Friday 5 June 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-6

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

அதிகாரம்: காலம் அறிதல்

குறள்: 490

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
மு.வ உரை:

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
கலைஞர் உரை:


நம்நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகும் நம் மனதிலே பெரும் துயரத்தையும் , ஆழமான வடுவையும் ஏற்படுத்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வு என்பது 13/04/1919 ந் தேதி அமிர்தசரசிலுள்ள (பஞ்சாப்) ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், ஜெனரல் ஹாரி டயரால் நடத்தப்பட்ட  "ஜாலியன் வாலாபாக் படுகொலை" தான்.

இந்திய மக்களின் பேச்சுச்சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் மற்றும்  ஊர்வலம் செல்லும் சுதந்திரம் போன்றவற்றைத் தடை செய்யும் ரௌலட்சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது பஞ்சாப் மாநில கவர்னராக இருந்தவர் கொடுமையே உருவான சர் மைக்கேல் ஒ டயர் என்பவர். இவரின் உத்தரவின் படி தான் ஜெனரல் ஹாரி டயர், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 10 நிமிடங்களுக்குள் 1650 தடவை சுட்டு,  சுமார் ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தான். ( அரசாங்க அறிவிப்பின் படி 379 பேர்கள்). பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என்று 2000 பேர்கள் குண்டடிபெற்று காயம்பட்டிருந்தார்கள். அந்த மைதானம் முழுவதும் உடல்கள் சிதறிக்கிடந்தன , இரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மைதானமே ஒரு சுடுகாடாகக் காட்சியளித்தது.

அந்த கொடுமையான நிகழ்ச்சியை அறிந்த ஒரு பத்தொன்பது வயது வாலிபன் அன்று இரவு தன் பள்ளித் தோழர்கள் சிலரை அழைத்துக்கொண்டு இருள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்திற்குள் சிறு விளக்கோடு புகுந்தான். குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல சகோதர,சகோதரிகளுக்கு தண்ணீர் கொடுத்தான். தண்ணீரைக் குடித்துவிட்டு சிலர் உயிரை  விட்டனர், பலர்  தெளிவு பெற்றனர். தெளிவு பெற்றவர்களை விசாரித்து அவர்களது உறவினர்களிடம் சேர்க்கும் பணியை இரவு முழுவதும் செய்தான். எரிமலை போன்று மனதில் எழுந்த கோபம் அவனுக்குள்  பெரும் வைராக்கியத்தைக் கொடுத்தது. மைதானத்தில் கிடந்த இரத்தக்கறை படிந்த மண்ணை அள்ளி தனது துணியில் முடிந்துகொண்டான். என் தாய் நாட்டவர்களை சுட்டுப்பொசுக்கிய  அந்த கொடூரமனம் கொண்ட பாவிகளை பழி வாங்கியே தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டான். அவன் தான் ஷாகித் உத்தம்சிங்.

உத்தம்சிங்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சுனாம் என்ற கிராமத்தில் இரயில்வே துறையில் பணிபுரிந்த டெகல்சிங் மற்றும் நாராயணிகௌர் என்பவர்களுக்கு 26/12/1899 ந் தேதி பிறந்தான் உத்தம்சிங் . சிறு வயதிலே பெற்றோர்களை இழந்த அவன் அமிர்தசரசில் உள்ள " புத்திலிகர்" என்ற அனாதைவிடுதியில் சேர்ந்து உயர்நிலை கல்விவரை கற்றுத் தேர்ந்தான். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவனை மிகவும் பாதித்தது. இங்கிலாந்து திரும்பிவிட்ட சர் மைக்கேல் ஒ டயர்  மற்றும் ஜெனரல் ஹாரி டயர் ஆகிய இருவரையும் எப்படி பழி வாங்குவது , இலண்டன் எப்படி செல்வது என்று சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தான். இறுதியாக 1921 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் கப்பலில் பணியாளராக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் 1921 இல் அங்கிருந்து அமேரிக்கா சென்று , அதன் பிறகு அமெரிக்காவிலுள்ள இந்திய மாணவர்களின் உதவியின் மூலமாக இன்ஜினியரிங் பயிலும் மாணவன் என்று கூறிக் கொண்டு 1923 இல் இங்கிலாந்து சென்றான். அங்கே இலண்டன் தெருக்களிலே இரையைத் தேடும் புலியைப்போல் அவர்கள் இருவரையும் தேடி பல நாட்கள் அலைந்தான். ஐந்து ஆண்டுகளும் கழிந்தது . இன்ஜினியரிங் கல்வியும் முடிந்தது. ஆனாலும் இரண்டு டயர்களையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.  அந்தத் தருணத்தில் இந்தியாவில் ( 1928 இல்) லாகூர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த  பகத்சிங் , உத்தம்சிங்கை உடனடியாக இந்தியா வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தான். தன் உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று உத்தம்சிங் இந்தியா வந்தான்.

