Thursday, 19 July 2012

யானையின் கோபம் !



அது 1991  ஆம் ஆண்டில்  ஒருநாள். காலை பத்து மணியிருக்கும். உசிலம்பட்டி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அந்த  யானை பிளிறியவாறு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. அது ஒரு பெண் யானை. அதற்கு மதம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் அருகே நின்றுகொண்டிருந்த  ஒருவன் அங்குசத்தால் யானையின் காதருகே குத்திக் கொண்டு இருந்தான் . இன்னொருவன் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டுருந்தான். அப்பொழுது தான் கவனித்தேன் அதன் கால்களுக்கிடையே ஒருவன் அலறியவாறு கிடந்தான். ஒரு நிமிடம் பயத்தில் அப்படியே உறைந்துவிட்டேன். 

காரணம், என்னுடன் ஏழுமாதக் கர்ப்பிணியான என் மணைவி. அவளால் வேகமாக வேறு ஓடமுடியாது . எனக்கு திகிலாகி விட்டது. ஏனென்றால் எங்களுக்கும் அந்த யானைக்கும் இடையில் பத்தடி தூரம் தான் இருக்கும். அப்பொழுது அந்த யானை தனது தும்பிக்கையால்  நுழைவு  வாயிலின்  மேற்குப் பக்கத்தில் உட்புறமாக இருந்த ஒரு கடையின் மேற்கூரையை கோபத்துடன் பிடித்து இழுத்தது. அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி கொண்டு என் மனைவியை இழுத்துக் கொண்டு பஸ் நிலையத்தின் உள்ளே வேகமாக ஓடினேன் அப்பாடி!  நாங்கள் தப்பி விட்டோம். ஆனால் அவன்?. 

என்ன நடக்கிறது என்று கொஞ்சம் திரும்பப் பார்த்தேன். அப்பொழுதும், அவன் அந்த யானையின் கால்களுக்கு இடையில் தான் மாட்டிக் கொண்டு இருந்தான். அவனால் வெளியே வர முடியவில்லை. அவன் உருண்டு விலக முயலும் போதெல்லாம் அந்த முயற்சியை முறியடித்து அவனை தமது கால் பகுதிக்குள்ளே வைத்துக்கொண்டது. ஏதோ கால்பந்து விளையாடுவது போல் தமது கால்களின் எல்லையை விட்டு விலகாமல் அவனை வைத்துக் கொண்டது. ஆனால் அதன் வாலைப் பிடித்து இழுத்து கொண்டு இருந்தவனையும், அங்குசத்தால் குத்திக் கொண்டு இருந்தவனையும் அந்த யானை தாக்க முயற்சிக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாகத்  தெரிந்தது . ஏனென்றால் மதம் பிடித்திருந்தால் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் தூக்கி எறிந்து துவம்சம் செய்து இருக்கும். அப்படிச் செய்யாததால் அதற்கு ஏதோ கோபம் ஏற்பட்டுள்ளது என்று புரிந்து கொண்டேன்.

ஆம். மனிதன் எத்தனை சுயநலமானவன்?. சுதந்திரமாகத் திறியும் பறவைகளைப் பிடித்துக் கூண்டில் அடைத்து வைத்துக் கொள்கிறான். குரங்கினைப் பிடித்து வசக்கி பிச்சை எடுக்க வைக்கிறான். சிங்கம், புலி மற்றும் கரடி போன்றவற்றைப் பிடித்து பழக்கி சர்க்கஸ் காட்டுகிறான். பாவம் இந்த மிருகங்கள் எல்லாம் தமது சதந்திரத்தைசுபாவத்தை இழந்து அடிமைப் பட்டுப்போயின.  அதுமட்டுமா? சாதிக் கோட்பாடுகளை வகுத்து மனிதனையும் அடிமையாக்கிக் கொண்டான். இந்த அடிமைகள் எல்லாம் விழித்துக் கொண்டால் என்ன நடக்கும்? . அது இவ்வாறு தான் இருக்கும்! என்று எனக்கு தோன்றியது!.

அந்த யானைக்கும், அவனுக்கும் இடையிலான போராட்டம் ஒரு பத்து நிமிடம் நடந்திருக்கும். பிறகு அந்த  யானை மெதுவாக தமது முன்புற வலது காலைத் தூக்கி அவனது மார்பு மேல் வைத்து பலமாக அழுத்தியது. அவன் கத்தவில்லை , இரத்தம் கக்கவில்லை, ஆனால் உயிர் சத்தமில்லாமல் பிரிந்தது. கூடியிருந்த கூட்டம் அலறியது.   எல்லோருமாகச் சேர்ந்து அந்த யானையை அடித்து தேனீ சாலையில் விரட்டினார்கள். இதை ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்பே செய்திருந்தால் பெயர் தெரியாத அந்தச் சகோதரனையாவது காப்பாற்றி இருக்கலாம் . பாவம் அவன். 

