Thursday, 27 December 2012

மனிதன்! மதம் !! சாதி !!!


சாதி ! இது , இந்திய துணைக் கண்டத்தில் மறக்கமுடியாத வார்த்தை ! மனித இனத்தை வருணப் பிரிவுகளாக பிளவுபடுத்தி வைத்திருக்கும் மந்திரச்சொல்!. பரிணாம வளர்ச்சியின் மூலம் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியவர்களை,  பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்தவர்களை,  மதத்தின் அடிப்படையிலும், சாதியின் பிரிவிலும்  ஒதுக்கி பிரித்து வைத்தக் கொடுமை எவ்வாறு ஏற்பட்டது?.  எத்தனை மதங்கள் ? சாதிகள், கடவுள்கள் இந்த உலகில்  உலவுகின்றன! இவற்றால் மனிதகுலத்திற்கு இலாபமா? அல்லது சாபமா? . மத்திய கிழக்கு ஆசியாவில், மதத்தின் பெயரால்  நடந்து முடிந்த சிலுவைப் போர்களை உலகம் மறக்கத்தான் முடியுமாஇருந்தாலும் பிற உலக நாடுகளில் பெரிதும் தலைதூக்காத இனப்பாகுபாடும் சாதீயமும் இந்தியாவில் மட்டும் வேர் விட்டு மரமாக வளர எது காரணமாக இருந்தது? . ஆழமாக பார்க்கவேண்டிய விசயம் இது!.

முதலில், ஆப்பிரிக்காவில் குரங்காகப் பிறந்து , மனிதனாக உருவெடுத்து, இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் உணவிற்காக  உலகின் மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தனர். அதனால் அவர்களுக்குள் பல்வேறு பிரிவுகளும், அந்தந்தப் பிரிவுகளுக்கு தலைமை தாங்க பலம்மிக்க தலைமையும் உருவானது. ஒவ்வொரு இனக்குழுவிற்கும் முதலில் ஒரு பெண்ணே தலைமை தாங்கி இருக்கிறாள்.  அவளுக்கு  தன் இணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்  முழு உரிமை இருந்தது. கூட்டுக் கலவி முறையில் வாழ்ந்த மக்கள் பின்னர் தங்களுக்கு இடையே உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு வாழத் துவங்கினர். மணஉறவு அந்தந்த குழுகளுக்கிடையிலேயே நடந்தது.  

உணவிற்காக முதலில் காட்டு விலங்குகளை வேட்டையாடத் துவங்கிய மனிதன், பின்னர் குதிரை, ஆடு மற்றும் நாய்கள்  போன்ற விலங்குகளை  வளர்க்கத் துவங்கி , அவைகளையே உணவாகிக் கொண்டான்.   ஒரு இனக்குழு வளர்த்த  விலங்குகளை அபகரிக்கத் துவங்கிய மற்ற இனக்குழுக்கள்  அத்துடன் அந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களையும் அபகரிக்கத் துவங்கினார்கள். அந்த குழுக்களுக்கு இடையே போட்டியும் சண்டையும் ஏற்பட்டன. அந்தந்த இனக்குழுவைக் காக்கவே தலைவனும், ஆயுதங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் தான் வலுவான ஆண் , அதிகாரத்தை பெண்ணிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். இவ்வாறு தான் ஆண் ஆதிக்கச் சமுதாயம் உருவானது!

ஒரு இனக்குழுவின் திறமையான தலைவன் அந்த இனக்குழுவைச் சேர்ந்த மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டான் , போற்றப்ப்பட்டான். அம்மக்கள், அவனுக்கு முக்கியத்துவமும் , மரியாதையும் கொடுத்தனர் .  அவன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். அவன் இறந்த பிறகும் , அவனது உருவம் சிலையாக வடிக்கப்பட்டு வணங்கப்பட்டான்! அவனுக்குப் பிடித்தமான உணவினை படையல் செய்து நினைவு கூர்ந்தனர்.  ஏற்கனவே , இயற்கை சக்திகளான சூரியன், மழை, காற்று மற்றும்  இடி போன்றவற்றைப் பார்த்து பயந்த வாழ்ந்த அம்மக்கள்அவைகளை மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்திகளாக உருவகப்படுத்தி வணங்க ஆரம்பித்திருந்தனர். அத்துடன் இந்தத் தலைவனையும் சேர்த்து வணங்கத் துவங்கினர். மதுரைவீரன், ஐயப்பன், அய்யனார் , முனியாண்டி மற்றும் கருப்பசாமி போன்றவர்கள் எல்லாம் மாபெரும் வீரனாக இருந்து கடவுளாக வணங்கப்பட்டவர்கள் தான். இவ்வாறு தான் உருவ வழிபாடும் , கடவுளும் , அந்தக் கடவுளுக்கான உருவமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு பயத்துடன் கூடிய ஒரு நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது. இதுவே ஆன்மிகம் மற்றும் மதம் என்ற கருத்துமுதல்வாதத்தின் துவக்கம். அதேபோல் , ஒரு இனக்குழுவின் தலைவன் கடைப்பிடித்த நல்ல கொள்கைகளும் , செயல்பாடுகளும் மற்றும் அனுபவங்களும் எழுதிவைக்கப்பட்டு பின்வரும் சந்ததியினர்களுக்கு சொல்லப்பட்டன. அவனது நம்பிக்கையும், பக்தியும்   அவனது குழுவில் இருந்த பூசாரிகளால் வேதங்களாகவும், உபநிடதங்கலாகவும்  பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவில் சாதிகள் எவ்வாறு உருவாகின?