ஒரு நாள் போராட்டத்தின் போது , அவனிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி இருந்ததால் போலீசில் சிக்கிக் கொண்டான். ஆயுதத்தடைச்சட்டம் அப்பொழுது அமுலில் இருந்ததால் லாகூர் போலிஸ் அவனுக்கு ஆயுதத்தடைச்சட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை கொடுத்தனர். சிறையிலுருந்து 1932 இல் விடுதலையான உத்தம்சிங்கின்  மனம் முழுவதும் இங்கிலாந்தில் இருந்தது. போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனி தப்பிச் சென்றான் . பிறகு அங்கிருந்து இலண்டன் செல்வதற்கு சிரமம் ஏற்படவில்லை. இப்பொழுது,  கார் மெக்கானிக் பயிற்சி பெரும் மாணவன் என்று கூறிக்கொண்டு இலண்டன் சென்று அங்கே ஒரு பயிற்சிக் கூடத்திலும் சேர்ந்து கொண்டான். உணவிற்கும் , பயிற்சிக் கட்டணம் கட்டுவதற்கும் மற்றும் உடைகள் வாங்குவதற்கும் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தான். இரவில் தூங்கும் பொழுது ஒவ்வொருநாளும் ஜாலியன் வாலாபாக் காட்சிகள் அவனது மனதில் நிழலாடும். மனதில் வலியுடன் ஊக்கமும் வலுப்பெறும். காத்திருந்தான். இடையில் ஜெனரல் ஹாரி டயர் காச நோயின் பிடியில் சிக்கி மரணமடைந்தான்.

அந்தத் தருணமும் வந்தது. ஆம்! 13/04/1940 இல் இலண்டனிலுள்ள காக்ஸ்டன் ஹாலில் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சர் மைக்கேல் ஒ டயர்  மற்றும் லார்ட் ஷெட்லாண்டு ( இங்கிலாந்தின் கிழக்கு ஆசியாவிற்கான வெளியுறவு மந்திரி)  இருவரும் வந்தனர். உத்தம்சிங் ஓசைபடாமல் கூட்டத்தில் புகுந்து மேடைக்கு முன்புறத்தில் உள்ள நான்காவது வரிசையில் அமர்ந்து கொண்டான். சர் மைக்கேல் ஒ டயர்  பேசி முடித்ததும் இருக்கையில் அமருவதற்காக திரும்பினார். இது தான் தருணம் என்று கருதிய உத்தம்சிங் பளிச்சென்று மேடையருகில் பாய்ந்து சென்று ரிவால்வாரை எடுத்து ஆறு முறை சுட்டான். டயரின் கதை முடிந்தது. பின்னர் மேடையில் உட்கார்ந்திருந்த லார்ட் ஷெட்லாண்டு மற்றும் அனைவரையும் நோக்கி சகட்டுமேனிக்குச் சுட்டான். ஜெனரல் டயர் கூறியது போல் ஆசை தீரச்சுட்டான் . இருபத்தொரு ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்து தனது சபதத்தை நிறைவேற்றிய திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. உத்தம்சிங் துளியும் தப்பியோட முயலவில்லை. அமைதியாக சரணடைந்தான். நீதி விசாரணை நடந்தது. உத்தம்சிங் லண்டன் நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இறுதியாக உத்தம்சிங்கிற்கு ஆங்கிலேய நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.  அவன் 31/07/1940 ஆம் தேதி பெண்டோன்வில்லி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான். உத்தம்சிங் தனது பெயரை லண்டன் நீதிமன்றத்தில் "ராம் முகம்மது சிங் ஆசாத்" என்று குறிப்பிட்டது இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஜாதி, மத மற்றும் இனஉணர்வுகளை கடந்த ஒற்றுமையையும், எழுச்சியையும் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.  அந்த மாவீரன் உத்தம்சிங்கை அடையாளம் காட்டுகிறது இக்குறள்.


No comments:

Post a Comment