அப்பொழுதும் பதட்டம் தணியாத என் மனைவியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சூடாக ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்தேன். சில மணித்துளிகள் ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். பின்னர் வெளியே வந்து எங்கள் பகுதி பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். அப்போது, தேனீ சாலையில் விரட்டப்பட்ட   அந்த யானை மெதுவாக ஆடி அசைந்து  திரும்பி வந்தது.  கூடவே அந்த இரண்டு பாகன்களும் வந்தார்கள். அதனிடம் கொஞ்சமும் சீற்றம் இல்லை! அமைதி  என்றால் அப்படி ஒரு அமைதி !  எனக்கு இப்பொழுதும் பெரிய ஆச்சரியம்! கூடவே சில கேள்விகளும். அந்த யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது? ஏன் அவன் ஒருவனை மட்டும் கொன்றது? அவன் யார்?
 
எனக்கு மேற்கண்ட கேள்விகளுக்கான விடை தெரிய மாலை நான்கு மணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. நண்பர் பாலுச்சாமி அந்தப் பதில்களுடன்  வந்தார். செத்துப் போனவன் தான் அந்த யானையின் உண்மையான பாகன். அவன் அந்த யானையை கடுமையாகக் கொடுமைப்படுத்தி இருக்கிறான்.  ஓய்வில்லாமல் பிச்சை எடுக்க வைத்து இருக்கிறான். சரியாக உணவிடுவதில்லை. புல், இலை தலைகளுக்கு பதிலாக, எச்சில் இலைகளை  அதுவும் அசைவப்  புரோட்டாக் கடைகளில் கொட்டப்படும்   இலைகளை அள்ளித்தான் அதற்கு உணவாக கொடுத்து இருக்கிறான். கடித்து எறியப்பட்ட எலும்புகளாலும் , நாற்றத்தாலும் அது சாப்பிட தயங்கும் போதெல்லாம் அங்குசத்தால் அடித்து துன்புறுத்தி இருக்கிறான். பரந்த வனப் பகுதியில் எல்லா இயற்கை வளங்களோடு சுதந்திரமாக வாழ்ந்து வந்த அந்த யானைக்கு கிடைத்த அவல வாழ்க்கையைப் பார்த்தீர்களா! அதனுடைய கோபம் நியாயம் தானேஅவன் தண்டிக்கப் பட வேண்டியவனே! அதன் பிறகு அவன் சாவின் மீது எனக்கு இரக்கம் தோன்றவில்லை .
 

தற்பொழுது நான் மதுரைக்கு குடிபெயர்ந்து விட்டேன்.  இங்கும் தெருக்களில் யானைகள் பிச்சையெடுப்பதை இப்பொழுதும் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்! 

Monday, 9 July 2012

வண்ணாமுட்டியின் காதல்


வண்ணாமுட்டி மரணத்தின் விளிம்பில் அந்த தெரு மின்கம்பத்தின் கீழே ஒரு கயிற்றுக் கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தான். அப்போது மயக்கத்தில் இருந்தான். அனேகமாக பிழைப்பது கடினம் என்று எனக்குத் தோன்றியது. ஆம்! அவன் அரளி விதைகளை அரைத்து விழுங்கி  இருந்தான் .  அதுவரை பெண்கள் தான் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது எனக்குத் தெரியும். முதல் தடவையாக ஒரு ஆண்மகன் , அதுவும் வண்ணாமுட்டி போன்ற தைரியமானவன் தற்கொலைக்கு துணிந்தது எனக்கு ஆச்சரியமாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது.  நேரமாகிக் கொண்டிருந்தது. வண்ணாமுட்டியின் அப்பா இன்னும் வரவில்லை. அவர் வந்தவுடன் தான் இவனை ஆஸ்பத்தரிக்கு தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