இதற்கு கி.மு. 2000 இல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களும் , அவர்கள் உருவாக்கிய ரிக்,யசூர், சாம, அதர்வன  போன்ற வேதங்களுமே முழுப் பொறுப்பு! இந்த ஆரியர்களே பார்பனர்கள் அல்லது பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  அவர்கள் கடைப்பிடித்த வருணாசிரமக் கொள்கைகளே  இன்று நம் மக்களை சாதீயப்பிடிக்குள் சிக்க வைத்துள்ளன.  அவர்கள் வேதங்களை காரணங்காட்டி மனிதர்களை  பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று நான்கு வகைகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வேலைகளை செய்யவேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். இதில் சத்திரியர் அரசு/ஆட்சிப் பொறுப்பையும், வைசியர்கள் வணிகத்தையும் , சூத்திரர்கள் மற்ற மூன்று வருணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடிமைகளாக இருந்து , அவர்கள் பணித்த வேலைகளை செய்யவேண்டும் என்றும், சத்திரிய,வைசிக மற்றும் சூத்திர சாதியினரை இயக்கும் சூத்திரதாரியாக பிராமணர்களும் இருந்தனர்.  இந்தப் படிநிலைகளை இன்று வரை இந்து மதம் கடைப் பிடித்து வருகிறது என்பது கேவலமான உண்மை!,

இதற்கு எதிர்மறையாக , இந்து மதம் போதித்த வருணாசிரமக் கொள்கையை எதிர்த்து , தனிமனித ஒழுக்கத்தையும் , பண்புகளையும் உள்ளடக்கி உருவான சமண மதமும், புத்தமதமும் அதைத் தோற்றுவித்த மகாவீரர் மற்றும் கௌதமபுத்தர் இவர்களது மறைவிற்குப் பிறகு சில நூறு ஆண்டுகளுக்குள் மறைய ஆரம்பித்துவிட்டது. இதில் புத்தமதமே பொருள்முதல்வாத கோட்பாடுகளை கடைப்பிடித்த முதல் மதம் என்பதையும், புத்தரே இந்தியாவின் முதல் பொருள்முதல்வாதி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. புத்தமதத்தை ஆதரித்த மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கு  வித்திட்ட புஷ்யமித்திர சுங்கனுக்குப் பிறகு ஆரியர்கள் ஆதிக்கம் மேலோங்கி , வருணாசிரமக் கோட்பாடும் , சாதீயமும் தலை தூக்க ஆரம்பித்திவிட்டன என்பதை இந்திய வரலாறு தெளிவாகக் குறிப்பிடுகிறது.  

அதனைத் தொடர்ந்து , இந்து மதம் குறிப்பிட்ட  முதல் மூன்று வருணத்தாருக்கு அடிமையாக இருந்து  அவர்கள் விரும்பிய வேலையைச்  செய்த பலமிழந்த மக்களை தொடர்ந்து கீழான வேலைகளை செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பிறகு அவர்களது சந்ததினர் அந்த வேலைகளை செய்யப் பணித்தனர். மறுத்தவர்கள் தண்டிக்கப் பட்டனர். அவர்களது குடியிருப்பை  நகருக்கு வெளியே அமைத்து தனியாக வாழ பழக்கினார்கள். இப்படிதான் சேரிகள் உருவாகின.  அந்த மக்கள் , அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் சாதிகளாகப் பிரிக்கப்பட்டார்கள். உதாரணமாக , துணிகளை சுத்தப்படுத்தியவர்களை "வண்ணான்" என்றும் , பறை அடித்தவனை " பறையன்" என்றும் , சவரம் செய்தவனை "அம்பட்டன்" என்றும் , நிலங்களை சீர் செய்து உழவு தொழில் செய்தவனை "பள்ளன்"  என்றும் செருப்புத் தைப்பவனை " சக்கிலியன்" என்றும்  அழைத்தனர்.  மொத்தத்தில் அவர்கள் சூத்திரர்கள்!  

இப்படி காலங்காலமாக  சூத்திரர்களாக , கொத்தடிமைகளாக வாழ்ந்து வரும் மக்களே இன்று " தலித்துகள்" என்று அழைக்கப்படுகின்றனர்.  இதில் கொடுமை என்னவென்றால் , இந்த சூத்திரர்களுக்குள்ளே     நான் பெரியவன், நீ எனக்கும் அடிமை என்ற மனநிலையும் தொடர்ந்து இருந்து வருவது   தான். இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, சுரண்டப்பட்ட இந்த மக்கள் மீண்டெழ ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது! ஆம்! அது ஆங்கிலேயர்களின் இந்திய வருகை தான்  

ஆங்கிலேயர்கள்  இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய மட்டுமே  வந்தவர்கள் என்றாலும் , அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை, மக்களிடையே இருந்த புரையோடிப்போன  சாதி,மதப் பேதைமை, ஒற்றுமையின்மை போன்றவைகள் , அவர்கள் இந்திய ஆட்சியை கைப்பற்ற காரணிகளாக அமைந்தன .  அதற்கு பெரிதும் துணையாக இருந்தவர்கள் இந்த தலித்துகளே! இந்திய ஆதிக்க சமூகத்தால் அடக்கி, ஒடுக்கப்பட்டிருந்த இவர்களை  ஆங்கிலேயர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கவும், வீட்டு வேலைகளை செய்யவும் ஆரம்பித்த இம்மக்களை, ஆங்கிலேயர்கள் பின்னர் இராணுவத்திலும் சேர்த்துக்கொண்டார்கள். அவர்களுக்குத் தேவையான கல்வி அறிவினையும் கொடுத்தனர். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இத்தலித்துக்கள் சாதீய அடக்குமுறைகளுக்கு பதிலடியாக அதாவது இந்தியச் சகோதரர்களுக்கு எதிராக போரிடத் துவங்கினார்கள். இவர்களுடன், அப்போது  சிறுபான்மையினரான இருந்த சில இஸ்லாமியர்களையும் ஆங்கிலேயர்கள் இராணுவத்தில் சேர்ந்து கொண்டார்கள்.  என்னதான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப் படுத்தி இருந்தாலும்,  அவர்கள் காலத்தில் தான் ஒருங்கிணைந்த இந்தியா உருவானது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை! அது மட்டுமல்லாமல் , சாதீயமும் அச்சமயத்தில் ஒடுங்கியிருந்தன.

ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகினப்பிறகும், கலாச்சார மற்றும் பண்பாட்டுத்தளத்தில் அபரீதமான வளர்ச்சி ஏற்பட்டப்பிறகும் இன்று  பிற்ப்போக்கான சாதீயக்  கோட்பாடு   மீண்டும் மக்கள் மனதிலே  புதுப்பிக்கப் படுகிறது! இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல சாதிக் கட்சிகள் பல உருவாகிவிட்டன! திரும்பவும் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்! அதுவும் திட்டமிட்டு அவர்களது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமான தாக்குதல்!  இது இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும்  ஊறு விளைவிக்கவல்லது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.  மொத்தத்தில் , சாதீ.. இப்போது தமது கொடிய நாவினை சுழற்ற  ஆரம்பித்து விட்டன.  இது ஆரோக்கியமான இந்திய தேசத்தை உருவாக்கப்போவதில்லை! அதனால் இளைஞர் சமுதாயமே ! விழித்தெழுங்கள் ! இந்தியாவின் வருங்காலம் உங்கள் கையில்!  இந்தச் சாதீயத்தை வேருடன் வீழ்த்துங்கள்!   

Thursday, 15 November 2012

தற்கொலை!


மனிதர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ? . 

என்னை பல  நாட்கள் சிந்திக்க வைத்த கேள்வி இது.  என்னென்ன காரணங்கள் தற்கொலைக்கு தூண்டுகிறது?. அவர்களை கோழைகள் என்றோ ,  மனப்பக்குவம் இல்லாதவர்கள் என்றோ அல்லது சரியாக முடிவெடுக்கத் தெரியாதவர்கள் என்றோ நாம் எடுத்துக்  கொள்ளவேண்டுமா ? அல்லது அதற்கு வேறு சமூகக்  காரணிகளும்   இருக்கிறதா?. இது பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இதுவரை தோன்றவும் இல்லை. ஆனால் 25/10/2012 ந் தேதி பாளையங்கோட்டையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரவிசங்கரின் செயல் என்னை எழுதத் தூண்டியது.

அதற்கு முன்னால் ரவிசங்கர் யார் என்று பார்ப்போம் ;

இவர் ஒரு கருமான். வயது 47 . மனைவியின் பெயர் மாரியம்மாள் வயது 39.   இவர்களுக்கு  5  குழந்தைகள்.  மூன்று ஆண் குழந்தைகள்  மற்றும் இரண்டு  பெண் குழந்தைகள். அதில் கடைசி பெண் குழந்தைக்கு வயது இரண்டு.  மனநிலை பாதிப்பிற்கு உள்ளான குழந்தை. நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சையில் இருப்பவரும் கூட.  அவரை முழுவதுமாக குணப்படுத்துவது இயலாது என்று மருத்துவர் கூறிய பிறகு தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்  ரவிசங்கர்.  பத்து வயதான இவர்களின் மகன் மணிகண்டன் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறான் .  இவர்களின் தற்கொலைக்கு கந்து வட்டி காரணம் இல்லை என்று விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்".  இது தான் செய்தி.

பொதுவாக தற்கொலைக்கான காரணங்களாக கீழ் வருபனவற்றைக் குறிப்பிடலாம்;
1.        காதல் தோல்வி/ முரண்பாடான காதல் .
2.        பொருளாதாரச் சிக்கல்/ கடன் தொல்லை.
3.        மருத்துவம்/ தீராத நோய்கள்.
4.        எதிர்காலம் குறித்த கவலை/ பயம்.
5.        வறுமையில் தற்கொலை
6.        பிறரை ஏமாற்றுவதற்கு (போலியான தற்கொலை முயற்சி).
7.        பெற்றோரால்/ குழந்தைகளால் கைவிட்டநிலை.
8.        வாழ்ந்து முடித்த திருப்தி.

இதில், ரவிசங்கர் தமது 5 வது பெண் குழந்தைக்கு மருத்துவம் பார்தததால் ஏற்பட்ட பண/மன   துன்பத்தால் குடும்பத்துடன் தற்கொலைக்குத் துணிந்துள்ளார். இப்போதெல்லாம் அலோபதி மருத்துவம் என்பது ஒரு தேர்ந்த  வியாபாரமாக மாறிவிட்டது. அதிலும் இருதயநோய், சிறுநீரகம், புற்றுநோய்  மற்றும் மனநோய்க்கான மருத்துவ சிகிச்சை என்றால் கேட்கவே வேண்டாம் , சம்பந்தப்பட்ட குடும்பம் அவர்களது  பணம், நகை, சொத்து மற்றும் இருப்பதை எல்லாம் இழந்து எழையாகிப் போவது உறுதி. அதிலும் ரவிசங்கர்,  மனநிலை பாதித்த தமது பெண் குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் செய்துள்ளார்  என்றால்   நீங்களே புரிந்து கொள்ளுங்கள்! 

