இளங்காலைப்பொழுதின் இளந்தென்றல் காற்று மனதிற்கு
இதமாக இருந்தது. எங்களது இரயில் வண்டி ஸ்ரீரங்கபட்டினத்தை கடக்கும் பொழுது மிதமான
சாரல் மழையும்
பெய்யத் தொடங்கியது. இருந்தாலும் அந்தக் காலை வேளையிலே என் மனதில் பரபரப்பும்
ஆர்வமும் தொற்றிக் கொண்டது. இங்கே தான் மாவீரன் திப்பு சுல்தான் வாழ்ந்து
மறைந்தான் என்ற எண்ணம் மேலோங்க எட்டிப் பார்த்தேன். இளம்
மஞ்சள் நிறத்தில் ஒரு கோவில் பின்புறமாக கடந்து சென்றது. ஒரு வேளை அது
ஸ்ரீரங்கநாதர் கோவிலாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.
எனது இதயம் இந்தியாவில் பார்க்க துடித்த ஒரே இடம்
இந்த ஸ்ரீரங்கபட்டினம் தான். திப்புசுல்தான் என்ற மாவீரன் மறைந்த இடத்தில்
அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற 25 ஆண்டு கடன் என்னை உறுதிக் கொண்டே
இருந்தது . அந்த
வாய்ப்பு எனது மகன் மூலமே எனக்கு கிடைத்தது. அவன் தன்னுடைய பணியில் சேருவதற்கு
மைசூர் சென்றதால் நானும் எனது மனைவியும் கூடவே செல்ல வேண்டிய கட்டாயம். அவன் பிறப்பதற்கு முன்பே என்
மனதில் வேரூன்றி வளர்ந்திருந்த அந்த உணர்வு , அவனின் வளமான வாழ்வு தொடங்க இருக்கும் இந்த நல்ல வேளையிலே
எனது நீண்டநாள் கனவும் நிறைவேறப்போவது உண்மையிலே இரட்டிப்பு மகிழ்ச்சியே . மனம் திப்புவின்
நினைவுகளில் இருந்து மீள்வதற்குள் மைசூர் வந்தது.
அந்தக் காலை வேளையிலே மழை பெய்து கொண்டிருந்தாலும் மைசூர்
நகரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
இரயில் நிலையத்தின் உள்ளையே நகராட்சி மற்றும்
காவல்துறையினரால் நிர்வாகிக்கப்படும் ஆட்டோ நிலையம் (PREPAID) இருந்தது. பேரம் பேச வேண்டியதில்லை; சண்டையிட வேண்டிய
அவசியமும் , அதிகப்
பணம் பிடுங்கி விடுவார்களோ என்ற பயம் இல்லை.
மைசூர் நகரம் முழுவதுமே இந்த முன்பணம்
செலுத்தும் முறையில் தான் ஆட்டோ இயங்கிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு
மதுரை இரயில் நிலையத்தில் முகப்பில் நின்று கொண்டு பயணிகளை வரவேற்கும் 40 அல்லது 50 ஆட்டோ சகோதரர்களையும் , அவர்களை
நிராகரிக்கும் நம்மவர்களும் தான் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
அன்று ஒரு நாள்
மைசூரிலே வேலை இருந்ததால் மறுநாள் தான் ஸ்ரீரங்கபட்டினம் செல்ல வேண்டிய
நிலை. மாலையில்
சிறிது நேரம் கிடைத்ததால் மைசூர் அரண்மனையை பார்த்து விடலாம் என்று என் மணைவி
ஞாபகப்படுத்தினார். மிகவும்
சிறந்த வேலைப்பாடுகளுடன்,
பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது மைசூர் அரண்மனை. உண்மையிலே நன்றாக பராமரித்தும்
வருகிறார்கள். அரண்மனையின் பின் பகுதியில் மைசூர் இராஜ வம்சத்தினர் வாழ்ந்த
பகுதியும் , அவர்கள்
பயன்படுத்திய பொருட்களையும் மிகவும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனக்கென்னவோ , அங்கே பார்த்த மகாராஜாக்களின்
ஆடம்பர அணிகலன்கள் , அரண்மனை
களியாட்டங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவைகள் வீழ்ந்து மறைந்த இந்திய
சமஸ்தானங்களின் வரலாற்றைக் கூறும் திவான் ஜர்மானி தாஸ் எழுதிய "
மகாராஜா" என்ற நூலைத் தான் ஞாபகப்படுத்தியது. இரவு எங்களது தங்கும் விடுதிக்கு திரும்பும் போது
மைசூர் அரண்மனையின் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.
