Monday, 22 January 2018

தந்தையின் மரணம்.

கடந்த ஞாயிற்று கிழமை அதாவது  07-01-2018 ந்தேதி  இறந்த  என் தந்தையின் இறுதி சடங்கை  முடித்துவிட்டு  அப்போது தான் மதுரையிலுள்ள என் வீட்டிற்கு வந்திருந்தேன்.  இரவு மணி பத்து. சல சலவென்று  மழை. என்ன திடீரென்று மார்கழியில் மழை செய்கிறது என்றாள் என் மனைவி. என் ஆழ்மனதில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நினைவுகள் விழித்துக் கொண்டன.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  ஓர் இரவு. காற்று , இடியென்று எந்த சப்தமுமில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. பத்தடி நீளமும் , எட்டடி அகலமும் உள்ள அந்த குடிசைக்குள் என்னையும் சேர்த்து   என் குடும்பத்தினர் ஒன்பது பேர்கள்  தூங்கிக் கொண்டிருந்திருந்தோம். குடிசையின் மேற்க்கூரையில் இருந்த  பல ஓட்டைகளில் இருந்து  மழை நீர் தாராளமாக சொரிந்து கொண்டிருந்தது. என் அம்மா ஆங்காங்கே பாத்திரங்களை வைத்து மழை நீர் குடிசைக்குள் பரவாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

நான் படுத்திருந்த அந்த கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தேன். அதற்கு கீழே படுத்திருந்த என் இரு தம்பிகளும் குளிரில் புரள்வது எனக்குத் தெரிந்தது. என் தந்தை குடிசையின் கதவோரத்தில் ஒரு சணல் சாக்கை போர்த்திக் கொண்டு உட்க்கார்ந்து கொண்டிருந்தார்.  மனம் முழுவதும் வலி. பல லட்சம் மதிப்புள்ள பளிங்கு  மாளிகையில்  இன்று நான் படுத்திருந்தாலும் என் மனதை விட்டு நீங்காத காட்சி அது. 

என் குடும்பத்தில் நானே மூத்தவன். அப்போது , மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையில் ஒரு தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்திருந்தேன். அடுத்த நாள் எனக்கு பெண் கொடுக்கும் உறவினர்கள் வர இருப்பதால் என் சொந்த ஊருக்கு வருமாறு என் தந்தை கூறியிருந்தார்.  நல்ல குடும்பம் ; வசதியானவர்களும் கூட. ஆனால்.. இந்த ஏழ்மை  நிலையிலா ?. 

அடுத்த நாள் காலை என் தந்தையின் முடிவை மறுதலித்தேன். முதலில் ஒழுகாத ஒரு வீடு எனக்கு வேண்டும். அடுத்து , திருமணத்திற்கு காத்திருக்கும் என் இரு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.  வாழ்க்கையில் நான் மிகவும் தடுமாறிப்போய் தவித்துப் போன  முதல் இரவு அதுதான் என்று எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

என் தந்தை சுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத நேர்மையான மனிதர். அதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். அந்தக்காலத்திலேயே பத்தாவது வரை படித்திருந்தார். இருந்தாலும் எந்தப்பணியிலும் சேரவில்லை. ஒரு முறை போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ,  ஆனால் என்னுடைய தாத்தாவின் மறுப்பினால் அவர் அப்பணியில் சேரவில்லை என்றும் பின்னர் தெரிந்து கொண்டிருந்தேன்.  சிறிது நிலம் இருந்தாலும்  வானம் பார்த்த நிலம் என்பதால் விவசாயமும் சரிப்பட்டு வரவில்லை. அதனால் வறுமையிலே எனது குடும்பம் தத்தளித்து வந்துள்ளது. அதனால் எனது சுமை மிகப் பெரியதாக இருந்தது.

எனது தந்தையின் வறுமை நிலையின் காரணமாக நானும் , என்  தம்பி இராஜேந்திரனும் எனது தாய்வழித் தாத்தாவான வேலாண்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தோம்.  அவரே எனக்கு தந்தையாகவும்  , ஆசிரியர் மற்றும் நண்பனாகவும் இருந்தவர்..  அவரிடமிருந்தே அன்பு, பாசம், நேர்மை , உண்மை மற்றும் உழைப்பு போன்றவற்றை கற்றிருந்தேன். என் எல்லா வெற்றிகளுக்கும் பின்னே " வேலாண்டி " என்ற மாமனிதன் தான் இருக்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.