அப்போது எனக்கு வயது பனிரெண்டு இருக்கும். வண்ணாமுட்டி எனக்குப் மிகவும் பிடித்தமானவன். கபடி, கிளித்தட்டு மற்றும்  கிட்டி போன்ற விளையாட்டுகளை எனக்குக் கற்றுக் கொடுத்தவன். ஆனால் என்னைவிட ஏழு அல்லது எட்டு வயது கூட இருக்கும். சமீபத்தில் தான் திருமணம் செய்திருந்தான். அவன் மனைவி கருப்பாயி  பத்து தினங்களுக்கு முன்பு  தான் இதே மாதிரி பருத்திக்கு தெளிக்கும் ரோகர் மருந்தை குடித்து விட்டு இறந்து போனாள்.  அந்த சோகமே இன்னும் நீங்கிய பாடு இல்லை . இப்போது இவன் வேறு சாவை நெருங்கி கொண்டு இருக்கிறான். அவனது நண்பர்களும் சொந்தங்களும் கவலையோடு அவனையே  பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே அவனது அம்மாவும் தம்பியும் தங்கையும்  தீ விபத்தில் இறந்து போயிருந்தார்கள். இவனது அப்பா உடனே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இவன் மேல் அவ்வளவு பாசம் இல்லை என்று புரிந்து கொண்டேன். ஒருவேளை வண்ணாமுட்டி திருமணம் செய்து கொண்டதில் ஏதாவது பிரச்னை இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அப்போது இலேசாக புரண்டு எழுந்தான் வண்ணாமுட்டி. என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாதீர்கள் ! சாக விடுங்கள்! நான் கருப்பாயி போன இடத்துக்கே போக வேண்டும் ! என்று அழுதான். அப்புறம் என் அப்பா வந்தால் என்னை தொட விடாதீர்கள் என்று யாரிடமோ கூறினான்.   அப்போது மாலை ஏழு மணி இருக்கும் .  வண்ணாமுட்டியின் அப்பா வந்தார்.  அவர் முகத்தில் எந்தச் சலனமும் தெரியவில்லை. ஆஸ்பத்திரிக்கு தூக்குங்க என்றார்.

இரவு ஒன்பது  மணி . வண்ணாமுட்டி பிணம் அதே இடத்தில் அதே கயிற்று கட்டிலில் கிடத்தப் பட்டு இருந்தது. சில மணி நேரங்களுக்கு முன்னே உயிரோடும் உணர்வோடும் இருந்த ஒரு மனிதன் தமது கவலைகளை மறக்க இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டான். அவனது பெயர் அந்தக் கிராமத்தில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. எனக்கு பெரிய சந்தேகம். வண்ணாமுட்டி ஏன் தற்கொலை செய்து கொண்டான் ? .

விடை...கருப்பாயி!

கருப்பாயி , கறுப்பாக இருந்தாலும் அழகானவள். அவளுக்கும் காளைக்கும் காதல். காளை , எங்கள் கிராமத்திலே கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் கருப்பாயி , ஒரு கூலித் தொழிலாளியின் மகள். இவர்களது காதலுக்கு வித்தாக இருந்தவன் வண்ணாமுட்டி. வண்ணாமுட்டியும் காளையும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இன்னும் சொல்லபோனால் காளையின் காதலை உற்சாகப் படுத்தியதே வண்ணாமுட்டியே தான்!     பின் எப்படி வண்ணாமுட்டி  கருப்பாயியை  திருமணம் செய்து கொண்டான்?. இங்கே தான் ஒரு துரோகத்தின் வரலாறும் , தியாகமும் உருவானது.

அந்தக் காலங்களில் கிராமப் பகுதிகளில் காதல் கொள்வது என்பது ஒரு சுவாரசியமான அனுபவம். காதலர்கள் , மிகவும் கண்ணியமாகவும் , கட்டுக்கோப்பாகவும் நடந்து கொள்வார்கள் . தொட்டுக்கூட பேசிக்கொள்ள மாட்டார்கள். அதனால் காதலுக்கு மிகவும் மரியாதை இருந்தது. அவ்வாறு தான் கருப்பாயிம் இருந்தாள். ஆனால் காளைக்கு அவளின் இளமையான அழகு,  மயக்கத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு முன்பே அவளை அடைந்து விடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. அவளிடம் கூறினான். மறுத்து விட்டாள். அதனால் அவர்களுக்கிடையே ஊடல் ஏற்பட்டது. நண்பன் வண்ணாமுட்டி அவர்களது ஊடலை தனித்து சேர்த்து வைத்தான். காளை , கருப்பாயிக்கு சத்தியம் செய்து கொடுத்தான்! கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று. ஒரு நாள் இரவு , அந்த உயிர்கள் சங்கமித்தன. வண்ணாமுட்டியே அதற்க்கு சாட்சி!

நாட்கள் நகர்ந்தன ! கருப்பாயி கர்ப்பவதியானாள் . ஒரே பயம். திகில் மற்றும் வரப்போகும் அவமானம் அவளை கவலைக்குள்ளாகியது. அழுதாள்! காளையிடம் உடனே திருமணதிற்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள். காளையும் அவனது அப்பாவிடம் அனுமதி கேட்டான். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. காளையின் அத்தைமகளை அவனுக்கு திருமணம் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. காளை கருப்பாயியை மறந்து விட்டான்! ஒரு நம்பிக்கைத் துரோகத்தின் சுவடு அவன் மேல் பதிக்கப்பட்டது.


