொம்மன், தூந்தாஜிவாக், விருப்பாட்சி கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள், ஊமைத்துரை, தீரன் சின்னமலை போன்றவர்களின் வீரம் காலத்தால் அழிக்க முடியாதது. இவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவன் மைசூர்ப்புலி திப்பு தான். எனது சிறுவயது முதலே திப்பு என்ற சொல் என் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி வீரத்தினை புகட்டி இருக்கிறதென்றால் அது மிகையாகாது. திப்புவைப் போன்று ஆங்கிலேயர்களை விரட்டவேண்டும் என்பதையே தன் வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனைகனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை ஆங்கிலேயர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். கி.பி.1799  இல் , திப்பு இறந்த பின்னரே இந்தியாவை முழுமையாக வசப் படுத்த முடிந்தது என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.  

இப்படி அடிமைப்பட்டுப்போன நமது நாட்டை மீட்டுக்க எத்தனை சகோதரர்களை நாம் பலிகொடுத்து இருக்கிறோம். அவர்களை நம்மால் மறக்க முடியுமா?    பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ...இந்தப் பெயர்கள் இளைஞர்களின் வேதவாக்கல்லவா?  கேளாத செவிகள் கேட்பதற்காக இந்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதையும் , இவர்களுக்கு காந்தி மற்றும் காங்கிரஸ் செய்த துரோகத்தையும்  , கி.பி. 1931 ஆம் ஆண்டு   மார்ச் 23 ந் தேதி பகத் சிங்கை தூக்கிலிடும் போது அவன் கட்டிய நெஞ்சுரம் போன்றவற்றை அறியாத இந்தியன் யாராவது இருப்பார்களா ? . ஆங்கில அரசை தீரத்துடன் எதிர்த்த சுபாஷ் சந்திரபோஸ்,  சந்திரசேகர ஆசாத், மதன்லால் திங்கரா, மாவீரன் உத்தம்சிங்   போன்றவர்களை யாரால் மறக்க இயலும்? ஏதோ மகாத்மா காந்தி , நேரு போன்றவர்களின் அகிம்சை போராட்டத்தால் மட்டுமே நாம் சுதந்திரம் பெற்றோம் என்று பேசித் திறிவது நம்பும் வகையில் இல்லை. இந்திய இளம் சிங்கங்களின் இடைவிடாத போராட்டத்தாலும் , கி.பி.1945 வரை நடந்து முடிந்த  இரண்டாம் உலகப்போரின் நஷ்டத்தாலும் , இந்திய போன்ற காலனி  நாடுகளை பராமரிக்க முடியாமலே பிரிட்டன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது என்பதுதான் உண்மை!  அவர்களுக்கு  நம்பிக்கையானவர்களே காந்தியும், நேருவும் என்பதுவும் உண்மை. 
இன்று இந்தியநாடு இருக்கும் நிலைமையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது ! எங்கும், எதிலும் ஊழல் ! மத்திய மந்திரி சபையில் இருக்கும் அனைவரின் மீதும்(ஒரு சிலரைத்தவிர)  ஊழல் குற்றச்சாட்டு நமது பிரதமர் உட்பட! வெட்கம்! இந்தியாவில் வறுமையை ஒழிக்கத் திட்டங்கள் இல்லை! விவசாயத்தைப் பெருக்க முயற்சிகள் எடுக்கப் படவில்லை! நாட்டின் கனிம வளங்கள் அரசியல்வாதிகளின் கையாட்களால் திருடப்படுகிறது! மாநிலங்களுகிடையே ஒற்றுமை இல்லை! இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது!  எங்கே போகிறோம் நாம்

இந்தச் சூழ்நிலையில் , நாட்டைக் காக்க வீரப்போர் புரிந்து சிரிரங்கபட்டினத்தில் இறந்த திப்பு, கயத்தாற்றில் சிலையாக இருக்கும் கட்டபொம்மன், திருபத்தூரில் கல்லறையில் துயிலும் மருது சகோதரர்கள் ஆகியோர்கள் நம்மைப் பார்த்து நகைப்பது போல் இருக்கிறது! இவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி கொண்டிருப்பதை எந்த அரசியல்வாதியும் உணரவில்லை! உண்மையான சுதந்திற்க்காக நாம் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதே என் எண்ணம். இப்போதெல்லாம் சுதந்திரதினத்தன்று சுவைக்கும்  மிட்டாய் எனக்கு இனிப்பதில்லை! 

No comments:

Post a Comment