உண்மையில் ,  என் குடும்பத்தில் நானே அதிருஷ்டசாலியும் கூடவே துரதிருஷ்டசாலியாகவும் வாழ்ந்து வந்திருக்கிறேன்.  அளவோடு குழந்தை பெற்றுக் கொள் என்ற அனுபவத்தைத் தவிர வேறு எதையும் என் தந்தையிடமிருந்து நான் எதையும்கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் , அவரது மரபணுக்குணமான நேர்மையும் , உண்மையும் எனக்குள் வந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

என் குடும்பத்தின் இழி நிலை எனக்குப் புரிந்ததும் , என்னுள் வைராக்கியம் பிறந்தது. முதலில் ஒரு வீடு கட்டவேண்டும் ; தங்கைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் , தம்பிகளை படிக்க வைக்க வேண்டும். அதன் பிறகே நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்  இரண்டு தங்கைகளின் திருமணம் நடந்தது;  மிகப்பெரிய ஓட்டுவீட்டையும் கட்டினேன்.  என் தம்பிகளை படிக்க வைத்தேன். என் ஒரு தம்பி தொழிக்கல்வி கற்று நல்ல வேலையில் சேர்ந்தான். ஏழ்மை நிலையிலிருந்த என் குடும்பம் நடுத்தரத்திற்கு உயர்ந்தது. 

இதற்கிடையில் எனது தாய்மாமனின் மகளை நான்  திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் எனது குடும்பம் மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. என் குடும்பத்திற்கு தூரமாகிப் போனேன். நான் விரும்பிய பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தை உதவவில்லை என்பது மட்டுமில்லாமல் , அந்த பெண்ணிற்கு அவரால் துன்பம் நேர்ந்து விட்டது என்பதும் எனக்கு  ஆழமான வருத்தத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஒரு நிகழ்வைத் தவிர என் தந்தையிடம் எந்தத் தவறையும் நான் அறியவில்லை.

1989 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. இது, என்னை தவிர என் குடும்பத்தில் யாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.  தனது அண்ணன் மகளை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற வருத்தம் இப்போதும்  என் தாயிற்கு உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் நான் பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்தேன்.

ஒருமுறை என் தம்பி இராஜேந்திரனிடம் ரூபாய் 2000/- கடன் கேட்டேன்! அவன் மறுத்துவிட்டான். எந்தக் குடும்பத்திற்க்காக நான் வாழ்ந்து வந்தேனோ அந்தக் குடும்பமே  என்னை பாரமாக நினைத்தது. என் தந்தை உட்பட யாரும் உதவ முன்வரவில்லை. நான் துவண்டு போன காலங்கள் அது. குடும்பத்திற்கான என் பங்களிப்பிற்கு மதிப்பளிக்கவில்லை என்ற மனக்குறைக்குறை எனக்கு ஏற்பட்டது  .

ஆனால், இது எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத் தந்தது. யாரையும் சார்ந்திருக்காதே என்ற அனுபவத்தை  எனக்கு கற்றுக் கொடுத்தது.. எனக்கு உதவாமல் மறுத்ததின் மூலம் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுத்தான் என் தம்பி.  வாழ்க்கையில் உயர மேலும் உழைக்க வேண்டும் என்று உத்வேகத்தை கொடுத்த தருணம் அது.



விழித்துக் கொண்டேன். படித்தேன்! படித்தேன்! ... உழைத்தேன்! உழைத்தேன்! . பதவி உயர்வு , பணம், வீடு அனைத்தும் தேடி வந்தது. இன்று நான் மிக மிக உயரத்தில்!!!. தன்னிறைவான மனிதனாக இருக்கிறேன். இதற்கு காரணமான என் தம்பிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு வேளை அவன் எனக்கு உதவி செய்திருந்தால் , தம்பி இருக்கிறான் என்ற தைரியத்தில் நான் சோம்பேறியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனாலும் , இப்போதும் மழைநீர் ஒழுகிய அந்த குடிசை என் மனதை விட்டு நீங்கவில்லை. உன்னிடம் இருக்கும் அதுவும் நிரந்திரமில்லை. மாறக்கூடியது சொல்லிக் கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் , என் தந்தைக்கு உடல் நலமில்லை என்று செய்தி  வந்தது. அவரது மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில்  வெடிப்பு ஏற்பட்டு  , ஒருபக்கவாதம் உருவாகி ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் உடல்நலமில்லாமல் இருந்த அனைத்துத் தருணங்களிலும் நான் அவர் கூடவே இருந்திருக்கிறேன். ஒரு மகனுக்குரிய கடமையை செய்திருக்கிறேன்.  அவர் நலமாகி எழுந்து வந்துள்ளார்.  ஆனால் , இந்த முறை, நான் 2000 மைல்களுக்கு அப்பால்! .  எனக்கு தெரிந்து விட்டது; எனது தந்தை தனது இறுதி பயணத்திற்குத் தயாராகி விட்டார். என்னால் உடனடியாக வர இயலவில்லை. எந்த பதவி , பணத்தையும் வசதியையும்  எனக்கு கொடுத்ததே , அதுவே எனக்குத் தடையாகவும் இருந்தது. அவர் இறக்கும் போது அவரது மூன்று மகன்களில் ஒருவர் கூட அருகில் இல்லை. மிகவும் துர்பாக்கியசாலி. ஆனாலும், என் தந்தை  இறக்கும் தருணத்தில் கட்டாயம் என்னை நினைவு கூர்ந்திருப்பார். 

எந்த மண்ணில் என் தந்தை உருண்டு புரண்டாரோ அதே மண்ணில் இன்று   புதைக்கப்பட்டுவிட்டார். அவர் சேர்த்து வைத்திருக்கும் சிறிதளவு சொத்தை பிரிப்பதற்காக அவரது குழந்தைகள் தயாராகி வருகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு என்னுடைய கடைசி தம்பிக்கு கூறிவிட்டு வந்துவிட்டேன். இந்த மண்ணை விட்டுப் போகும் போது நாம் எதையும் எடுத்துக் கொண்டு செல்லப்பபோவதில் என்று நன்றாகத் தெரியும்.


வீட்டின் வெளியே மழை நின்றிந்தது.

Saturday, 11 November 2017

சொல்லத் தோன்றுகிறது!

அப்போது இரவு  எட்டு  மணி. இதமான குளிர் காற்று முகத்தில் பரவி புத்துணர்ச்சியைத் தந்தது  .   என்னுடைய நண்பர் சதாசிவனி என்னை பார்க்க வந்திருந்தார். அதனால் வீட்டிற்கு வெளியே நின்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் எங்களைக் கடந்து சென்றார்.

சதாசிவனி, அந்தப் பெண்ணை பாருங்கள் என்றார். பார்த்தேன். அவளுக்கு வயது முப்பது இருக்கும் ; பெண்கள் அணியும் ஜீன்ஸ் கால்சாராய் அணிந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தார்.  ஆனால் , அந்த முகத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சோகம் படிந்துள்ளதாக எனக்குத் தோன்றியது. ஓரிரு நிமிடத்தில் அவள் எங்களைக் கடந்தும் சென்று விட்டாள். 

சதாசிவனி, அந்தப்பெண்ணை ஒரு “விலைமாது” என்று குறிப்பிட்டார்.  என்னால் நம்ப  முடியவில்லை. உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற வேள்வியை எழுப்பினேன் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் இருவரின் வீடும் அருகருகில் தான் இருந்தது. இந்தப்பெண்ணின் நடவடிக்கை பிடிக்காமலே நான் வேறு வீட்டிற்கு சென்று விட்டேன் என்றார்.

என் நண்பர் சதாசிவனி மிகவும் ஒழுக்கசீலர். நேர்மையானவர். அளவுகடந்த கடமையுணர்வு உள்ளவர்.  தனது எண்பத்தி ஐந்து வயதான தாயை மிகவும் கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாத்து வருபவர். தனது தாயை  வீட்டை வெளியேற்றி விட வேண்டும் என்று கூறிய  மனைவியையே விவாகரத்து செய்து விட்டவர். அதனால் அவர் வார்த்தையை சந்தேகப்பட முடியாது. மனம் வலித்தது .

அடுத்து அவர் கூறியது   தான் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது . அந்தப் பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர் . கணவர் ஒரு வியாபாரி. அவரின்  வியாபாரம் நொடித்துப் போனதால் , தனது குழந்தைகளை வளர்ப்பத்ற்காகவும் இன்னபிற தேவைகளுக்காகவும் இந்த பெண் இவ்வாறான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் அவரது கணவரும் இதை அனுமதித்து இருக்கிறார் , அவரது விருப்பத்தின் பேரிலே அவள் விலை பொருளாகி இருக்கிறார் என்பது தான்..  

தனது காதல் கனவுகள் சிதைந்து நரக வாழ்க்கையில் தள்ளப்பட்ட அந்தப் பெண்ணிடம் எப்படி சந்தோசம் இருக்கும். அவள்  முகத்தில் படர்ந்திருந்த சோகத்தின் கதை இப்போது எனக்கு சரியாக புரிந்தது. எனக்கு தெரிந்த வரை இல்லற வாழ்வு தோல்வி அடைந்த எல்லாக் குடும்பங்களிலும் பெண்களே தண்டனை அனுபவிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இது ஒரு சமூக நோய். இத்தகைய பரிதாப நிலை  களைந்து எரிய படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் எப்படி?. அந்தப்பெண்ணின் சீரழிந்த வாழ்வு அவளை மட்டுமல்லாமல் , அவளுடன் தொடர்பில் இருக்கும் அனைவரையும் பாதிக்குமல்லவா? இதற்கான தீர்வு தான் என்ன?. எனக்குத் தெரியவில்லை.  


நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை நடைபயிற்சியின் போது   அந்தப்பெண்ணைப்  பார்த்தேன். அவரது  மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டிய வாகனத்திற்காக காத்திருந்தார். தமது இரு கரங்களுக்கும் இடையே அமர்ந்திருந்த மகனின் தலையில்,  கண்களில்  பாசம் மிளிர  கொள்ளை  அழகுடன் முத்தமிடத்தைப் பார்த்தேன். அங்கே ஒரு தாய் தான் என் கண்களுக்கு தெரிந்தாள்; விலைமாதல்ல!





Saturday, 12 August 2017

நானும் ஹோமியோபதியும்

நானும்  ஹோமியோபதியும் 

I

இன்று மருத்துவ உலகம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. மக்களை பல்வேறு உயிர்கொல்லி  நோயிலிருந்து பாதுகாக்க  அலோபதி மருத்துவம், ஹோமியோபதி , சித்தா, ஆயுர்வேதம் ,யுனானி , அக்குப்பஞ்சர் மற்றும் அக்குப்பிரசர் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் அதனதன் போக்கில் செயல்படுகிறது. இருந்தாலும் மனிதர்களுக்கு மரணம் என்பது சாசுவதமானது!. உலகில் உருவான எல்லா உயிரினங்களும் ஒரு நாள் அழியக் கூடியதே!. ஆனாலும் மக்கள் மரணத்தைக் வென்று நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும்,  ஒவ்வொரு மனிதனும் அவனது மனதையும் , உடலையும்  பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வது என்பது இன்றைய சூழ்நிலையில் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அவ்வாறு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனம் மற்றும் உடல் சார்ந்த மருத்துவ அறிவும் , விழிப்புணர்வும் அவசியம் தேவை என்று கருதுகிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி என்ற சிறிய நகரத்தில்  மத்திய அரசு அலுவலகத்தில் நான் பணியில் இருந்தேன். கனிந்த இதயம் படைத்தவர்களையும், கடும் உழைப்பாளிகளையும் , கரடு முரடான மனிதர்களையும் தன்னகத்தே கொண்ட ஊர் அது.  பிரம்மச்சரிய  வாழ்க்கை என்பதால் ஹோட்டல் சாப்பாடு தான் . அதனால் வயிறு பாடாய் படுத்தியது. நல்ல உடற்பயிற்சி செய்த உடம்பு என்பதால்  மருத்துவமனைக்கு சென்ற அனுபவமெல்லாம் அதுவரை இல்லை. இருந்தாலும் தொடர்ச்சியான அசைவ உணவும் , இரவுப்பணியின் காரணமாக தூக்கமின்மையும் எனது வயிற்றைக் கெடுத்துவிட்டது. ஒரு நண்பரின் பரிந்துரையின்படி உசிலம்பட்டி பேரூந்து நிலையத்தின் அருகில் இருந்த அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அந்த மருத்துவமனைக்கு பெயர் பலகை இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. பத்தடி நீளமும் , ஆறடி அகலமும் கொண்ட குறுகலான இடம் அது. அதன் நடுவில் இருந்த மேஜை முன்பு வெள்ளைச் சட்டை அணிந்திருந்த அந்த மருத்துவர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். தலை முழுவதுமாக நரைத்து இருந்தது . அவரைப் பார்த்ததும் , எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டது . அதற்குக் காரணம் , அவருக்குப் பின்னால் இருந்த அந்த  பெரிய புத்தக அலமாரிகள். அவருக்கு பின்புறம் இரண்டு , வலது பக்கம் ஒன்று என்று மொத்தம் மூன்று புத்தக அலமாரிகள்.  மற்றும் இடது பக்கம் கருப்பு நிறத்தில் மருந்து பாட்டில்களை உள்ளடக்கிய ஒரு உயரமான அலமாரி. அதனால் அவர் உண்மையிலேயே  ஒரு சிறந்த அறிவாளியாகத்தான் இருக்க  வேண்டும் என்று எனது  மனம் நம்பியது. பிற்காலத்தில் எனக்கு பின்னாலும் அத்தகைய புத்தக அலமாரிகள் இருக்கப் போகிறது என்று அப்போது தெரியாது . ஆம்! அது ஒரு ஹோமியோபதி மருத்துவமனை . அந்த மருத்துவரின்  பெயர் எனக்கு நன்றாக  ஞாபகம் இருக்கிறது!.  ஆம், அவர் சாந்தகுமார்!. அவரது சிகிச்சையில் அப்போது என்னுடைய வயிற்று தொந்தரவு சரியாகவில்லை என்றாலும் ஹோமியோபதி என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது என்பது ஆச்சரியமான ஒன்று!


அதன் பிறகு , 1983 ஆம் ஆண்டில்  ஒரு நாள் எனது குடும்பத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவம் ஏற்பட்டு விட்டது .  எனது இரண்டாவது தம்பியை   வலிப்பு நோய் தாக்கியது . அப்போது , அவன் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான் . மிகவும் புத்திசாலி. வகுப்பில் அவனே முதல் மாணவன், அவனுக்கு , மதுரையில் இருந்த சிறந்த மனநல மருத்துவர் சபேசனிடம் தான் சிகிச்சை எடுத்தோம் . அவர் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டும் என்று சில மருந்துகளை பரிந்துரை செய்தார். அது ‘எப்டாயின்’ மற்றும்  ‘டெக்கிரிடால்’ என்ற மருந்துகள் தான். இன்றும் இந்த மருந்துகளே வலிப்பு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று தெரிகிறது.  சில சமயங்களில் வலிப்பு நோயின் அதிதீவிரத் தாக்குதலால் மூளைக்குழப்பம் ஏற்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டியதும்  வந்தது. அந்த மாதிரி சமயங்களில் பத்து நாட்களுக்கு உள்நோயாளியாக சிகிச்சை எடுக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவனை  கார்டினால் ஊசி மருந்து கொடுத்து தான் தூங்க வைக்க முடியும்.  இப்படி வருடத்திற்கு இரண்டு தடவையாவது நிகழ்ந்து விடும். எனது சிறிய வருமானத்தில் என் தம்பியின் மருத்துவச் செலவும் குடும்ப நிர்வாகமும்  மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் ,  எனது சகோதர பாசத்திற்கு முன்பு அதெல்லாம் எனக்கு சிரமமாகத் தோன்றவில்லை.  ஆனால் , அப்போது அவனுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில்  சிகிச்சை கொடுக்கலாம் என்று ஏன் எனக்கு தோன்றவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது!. இருந்தாலும் இந்த மாதிரியான மன நோய்களில் ஆங்கில மருத்துவத்தில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வசதி இல்லாமல் பல குடும்பங்கள் இன்றும்  தற்கொலை செய்துகொள்வதை நாம் பத்திரிக்கைகளில் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம்.


அதன் பிறகு 1991 ஆண்டு என்று கருதுகிறேன். எனது தாய்மாமனின் 12 வயது  மகனுக்கு வயிற்றுவலி இருந்தது. அவனை மதுரையிலுள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது வலது பக்க சிறுநீரகத்தில் கட்டி உருவாகி, சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதித்திருந்தது. அதனால் அதை நீக்கிவிட வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். இடதுபக்க சிறுநீரகம் நன்றாக செயல் படுவதாகவும் , அதனால் உயிர் வாழ்வதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தார்கள். 

ஆனால் நடந்தது என்னவோ மிகவும் துரதிருஷ்டமான முடிவு. அறுவை சிகிச்சை செய்து வலது பக்க சிறுநீரகத்தை நீக்கிய பிறகு , இடது பக்கச் சிறுநீரகம் அந்த அதிர்ச்சியில் செயல் படாமல் போய்விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள் . எவ்வளவோ மருத்துவம் செய்தும் அந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்க முடியவில்லை.  மாற்று சிறுநீரகம் பொருத்துவது தான் சரியானது என்பது தெரிந்து விட்டது. ஆனால் அதற்கு அதிகப்பணம் தேவைப்பட்டது. ஏற்கனவே இரண்டு லட்சத்திற்கு மேல் செலவாகி இருந்தது. மேலும் பல லட்சங்களை செலவு செய்யக் கூடிய வசதியும் ஏழை விவசாயியான என் மாமனிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் , மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை செய்த பிறகு அந்த சிறுநீரகமும் சரியாக செயல்படத் துவங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. எங்கள் குடும்பமே பெரும் துயரத்தில் ஆழ்ந்தது.

மனம் முழுவதும் வேதனையைச் சுமந்து கொண்டு , மருத்துவமனையிலிருந்து அவனையும் சுமந்துகொண்டு வீடு திரும்பினோம். அவன் இறக்கப் போகிறான் என்று தெரிந்தும் மருத்துவத்தைத் தொடர முடியாமல்  அவனை வீட்டிற்கு அழைத்து வந்ததை   என்னால் தாங்க முடியவில்லை . என் கரங்களில் தவழ்ந்த அந்த அழகான குழந்தை , எங்களால் காப்பாற்ற இயலாமல்  கைவிடப்பட்டு மரணித்தது. என் மனதில் ஆழமாக பதிந்து விட்ட அந்த வலி இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த  பிறகும்  இப்போதும் இருந்து கொண்டே உள்ளது  . அந்த வலி தான் ஹோமியோபதியை  நான்   ஆழமாக  கற்றுக்  கொள்வதற்கும்  , உயிராக   நேசிப்பதற்கும்  உந்து   சக்தியாக   இருக்கிறது .




II


ஹோமியோபதி மருத்துவ அறிவியலறிவு  எனக்கு கிடைப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் எனதருமை நண்பர் வி. பாலு தான். இத்தகைய நல்ல வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அவருக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். அது ஒரு சுவையான கதை.


1992 ஆம் ஆண்டு , நான்  உசிலம்பட்டியிலிருந்து மாற்றலாகி மதுரையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  என்னுடைய உற்சாகமான தொழிற்சங்கப் பணியினாலும் ,அனைவரிடமும் நன்றாக பழகும் தன்மையினாலும் கவரப்பட்ட  நண்பர் வி.பாலு ஒரு நாள் நீங்கள் எங்களது ஹோமியோபதி மருத்துவச்  சங்கத்தில் சேர்ந்தால் ஹோமியோபதி மருத்துவத்தை கற்பதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் சமூகத்திற்கும் தொண்டாற்ற முடியும் என்று ஊக்கப்படுத்தினார். ஏற்கனவே, எனது மைத்துனனின் மரணம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் என்னை யோசிக்க வைத்தது. அவரது ஆலோசனையை ஏற்றுக் ஏற்றுக் கொண்டு ,"தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்சங்கத்தில் இணைந்தேன். இப்படித்தான் “AProCH”  எனக்கு அறிமுகமானது.

ஆனால் இந்தச் சங்கத்தில் சேருவதற்கு  மற்ற சங்கங்களை போன்று சந்தா கொடுத்து  மட்டும் சேர்ந்து விட முடியாது.   அதற்கென்று உள்ள நிர்வாகக் குழுவினரால் , உறுப்பினராக சேர இருப்பவரை பேட்டிக்கண்டு , அவருக்கு சமூக சேவை செய்யும் மனப்பான்மையை இருக்கிறதா ? , பரந்துபட்ட வாசிப்பனுபவம் இருக்கிறதா? , இவரால் சங்கத்திற்கும் சமூகத்திற்கும் பயன் இருக்குமா ? என்றெல்லாம் சோதித்து பார்த்துத்தான் சேர்த்து கொள்வார்கள். ஒவ்வொரு  ஞாயிறு தோறும் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் சேவை மையத்தை நாடி வரும் அனைவருக்கும்  இலவசமாக மருத்துவ சேவை செய்வதும் , அதன் உறுப்பினர்களுக்கு ஹோமியோபதி விழிப்புணர்வுக் கல்வியைப் போதிப்பதும் அதனுடைய தலையாயப் பணியாகும்.

அதனால் தான் 1991 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்  சங்கம் கடந்த 26 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும்  தனது கிளைகளை உருவாக்கி மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் வித்திட்டு வருகிறது. இப்படித்தான் “தூய ஹோமியோபதி மருத்துவ பிரச்சாரச்சங்கம்” என்னையும் உள்வாங்கிக் கொண்டது.

கடந்த 23 ஆண்டுகளாக  நான்  தினமும் சுவாசிக்கும் மூச்சுக் காற்றோடு  , ஹோமியோபதியையும் சேர்த்தே சுவாசிக்கிறேன்.  எனது குடும்பம், நண்பர்கள் , பெரும்பாலான உறவினர்கள் அனைவரும் ஹோமியோபதி மருத்துவத்தின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் செல்லுமிடமெல்லாம்  மக்களிடம் ஹோமியோபதியின் சிறப்புகளை எடுத்தியம்பி , தேவைப்பட்டால் அவர்களுக்கு மருந்தளித்து நலப்படுத்தியும் வருகிறேன். அலோபதி மருத்துவத்தின் தீமைகளையும் , நவீன கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அவலத்தையும் , பணம் சம்பாதிப்பதே  ஒன்றே அவர்களின் குறிக்கோள் என்பதையும் எடுத்துக்கூறி அவர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறேன்.





குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பில்லாத பல பெண்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் அந்தத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்து  அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைத்திருக்கிறேன்.  சோரியாசிஸ் , புற்றுநோய்  மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற நோய்தாக்குதலுக்கு உள்ளான  எத்தனையோ துயரர்களுக்கு மருந்தளித்து நலப்படுத்தியிருக்கிறேன். எனது சிகிச்சையின் மூலம் நலம்பெற்ற பலரின் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு திருப்தியைக் கொடுத்திருக்கிறது அவர்கள் நெகிழ்ச்சியோடு கரம் கூப்பி நன்றி தெரிவிக்கும் போதெல்லாம் எனது வாழ்க்கை அர்த்தமுள்ளது என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


ஹோமியோபதி அறிவு என்னுள் சுடர்விட்ட பிறகு தான் எனது தனியியல்பு பண்பு, ஆளுமை, மற்றும் புரிதல் ஆகியவைகள் செழுமையடைந்திருக்கிறது. என்னுள் இருந்த தன்முனைப்பு , அகந்தை மற்றும் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு தூர விலகின. குறிப்பாக ,   என்னுள் முகிழ்த்த ஹோமியோபதி அறிவே என் துறை சார்ந்த போட்டித் தேர்வுகளில் என்னை வெற்றி பெற செய்து ,  எனது பதவி உயர்விற்கும் வித்திட்டது ; அதன் மூலம் எனது பொருளாதார நிலை உயர்ந்து சமூக அந்தஸ்து கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமல்லமல் இந்தியா முழுவதும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

இத்தனைக்கும் காரணம் ஜெர்மானிய மாமேதை சாமுவேல் ஹானிமன் [1755-1843] கண்டெடுத்து உலகிற்கு நல்கிய ஹோமியோபதி மருத்துவம் தான். அவர் இறந்த பிறகு பாரிஸ் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்ட  அவரது   கல்லறையில் " நான் வீணான வாழ்க்கை வாழவில்லை" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த வரிகள், அவர் எவ்வளவு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்பதற்கான அடையாளச்சின்னமாக இருக்கிறது.