அடுத்தநாள் , காலை 10 மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். மனம் எப்பொழுது
ஸ்ரீரங்கபட்டினம் செல்வோம் என்று எதிர்பார்க்க துவங்கி விட்டது. எங்களது கார் காலை
11:30 மணிக்கு வந்தது. காரில் ஏறி அமர்ந்ததும் மனம்
சிட்டாக பறந்து திப்புவின் கோட்டையை நோக்கிச் சென்று விட்டது.
அது அழிவு சின்னம் !!!.
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு எச்சங்களே மிஞ்சிப்
போன திப்புவின் கோட்டை என்னை வரவேற்றது. அந்த நொடியில் மனம் கல்லாக இறுகிப் போனது. தண்ணீரற்ற அகழியை முதலில் கடந்து முன்புற பாதுகாப்பு கோட்டைவாயில் வழியாக நுழைந்து திப்பு என்ற மாவீரன் வாழ்ந்த இடத்திற்கு
சென்றோம். முதலில் என் மணைவியின் வேண்டுகோளுக்கிணங்க
ஸ்ரீரங்கநாதர் கோவிலை வேண்டாவெறுப்பாக சுற்றிவிட்டு , திப்புவின்
நினைவிடத்திற்கு செல்லுவோம் எனது ஓட்டுனரிடம் கூறினேன். மனமும் கண்களும் , திப்பு இறுதியாகப்
போரிட்ட "நீர்வாயில்" (WATER GATE) எங்கே என்று தேடியது. எங்களது கார் நீர்வாயிலை நோக்கி
மெதுவாகச் சென்றது . அங்கே இருவர் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்.
இப்போது நீர்வாயிலைப் பார்க்க பார்வையாளர்கள் அனுதிக்கப்படுவதில்லை என்று ஓட்டுனர் தெரிவித்தார். அதனால் வெளியில்
நின்று பார்க்க சிறிது நேரம் வண்டியை நிறுத்துமாறு கூறினேன்.
எனது கண்கள் நீர்வாயிலை நோக்கின; அங்கே துரோகியாக
மாறிவிட்ட நிதி மந்திரி மீர்சதிக்கினால்
திறந்து விடப்பட்ட நீர் வாயில் வழியாக நுழைந்த
ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு போரிட்டுக் கொண்டிருப்பது
எனக்குத் தெரிந்தது. கண்களில் கனல் தெறிக்க எதிர்பட்ட வெள்ளையர்களை வெட்டி வீழ்த்திக்
கொண்டேயிருந்தான். கைகள் ஓயும்வரை வெட்டினான். எங்கும் பிணக்குவியல்கள் . அவனுக்கும்
உடலெங்கும் இரத்தக்காயங்கள் , எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக்குண்டுகள்
திப்புவின் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தன.
அவனது கையில் இருந்த கத்தி நான்கு புறமும்
சுழல்கிறது. என் கண்கள்
முன்னாலேயே அவனது உடல் மெதுவாக சாய்கிறது.
நீர்வாயிலைச் சுற்றி நடந்த அந்தப் போரில் தனது 11000 வீரர்களுடன் சேர்ந்து
எதிரிகள், தனது
சகோதரர்கள் என்று பல உய்ரற்ற உடல்களுக்குள் சாய்ந்தான் விடுதலைப்போரின் விடிவெள்ளி
மாவீரன் திப்பு சுல்தான்.
அந்த நாள் 04-05-1799. இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் என்பதை முதலில் வெளிப்படுத்திய அம்மாவீரனின்
சகாப்தம் நிறைவிற்கு வந்தது. வாழ்நாள் முழுவதும் தனது நாட்டு மக்களின்
நல்வாழ்விற்க்காகவே வாழ்ந்தும் , ஜாதி மதமற்ற ஒரு
சமுதாயத்தை நிறுவ நினைத்த ஒரு மாமனிதனின்
கனவு அங்கே முறிந்து கிடந்தது.
அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் இப்போது
வரலாறாகிப் போனது. அந்த சிறிய நினைவுத் தூணிற்கு முன்பு நான் மௌனமாக நின்றபோது மானசீகமாக
அவனை நினைவு கூர்ந்தேன். ஸ்ரீரங்கபட்டினம்
வீழ்ந்த அந்த கொடிய இரவு மனதில் காயத்தை ஏற்படுத்தியது. எனது காலங்கடந்த
நன்றி எனக்கு
குற்ற மனப்பான்மையை தந்தது. நான் திரும்பும் போதும் வானம் இன்னமும் நீர்த்
தாரைகளைப் ஸ்ரீரங்கபட்டினம் முழுவதும் பொலிந்து கொண்டுதான் இருந்தன.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீரங்கபட்டினம்
வீழ்ந்த அன்று
இரவு முழுவதும் கடும்மழை பெய்தது என்று
வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment