Monday 30 January 2017

சபர்மதி ஆசிரமம்



சபர்மதி ஆசிரமம்






மகாத்மா காந்தி அவர்கள் 09-01-1915 ந் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய திரும்பிய பிறகு குஜராத் மாநிலம் , அகமதாபாத் நகரில் இருக்கும் இந்த சபர்மதி ஆசிரமத்தில் தான் கி,பி. 1915 முதல் 1930 வரை தங்கி இருந்தார். சபர்மதி ஆற்றங்கரையில் ஏறத்தாழ 36 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமம் தான்சத்தியாகிரக ஆசிரமம்என்றும் பின்னாளில்ஹரிஜன ஆசிரமம்”  என்றும் அழைக்கப்பட்டது.”


இந்த ஆசிரமம், முதலில் 25-05-1915  ந் தேதி காந்தியின் நண்பரான திரு.ஜீவன்லால் தேசாய் என்ற பாரிஸ்டருக்கு சொந்தமான இடத்தில தான் துவக்கப்பட்டது. பின்பு 17-06-1917 ந்தேதி முதல் திரு சார்லசு கொர்ரியா என்பவரால் வடிவமைக்கப்பட்ட , தற்போதுள்ள சபர்மதி ஆற்றங்கரைக்கு மாற்றப்பட்டது. மகாத்மா காந்தி அவர்கள் இங்கிருந்து தான் சிறப்புவாய்ந்த தண்டி உப்பு சத்தியாகிரக யாத்திரையைத் தொடங்கினார் என்பது நமக்கெல்லாம் தெரியும். அதனால் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கிறது.

கடந்த 08-01-2017  ந்தேதி அகமதாபாத் சென்ற எனக்கு இந்த சபர்மதி ஆசிரமத்தை பார்க்கவேண்டும் என்ற உந்துதல் இயல்பாக ஏற்பட்டது. அகமதாபாத்தில் இருக்கும் எனது நண்பருக்குத் தகவல் தெரிவித்த போது ,  காலை பதினோரு மணிக்கு வந்து அழைத்து செல்வதாக உறுதி கூறியிருந்தார். அதன் படியே சரியான நேரத்திற்கும் வந்தார். இருவரும் எங்களது இருசக்கர வாகனத்தில் பயணித்தோம்.

ஜனவரி மாதம் என்பதால் நகரில் படந்திருந்த குளிர் காற்று  மிகவும் இதமாக  இருந்தது. ஆனால் சாலை விதிகள் முறையாகக் கடைபிடிக்கப்படாததால் சாலையைக் கடப்பது மிகவும் ஆபத்தானதாக  இருந்தது. பல ஆண்டுகளுக்காக அந் நகரிலேயே  குடியிருக்கும் எனது நண்பருக்கு அது பழகிப்போன ஒன்றாக இருந்ததில் ஆச்சரியமில்லை தான். இதில் வேடிக்கை என்னவென்றால் பல இருசக்கர வாகனத்தின்  முன் மிகப்பெரிய கம்பி வளையம் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. விசாரித்த போது, இங்குபட்டம்விடுவது மிகவும் பிரசித்தம் என்பதும்அதன்  கயறு சமயத்தில் அறுந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் பயணிப்பரின் உயிரைப் பதம் பார்த்து விடுவதும் உண்டு என்றும் நண்பர் தெரிவித்தார். உண்மையில் அகமதாபாத் நகரம்  எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டிய பட்டியலில் இருக்கிறது என்பது  எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.

நாங்கள் சபர்மதி ஆசிரமத்தை அடைந்த பொழுது ஏறக்குறைய ஐம்பது சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தார்கள். நுழைவுக் கட்டணம் இல்லை என்பது  சற்று ஆச்சரியமாக இருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இந்தக் கூட்டம் வந்திருக்கிறது என்றும் , பொதுவாக அகமதாபாத் நகரில் இருக்கும் யாரும் இங்கு வருவதில்லை என்றும் நண்பர் தெரிவித்தார்.

ஆசிரமத்திற்குள் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தைப் பார்க்கச் செல்லும் நுழைவு வாயிலின் இடது பக்கம் மகாத்மா  காந்தியின் பிரசித்தி பெற்றமூன்று குரங்குகள்சிலையும் , வலது பக்கம் இந்த அருங்காட்சியகம் முன்னாள் பாரதப்பிரதமர். திரு . ஜவஹர்லால் நேரு அவர்களால் 10-05-1963  இல் திறக்கப்பட்டது என்ற தகவல் பலகையும் இருந்தது. கூடவே, ஆன்மிகத்தின் மூலம் உண்மையைத் தேடும் பொருட்டும், வன்முறையில் நாட்டமில்லாத அமைதிக்குழுவை கண்டறியும் பொருட்டுத் தான் காந்தியால் இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டது என்பதும் என் ஞாபத்திற்கு வந்தது




அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த  போது அதன் அமைப்பு மிகவும் அழகாகவும் , கவர்ச்சியாகவும் தோன்றியது. அது,  ஏறத்தாழ 24000 சதுர அடியில் , 20 க்கு 20 அடியில் கட்டப்பட்ட 54 அறைகளுடன் , , மாநாட்டு அரங்கம், திரைப்படக்கூடம், கலையரங்கம், நூலகம் மற்றும் கழிவறைகள் போன்றவைகள் தேவைக்குத் தகுந்த வகையில் கட்டப்பட்டியிருந்ததுமகாத்மாக் காந்தியின் 34066 கடிதங்களும், 8633 கையெழுத்துப் பிரதிகளும் , 155 பாராட்டுக்கடிதங்கள் மற்றும் 210 சுதந்திரப்போராட்டம் பற்றிய படங்களும் அங்கு  இருப்பதாக குறிப்புகள் தெரிவிக்கின்றனகூடவே மகாத்மாக் காந்தியின் முழுநீள வண்ணப்படங்களும் பொருத்தப்பட்டிருந்தன. அங்கிருந்த காந்தியின் " தண்டி யாத்திரைஓவியம் மிகவும் அழகாக வரையப்பட்டிருந்தது. என் கண்கள் தானாக நூலகப் பகுதியை நோக்கியது. ஞாயிற்றுக் கிழமை என்பதால்  நூலகம் திறக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்

அடுத்து, காந்தி வாழ்ந்த இல்லதைப் பார்க்கச் சென்றோம். அந்த இடம் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு வராண்டா , காந்தியின் அறை, அன்னை கஸ்தூரிப்பாய் அவர்களின் அறை, விருந்தினர் அறை, சமையல் மற்றும் பண்டக அறை என்று அடக்கமாக இருந்தது. வீட்டின் தளம் பளபளப்பு செய்யப்பட கருமைநிற கற்களால் பாதிக்கப்பட்டியிருந்தது. அங்கே அவர் உபயோகப்படுத்திய பல பொருள்கள் இன்றும்  பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தக் குடிலின் முன்புறத்தில் ஏறத்தாழ 100 அடிகள் தள்ளித்தான்   சபர்மதி ஆறு பாய்ந்து செல்கிறது. அதன்  அருகே தான் காந்தி அவர்களின் தியானம் மற்றும் சொற்பொழிவு பகுதி இருக்கிறது. அப்போதும் அங்கே ஒரு பெண்மணி காந்தியின் சிந்தனைகளை பற்றி குஜராத்தி மொழியில் விளக்கிக்  கொண்டிருந்தார்.

நாங்கள் குடிலின் வராண்டாவில் சிறிது நேரம் அமர்ந்தோம். எனக்கு காந்தியின் நினைவுகள் சுழல ஆரம்பித்தன. அவர் , இங்கிருந்து தான் ,240 மைல்கள் தள்ளியிருக்கும்   தண்டியை நோக்கி 78 பேர்கள் கொண்ட குழுவினருடன்  12-03-1930 ந்தேதி தமது உப்புச் சத்தியாகிரக யாத்திரைத் துவக்கினார்அதனால் வெறுப்படைந்த ஆங்கில அரசு சபர்மதி ஆசிரமத்திற்கு சொத்து வரி விதித்தது. அத்துடன் கடும் நிபந்தனையும் விதித்தது. அதனால் வெறுத்துப்போன மகாதமா காந்தி அவர்கள் , இனி நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்பு தான்  " சபர்மதி ஆசிரமம் வருவேன்”  என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பிறகு  22-07-1933 முதல் சபர்மதி ஆசிரமத்தை முழுவதுமாக துறந்து விட்டார். ஆனால்....

கி.பி.  1947 இல்  இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்,  30-01-1948  ந்தேதி மகாத்மாக் காந்தியும் , நாதுராம்  கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் , அவரும் சபர்மதி ஆசிரமத்திற்கு வரவே இல்லை.  இந்த உண்மையால் , மிகவும்   கனத்த இதயத்துடன் தான் அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தேன். அத்துடன் , அங்கிருக்கும் பார்வையாளர் பதிவேட்டில் ," ஒரு நாட்டில் மிகவும் நேசிக்கப்பட்டவராகவும் அதே சமயத்தில் விமர்ச்சிக்கப்பட்டவருமான இருந்த ஒரு மாபெரும் மனிதன் வாழ்ந்த இடத்தை பார்த்தது என் நினைவில் இருக்கும்" என்று பதிவு செய்தேன்

மகாத்மா காந்தி அவர்கள்  சபர்மதி ஆசிரமத்தில் வாழ்ந்த பொழுது ஹரிஜனங்களின் மீது மிகவும் பரிவுடனும் ,  சகஜமாகவும் பழகி வந்தார் என்பதும் அதனால் ஆசிரமத்திற்குப் பொருளுதவி செய்யும் சாதி இந்துக்களின் பகையையும் சம்பாதித்துக் கொண்டார் என்பதும் வரலாறு பதிவு செய்துள்ள மனதை நெருடும் உண்மைகள்.  சபர்மதி ஆசிரமம் உண்மையில் ஒரு வரலாற்றுச் சான்று தான்.  அவரின்  சில கருத்துக்கள் மற்றும்  செயல்களின்  மீது  எனக்கு உடன்பாடு இல்லையாயினும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு என்பதை மறுக்க இயலாது.

சு.கருப்பையா

30-01-2017

No comments:

Post a Comment