ஒரு கருமானாக வேலைசெய்து கொண்டு, ஐந்து குழந்தைகளுக்கு உணவு, கல்வி போன்றவற்றையும்  கவனித்துக்கொண்டு, மருத்துவமும் செய்ய வேண்டுமென்றால் உண்மையிலே கஷ்டமான ஒரு நிலையாகத் தான் இருந்திருக்க வேண்டும்!. கட்டாயமாக அவன் கடன்/வட்டியில் சிக்கி சித்திரவதைப் பட்டிருக்க வேண்டும்.  இவன் தற்கொலைக்கு கந்து வட்டி காரணம் இல்லை  என்ற போலீஸ் துறையின் தகவல் பொய்யான தகவலாகத்தான் இருக்க வேண்டும். எப்படியோ! விலை மதிப்பில்லாத சில உயிர்கள் இப்போது இல்லை.

இந்த இழிநிலை, நிறைய குழந்தைகளைப் பெற்று திட்டமிடாமல் வாழ்ந்த ரவிசங்கரால் தான் ஏற்பட்டது. அந்த இளந்தளிர்களின் மரணத்திற்கு அவனே காரணம். அவர்களின் உயிரைப் பறிக்க ரவிசங்கருக்கு என்ன உரிமை இருக்கிறது? . அவர்களை வாழ விட்டு இருக்கலாம். ஆனால் இந்த சமுகத்தில் தமது குழந்தைகள் நல்லமுறையில் வாழ முடியாது என்ற எண்ணத்தில், அவர்களை தமது சாவில் பகிர்ந்து கொண்டு இருக்கலாம்  என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது.!

ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத பட்சத்தில் இப்படி பல ரவிசங்கர்கள் தற்கொலைகள் தான் செய்வார்கள் என்பது உண்மை. விவசாய நாடு என்று பெயரெடுத்த  நமது இந்தியாவில் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்ததையே பெரியதாக எடுத்துக்கொள்ளாத இந்த மக்களும், அரசுகளும் உள்ள  சூழ்நிலையில்,  இத்தகைய தனி மனித தற்கொலைகள் பற்றியா அரசு வருத்தப்படப்  போகிறது ?

அடுத்து, காதலின் பெயராலும் , முரணான காதல் பழக்கத்தினாலும் தற்கொலை செய்து கொள்பவர்களையும்  நான் வெறுப்பவன்.  ஆனாலும் , காதல் மணம் புரிந்து  கொண்ட தம்பதியினர் சாதீய அடக்குமுறைக்குப் பயந்து மரணத்தைத் தழுவும் போது எனது மனம் வலித்தது உண்டு.  அதே சமயத்தில் சாதீயம் கொழுந்து விட்டு எரியும் இத்தருணத்தில் அதை உடைக்கும் விதமாக இத்தகைய காதல் திருமணங்கள் உருவாவதை யாரும் ஆதரிக்கவில்லையே என்ற ஆதங்கமும்,   அதை மக்கள் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் யாவரும் கண்டு கொள்ளாமல் இருப்பதுவும் வேதனையைத் தந்தது உண்டு.  சாதீயம் இப்பொழுது தமது நாவினை அனைத்துப் புறங்களிலும்  சுழற்ற ஆரம்பித்து விட்டது அதனால் நாம் திரும்பவும் கற்கால மனித யுகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்றே கருதுகிறேன். இதில் காதல் மணம், கலப்பு மணம் என்பது கனவாகி போய் விடும்!

அகவேதற்கொலைகள் பலவிதமாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விவாதமும், விழிப்புணர்வும் அவசியம் தேவை என்று கருதுகிறேன். மருத்துவ சிகிச்சையின் மூலமாக யாராவது ஒரு உயிரை காப்பாற்றினாலும் அல்லது ஆபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றியதின் மூலம் பெரிய அளவில் மகிழ்ந்து கொள்ளும் நாம் , இத்தற்கொலை மரணங்களை பற்றி  எதுவும்  கண்டு கொள்வதில்லை என்பது ஆச்சரியமான உண்மை., ஆகவே,  இத்தகைய தற்கொலைக்கானக்  காரணங்களை நாம் விரிவாக ஆராய வேண்டும்  என்றும் , இதை ஒரு தனிமனித பிரச்சனையாகப் பார்க்காமல், சமூகப் பார்வையில் ஆராய  வேண்டும் என்று கருதுகிறேன். மடிவது உயிர்கள்!  விலை மதிப்பற்ற  உயிர்கள்!

Wednesday, 24 October 2012

முரண்பாடான காமம் !!!



கி.பி.1972  ஆம் ஆண்டு ஒரு நாள் , காலை 0800  மணிக்கு நான் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது , எழுமலை அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பேருந்துநிலையத்தைத் தாண்டி, கிழக்குப் புறமாக திரும்பி எனது பள்ளியை நோக்கி இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் . என் எதிரே வந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டு அப்படியே நின்று விட்டார்கள். அவர்கள்  அனைவரின் முகத்திலும் இனந்தெரியாத திகில். நானும்  திடுக்கிட்டு பயத்தில்  திரும்பிப் பார்த்தேன்!. என்னையும் அறியாமல் என் உடல் நடுங்கி கொண்டிருந்தது. அங்கே பதினெட்டு வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் தமது  வலது கையில் ஒரு பெண்ணின் தலையுடன் நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான். இடது கையில் இரத்தம் தோய்ந்த நீண்ட அரிவாள். அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை, நிதானமாக தெரிந்தான். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து இருபது அடி  தூரத்தில் தான் காவல் நிலையம் இருந்தது. சரணடைய வந்து கொண்டு இருக்கிறான் போலும்.கொலைக்கான காரணத்தை பின்னர் தெரிந்து கொண்டேன். கொலையுண்ட அந்தப்பெண் அவனின் தாய். விதவையான அவளுக்கு வேறொரு ஆணுடன் பாலியல் தொடர்பு இருந்ததால் வெகுண்டெழுந்த அந்த வாலிபன் , தாய் என்றும் பார்க்காமல் அவளது தலையை கொய்துவிட்டான். 

சில மாதங்களுக்கு முன்பு இந்த   கி.பி.2012  ஆம் ஆண்டிலும் , இதே மாதிரியான ஒரு செய்தியை தினத்தந்தி நாளேட்டில் படித்தேன். அதே காரணம்! . ஆனால் சிறிய  வித்தியாசம். இந்தக் கொலை, வெளி ஊருக்கு வேலைக்கு சென்று விட்ட தன் தந்தைக்கு துரோகம் செய்துவிட்டு வேறொருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதால் நடந்துள்ளது. இது போன்ற பல்வேறு செய்திகள் இப்பொழுதெல்லாம் செய்தித்தாள்களில் அடிக்கடி வெளிவருகிறது. கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை!  சகோதரி உறவுமுறை உள்ள பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் வாலிபர் வெட்டிக் கொலை! சித்தியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததைக் கண்டித்த சித்தப்பா கொலை! தனது கள்ளக் காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி! தனது மாணவனை காதலித்து அவனை கடத்திசென்ற ஆசிரியை! அல்லது கள்ளக் காதலிக்காக மனைவியைக் கொன்ற கணவன்! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்?  காமம் தானே! அதுவும், சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாத முறைதவறிய காமம் தானே! இது ஏன் ஏற்படுகிறது

மேற்கண்ட முரண்பாடான காம நுகர்விற்கான விளக்கம் எனக்கு சிக்மண்ட் பிராய்டு அவர்களிடம் கிடைத்தது.அவரது இடிபஸ் சிக்கல்” (இடிபஸ் என்பவன் 401 BC  இல் வாழ்ந்த ஒரு அரசனின் தத்துப்பிள்ளை. இவன் தமது தந்தையைக் கொன்று தாயை மணந்தவன் என்பது வரலாறு) என்கிற பெற்றோர் மோகம் பற்றிய சிந்தனை, அதாவது ஆண் குழந்தை தன தாயின் மார்பில் பால் அருந்துவதில் இருந்து ஆரம்பித்த தாய்மோகம், பெண் குழந்தைகள் தன தந்தையின் ஆளுமை மூலம் பெரும் எதிர் பாலின காதல் உணர்வு போன்றவற்றை 1897 ஆம் ஆண்டே சிக்மண்ட் பிராய்டு விளக்கியுள்ளார்.  அதேபோல் , தாயை அடைய குழந்தை முனையும் போது அதற்குத் தடையாக இருப்பது தந்தையே ஆகும். ஆகவே, குழந்தைகள் தாய்க்காக தந்தை  மீது போர்க்குணத்தை அல்லது போட்டி உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு குழந்தை தனது தாயை உடைமையாக்கிக் கொள்ள நிகழ்த்தப்படுகிற போராட்டமே இடிபஸ் போராட்டமாகும்.

இவ்வாறு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது, அப்பருவத்தில் தோன்றும் பாலுணர்ச்சி உந்துதல் காரணமாக அவர்களுக்கு உளப் போராட்டம் ஏற்படுகிறது. வ்வாறு உள்ளத்தில் பல போராட்டங்கள் நிகழ்ந்தாலும், பாலுணர்ச்சிக்கு எதிரான போராட்டமே முதன்மையாகக் கருதப்படுகிறது.உடலியல் மனிதனுக்குப் பாலுணர்ச்சியையும், சமுக மனிதனுக்கு பண்பாட்டு உணர்ச்சியும் மூலங்களாக இருப்பதால் இவ்விரண்டில் எதையும் விட்டுக்கொடுக்க , அதே வேளையில் முழுமையாகச் சார்ந்திருக்க முடியாத இக்கட்டான நிலை மனிதனுக்கு ஏற்படுகின்றது.  பாலுணர்ச்சி சார்ந்த கருத்தும் ( வேட்கை), பண்பாட்டு விழுமியக் கருத்தும் (ஒழுக்கம்) எதிரிடைகள் ஆகும். இயற்கை வழி வேட்கையும் , செயற்கை வழித் தடையும் கருத்தியல் போராட்டம் நடத்தும் போது பாலுணர்ச்சிக்கும் , சமுக உணர்ச்சிக்கும் அல்லது பண்பாட்டு உணர்ச்சிக்கும் இடையிலான போராட்டமே ஏற்படுகிறது.  இந்தப் போராட்டத்தில் பாலுணர்ச்சி வெற்றியடைந்தால் மனம்  பண்பாட்டு உணர்ச்சியை அடக்கி தமது பாலுணர்வை பூர்த்தி செய்துகொள்ளும். இங்கே சமுக உணர்வுகள், உறவுகள் என்ற பண்பாட்டு உணர்ச்சி மீறப்பட்டு உடைக்கப்படும் என்பதை சிக்மண்ட் பிராய்டு தெளிவாகப் பதிவு செய்துள்ளார். ஆகவே பாலுணர்ச்சி சம்பந்தமான கல்வி அறிவு என்பது அனைவருக்கும் அவசியமானது. அது இல்லாதபட்சத்தில் முரண்பாடான உறவுகள் தொடர் கதையாகத் தான் இருக்கும்.

அதேபோல் முறைகேடான பாலுணர்வு மீறலுக்கு கீழ்வரும் வேறு சில காரணங்களும் இருக்கிறது;


  1.         பாலியல் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வின்மை.
  2. அதிகக் காமஉணர்ச்சி மற்றும் பாலுணர்வு குறித்து அதிக ஆர்வம். 
  3. கணவன் அல்லது மணைவியினால் தமது இணையின் தேவைகள், விருப்பங்களை பூர்த்திசெய்ய இயலாமை.
  4. தம்பதியினர்கள் தமது விருப்பு வெறுப்புகளை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
  5. தம்பதியினர் இடையே மனமாச்சரியங்கள் மற்றும் முரண்பாடுகள் இருக்கும் பொழுது, ஆறுதலாக இருக்கும் ஆண்/பெண் நண்பர்களின் தலையீடு.
  6. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள்படங்கள் மற்றும் ஆபாசப்படங்கள் போன்றவைகள்.

மேற்கூறிய காரணங்களில் கவனம் செலுத்தி மனதை செழுமைப் படுத்தினால் மட்டுமே இத்தகைய முறையற்ற காமத்தையும் அதன் பின் விளைவுகளையும் களைய முடியும்.அதை விடுத்து சம்பந்தப்பட்டவர்களை கொன்று ஒழிப்பதால் மட்டும் இப்பிரச்சினையை தீர்க்க இயலாது.தேவை காதல் / காமம் பற்றிய விழிப்புணர்வே! .   

(இக்கருத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாய்ப்பிருந்தால் பின்னர் தொடர்ந்து எழுதுகிறேன்)
   

Wednesday, 15 August 2012

இந்திய சுதந்திர தினம் !



நமது நாடு இன்று 15/08/2012 , தமது 66  வது சுதந்திரதினத்தை வெகு பாதுகாப்புடன் கொண்டாடுகிறது. குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, கல்லூரி, பள்ளிக்கு  மற்றும் அரசு அலுவலகங்களுக்கு  விடுமுறை கொடுத்து ஒரு சம்பிரதாயமாக கொண்டாடுகிறார்கள். 

நானும்  பள்ளியில் படித்த பொழுது , இந்த நாள்  ஆங்கிலயரிடமிருந்து நாம் விடுதலை அடைந்த நாள் , காந்தி தாத்தாவும், நேருவும், சர்தார் பட்டேல் போன்றவர்கள் அரும்பாடு பட்டு இந்த சுதந்திரத்தை பெற்று கொடுத்தார்கள் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஹைதர் அலி , திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன் , மருது சகோதரர்கள் போன்ற மன்னர்களெல்லாம் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள் என்றும்  சொல்லி வைத்திருந்தார்கள். அந்த நாளில் மூவர்ணக் கொடியேற்றி, இனிப்பு சாப்பிட்டபொழுது மிகவும் இனித்தது.

பின்னாளில், நமது  நாடு  ஆங்கிலேயருக்கு  அடிமைப்பட்ட விதத்தையும் , சுதந்திரப்போராட்டம் நடந்த வரலாற்றையும் விரிவாக படித்த பொழுது மனது மிகவும் வலித்தது.   நாம் எத்தனை சிறந்த வீரர்களை பெற்று இருந்தோம்! , எவ்வளவு வளங்கள் இருந்துள்ளன! . அவற்றையெல்லாம் சாதி,மத, இன , மன வேற்றுமையாலும், சில சுயநல துரோகிகளாலும் நாம் இழந்து விட்டோமே என்ற தாக்கம் என்னை பெரிதும் பாதித்தது.  

நாம் ஏன் அடிமைப்பட்டு போனோம் ?

கி.பி.1636 இல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆங்கிலேயர்களோடு வர்த்தக ஒப்பந்தம் போடவில்லை என்றால் , கி.பி.1757  இல் நடந்த பிளாசிப் போரில் மிர்சாபர் , சிராஜ் உத்தவுல்லாவை ராபர்ட் கிளைவிடம் காட்டிக் கொடுக்கவில்லை  என்றால் நாம் அடிமைப்பட்டு, சீர்குலைந்து இருக்க மாட்டோமே என்ற ஆதங்கம் என்னை பெரிதும் வேதனைப் படுத்தியது.  அன்று வங்கத்தில் காலூன்றிய ஆங்கிலயர்கள் கி.பி.1947  வரை நமது நாட்டை ஆட்சி செய்து,  நமது நாட்டின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்று விட்டார்களே!   

வட இந்திய மாநிலங்கள் ஆங்கிலயர்களிடம் இலகுவாக  வீழ்ந்த பின்னரும் , தென்னிந்திய மன்னர்கள் வெகுண்டெழுந்த விதம் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டும். குறிப்பாக மைசூர் ஹைதர் அலி, திப்புசுல்தான் , கட்டபொம்மன், தூந்தாஜிவாக், விருப்பாட்சி கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள், ஊமைத்துரை, தீரன் சின்னமலை போன்றவர்களின் வீரம் காலத்தால் அழிக்க முடியாதது. இவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவன் மைசூர்ப்புலி திப்பு தான். எனது சிறுவயது முதலே திப்பு என்ற சொல் என் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி வீரத்தினை புகட்டி இருக்கிறதென்றால் அது மிகையாகாது. திப்புவைப் போன்று ஆங்கிலேயர்களை விரட்டவேண்டும் என்பதையே தன் வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனைகனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை ஆங்கிலேயர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். கி.பி.1799  இல் , திப்பு இறந்த பின்னரே இந்தியாவை முழுமையாக வசப் படுத்த முடிந்தது என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.  

இப்படி அடிமைப்பட்டுப்போன நமது நாட்டை மீட்டுக்க எத்தனை சகோதரர்களை நாம் பலிகொடுத்து இருக்கிறோம். அவர்களை நம்மால் மறக்க முடியுமா?    பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ...இந்தப் பெயர்கள் இளைஞர்களின் வேதவாக்கல்லவா?  கேளாத செவிகள் கேட்பதற்காக இந்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதையும் , இவர்களுக்கு காந்தி மற்றும் காங்கிரஸ் செய்த துரோகத்தையும்  , கி.பி. 1931 ஆம் ஆண்டு   மார்ச் 23 ந் தேதி பகத் சிங்கை தூக்கிலிடும் போது அவன் கட்டிய நெஞ்சுரம் போன்றவற்றை அறியாத இந்தியன் யாராவது இருப்பார்களா ? . ஆங்கில அரசை தீரத்துடன் எதிர்த்த சுபாஷ் சந்திரபோஸ்,  சந்திரசேகர ஆசாத், மதன்லால் திங்கரா, மாவீரன் உத்தம்சிங்   போன்றவர்களை யாரால் மறக்க இயலும்? ஏதோ மகாத்மா காந்தி , நேரு போன்றவர்களின் அகிம்சை போராட்டத்தால் மட்டுமே நாம் சுதந்திரம் பெற்றோம் என்று பேசித் திறிவது நம்பும் வகையில் இல்லை. இந்திய இளம் சிங்கங்களின் இடைவிடாத போராட்டத்தாலும் , கி.பி.1945 வரை நடந்து முடிந்த  இரண்டாம் உலகப்போரின் நஷ்டத்தாலும் , இந்திய போன்ற காலனி  நாடுகளை பராமரிக்க முடியாமலே பிரிட்டன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது என்பதுதான் உண்மை!  அவர்களுக்கு  நம்பிக்கையானவர்களே காந்தியும், நேருவும் என்பதுவும் உண்மை. 
இன்று இந்தியநாடு இருக்கும் நிலைமையை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது ! எங்கும், எதிலும் ஊழல் ! மத்திய மந்திரி சபையில் இருக்கும் அனைவரின் மீதும்(ஒரு சிலரைத்தவிர)  ஊழல் குற்றச்சாட்டு நமது பிரதமர் உட்பட! வெட்கம்! இந்தியாவில் வறுமையை ஒழிக்கத் திட்டங்கள் இல்லை! விவசாயத்தைப் பெருக்க முயற்சிகள் எடுக்கப் படவில்லை! நாட்டின் கனிம வளங்கள் அரசியல்வாதிகளின் கையாட்களால் திருடப்படுகிறது! மாநிலங்களுகிடையே ஒற்றுமை இல்லை! இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது!  எங்கே போகிறோம் நாம்

இந்தச் சூழ்நிலையில் , நாட்டைக் காக்க வீரப்போர் புரிந்து சிரிரங்கபட்டினத்தில் இறந்த திப்பு, கயத்தாற்றில் சிலையாக இருக்கும் கட்டபொம்மன், திருபத்தூரில் கல்லறையில் துயிலும் மருது சகோதரர்கள் ஆகியோர்கள் நம்மைப் பார்த்து நகைப்பது போல் இருக்கிறது! இவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி கொண்டிருப்பதை எந்த அரசியல்வாதியும் உணரவில்லை! உண்மையான சுதந்திற்க்காக நாம் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதே என் எண்ணம். இப்போதெல்லாம் சுதந்திரதினத்தன்று சுவைக்கும்  மிட்டாய் எனக்கு இனிப்பதில்லை! 

Thursday, 19 July 2012

யானையின் கோபம் !



அது 1991  ஆம் ஆண்டில்  ஒருநாள். காலை பத்து மணியிருக்கும். உசிலம்பட்டி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அந்த  யானை பிளிறியவாறு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. அது ஒரு பெண் யானை. அதற்கு மதம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் அருகே நின்றுகொண்டிருந்த  ஒருவன் அங்குசத்தால் யானையின் காதருகே குத்திக் கொண்டு இருந்தான் . இன்னொருவன் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டுருந்தான். அப்பொழுது தான் கவனித்தேன் அதன் கால்களுக்கிடையே ஒருவன் அலறியவாறு கிடந்தான். ஒரு நிமிடம் பயத்தில் அப்படியே உறைந்துவிட்டேன். 

காரணம், என்னுடன் ஏழுமாதக் கர்ப்பிணியான என் மணைவி. அவளால் வேகமாக வேறு ஓடமுடியாது . எனக்கு திகிலாகி விட்டது. ஏனென்றால் எங்களுக்கும் அந்த யானைக்கும் இடையில் பத்தடி தூரம் தான் இருக்கும். அப்பொழுது அந்த யானை தனது தும்பிக்கையால்  நுழைவு  வாயிலின்  மேற்குப் பக்கத்தில் உட்புறமாக இருந்த ஒரு கடையின் மேற்கூரையை கோபத்துடன் பிடித்து இழுத்தது. அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி கொண்டு என் மனைவியை இழுத்துக் கொண்டு பஸ் நிலையத்தின் உள்ளே வேகமாக ஓடினேன் அப்பாடி!  நாங்கள் தப்பி விட்டோம். ஆனால் அவன்?. 

என்ன நடக்கிறது என்று கொஞ்சம் திரும்பப் பார்த்தேன். அப்பொழுதும், அவன் அந்த யானையின் கால்களுக்கு இடையில் தான் மாட்டிக் கொண்டு இருந்தான். அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் உருண்டு விலக முயலும் போதெல்லாம் அந்த முயற்சியை முறியடித்து அவனை தமது கால் பகுதிக்குள்ளே வைத்துக்கொண்டது. ஏதோ கால்பந்து விளையாடுவது போல் தமது கால்களின் எல்லையை விட்டு விலகாமல் அவனை வைத்துக் கொண்டது. ஆனால் அதன் வாலைப் பிடித்து இழுத்து கொண்டு இருந்தவனையும், அங்குசத்தால் குத்திக் கொண்டு இருந்தவனையும் அந்த யானை தாக்க முயற்சிக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாகத்  தெரிந்தது . ஏனென்றால் மதம் பிடித்திருந்தால் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் தூக்கி எறிந்து துவம்சம் செய்து இருக்கும். அப்படிச் செய்யாததால் அதற்கு ஏதோ கோபம் ஏற்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டேன்.

ஆம். மனிதன் எத்தனை சுயநலமானவன்?. சுதந்திரமாகத் திறியும் பறவைகளைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்துக் கொள்கிறான். குரங்கினைப் பிடித்து வசக்கி பிச்சை எடுக்க வைக்கிறான். சிங்கம், புலி மற்றும் கரடி போன்றவற்றைப் பிடித்து பழக்கி சர்க்கஸ் காட்டுகிறான். பாவம் இந்த மிருகங்கள் எல்லாம் தமது சதந்திரத்தைசுபாவத்தை இழந்து அடிமைப் பட்டுப்போயின.  அதுமட்டுமா? சாதிக் கோட்பாடுகளை வகுத்து மனிதனையும் அடிமையாக்கிக் கொண்டான். இந்த அடிமைகள் எல்லாம் விழித்துக் கொண்டால் என்ன நடக்கும்? . அது இவ்வாறு தான் இருக்கும்! என்று எனக்கு தோன்றியது!.

அந்த யானைக்கும், அவனுக்கும் இடையிலான போராட்டம் ஒரு பத்து நிமிடம் நடந்திருக்கும். பிறகு அந்த  யானை மெதுவாக தமது முன்புற வலது காலைத் தூக்கி அவனது மார்பு மேல் வைத்து பலமாக அழுத்தியது. அவன் கத்தவில்லை , இரத்தம் கக்கவில்லை, ஆனால் உயிர் சத்தமில்லாமல் பிரிந்தது. கூடியிருந்த கூட்டம் அலறியது.   எல்லோருமாகச் சேர்ந்து அந்த யானையை அடித்து தேனீ சாலையில் விரட்டினார்கள். இதை ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்பே செய்திருந்தால் பெயர் தெரியாத அந்தச் சகோதரனையாவது காப்பாற்றி இருக்கலாம் . பாவம் அவன். 

அப்பொழுதும் பதட்டம் தணியாத என் மனைவியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சூடாக ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்தேன். சில மணித்துளிகள் ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். பின்னர் வெளியே வந்து எங்கள் பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். அப்போது, தேனீ சாலையில் விரட்டப்பட்ட   அந்த யானை மெதுவாக ஆடி அசைந்து  திரும்பி வந்தது.  கூடவே அந்த இரண்டு பாகன்களும் வந்தார்கள். அதனிடம் கொஞ்சமும் சீற்றம் இல்லை! அமைதி  என்றால் அப்படி ஒரு அமைதி !  எனக்கு இப்பொழுதும் பெரிய ஆச்சரியம்! கூடவே சில கேள்விகளும். அந்த யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது? ஏன் அவன் ஒருவனை மட்டும் கொன்றது? அவன் யார்?
 
எனக்கு மேற்கண்ட கேள்விகளுக்கான விடை தெரிய மாலை நான்கு மணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. நண்பர் பாலுச்சாமி அந்தப் பதில்களுடன்  வந்தார். செத்துப் போனவன் தான் அந்த யானையின் உண்மையான பாகன். அவன் அந்த யானையை கடுமையாகக் கொடுமைப்படுத்தி இருக்கிறான்.  ஓய்வில்லாமல் பிச்சை எடுக்க வைத்து இருக்கிறான். சரியாக உணவிடுவதில்லை. புல், இலை தலைகளுக்கு பதிலாக, எச்சில் இலைகளை  அதுவும் அசைவப்  புரோட்டாக் கடைகளில் கொட்டப்படும்   இலைகளை அள்ளித்தான் அதற்கு உணவாக கொடுத்து இருக்கிறான். கடித்து எறியப்பட்ட எலும்புகளாலும் , நாற்றத்தாலும் அது சாப்பிட தயங்கும் போதெல்லாம் அங்குசத்தால் அடித்து துன்புறுத்தி இருக்கிறான். பரந்த வனப் பகுதியில் எல்லா இயற்கை வளங்களோடு சுதந்திரமாக வாழ்ந்து வந்த அந்த யானைக்கு கிடைத்த அவல வாழ்க்கையைப் பார்த்தீர்களா! அதனுடைய கோபம் நியாயம் தானேஅவன் தண்டிக்கப் பட வேண்டியவனே! அதன் பிறகு அவன் சாவின் மீது எனக்கு இரக்கம் தோன்றவில்லை .
 

தற்பொழுது நான் மதுரைக்கு குடிபெயர்ந்து விட்டேன்.  இங்கும் தெருக்களில் யானைகள் பிச்சையெடுப்பதை இப்பொழுதும் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்!