வண்ணாமுட்டி மனதிற்குள்ளே புழுங்கினான். காளையுடன் சண்டைக்குப் போனான். அவனது துரோகத்தை பழித்தான். கருப்பாயியை  திருமணம் செய்துகொள்ளுமாறு   காளையை  நிர்பந்தம் செய்தான். இருந்தாலும் பலன் கிடைக்கவில்லை. மனதிற்குள்ளே அழுதான். ஒரு துரோகத்திற்கு உடந்தையாகி விட்டாயே! என்று அவனது மனம் பழித்தது. தீர்க்கமான  அந்தமுடிவை எடுத்தான்.  ஆம்! தானே கருப்பாயிக்கு வாழ்வு கொடுப்பது! அவளை திருமணம் செய்து கொள்வது. அவளுக்கு வாழ்வளிக்க துணிந்து விட்டான் வண்ணாமுட்டி. ஆனால் ,  கருப்பாயி அவன் முடிவை ஏற்றுகொள்ள வேண்டுமே ? 

ஆம்! கருப்பாயி , அவனது முடிவை ஏற்க மறுத்துவிட்டாள். நான் கெட்டுப்போனவள், உனக்கு பொருத்தமானவள் அல்ல. நீ வேறு திருமணம் செய்து கொள் என்று உறுதியாக கூறிவிட்டாள். அப்பொழுது தான் வண்ணாமுட்டி மனம் திறந்து அந்த உண்மையை கூறினான் .  அவளை  தானும் விரும்பியதாகவும்,  ஏழையான நம்மை அவள் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்று நினைத்து அவளுடன் சொல்லவில்லை  என்றும் ,  தமது மனதில் நீண்ட நாட்களாக பூட்டிவைக்கப்பட்டிருந்த அந்தக் காதலைக் கூறினான்.  இருவரும் அழுது கொண்டார்கள்.


வண்ணாமுட்டி , அவளை சமாதானப் படுத்தினான். அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு தானே தந்தை என்று கூறிவிடுகிறேன் அதனால் இந்த உலகம் உன்னைப் பழிக்காது என்று ஆறுதல் கூறினான்.   மோசமான விமர்சனத்தை எதிர் நோக்கியிருந்த கருப்பாயிக்கு  இதைவிட்டால் வேறு வழி தெரியவில்லை. அரைகுறை மனதுடன் சம்மதித்தாள். இப்படித்தான் வண்ணாமுட்டி கருப்பாயி திருமணம் சில நண்பர்களின் வாழ்த்துகளுடன் ஒரு கோவிலில் நடந்தது.


ஆனால் அதன் பிறகு நடந்தவைகள் அவர்களுக்கு எதிராகவே  இருந்தது. வண்ணாமுட்டியின் திருமணத்தை அதனுடைய அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை.  சொந்தபந்தங்கள்  தூற்றின ! கருப்பாயி அவமானத்தால் கூனிக் குறுகிப் போய்விட்டாள். வண்ணாமுட்டி கொடுத்த அந்த உன்னதமான வாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. வெறுத்துப்போன கருப்பாயிக்கு தோன்றியது அவளது தற்கொலையே!.  வண்ணாமுட்டியின்  காதல் மீண்டும் தோற்றுப்போனது, அது மட்டுமல்லாமல் அவனது தியாகமும்  நிலைக்கவில்லை. 

வண்ணாமுட்டி மிகவும் துவண்டு விட்டான். எந்த மான, அவமானங்களுக்கும் பயப்படாத அந்த  மாமனிதனை கருப்பாயி மரணம் நிலை குலையச் செய்துவிட்டது.  அவள் இல்லாத இந்த உலகத்தில் அவனும் வாழ விரும்பவில்லை.  அவனுடைய  மரணத்தை அவனே தேடிக் கொண்டான். 

வண்ணாமுட்டி எனக்கு கோழையாக தெரியவில்லை  வஞ்சிக்கப்பட்ட மனிதனாகத் தான் தெரிந்தான். அவனுக்கு யாரும் ஆதரவுக்கரம் நீட்டாதது ஏன் என்றக் கேள்வி நீண்ட நாட்கள் எனக்குள் இருந்தது.  எங்கள் கிராமத்திற்கு நான் செல்லும்போதெலாம்  மௌன சாட்சியாக இன்றும் இருக்கிற அந்த மின் கம்பம் எனக்கு வண்ணாமுட்டியை  ஞாபகப் படுத்த தவறுவதில்லை! .

Tuesday, 3 July 2012

வேலாண்டி




வாழ்க்கைப் பாதையில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை நான் கடந்து வந்துள்ளேன்.  அவர்களில் இவரையே என் முதல் ஆசிரியனாகவும் , வழிகாட்டியாகவும் எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். இந்தச் சமூகத்தில் எனக்கு ஒரு  அடையாளத்தையும், எனது வளமான வாழ்க்கைக்கு  உரமாகவும் இருந்தவர். இவரிடமிருந்தே நான் நேர்மையையும் , ஒழுக்கத்தையும் , கடமையையும் ஏன் நேசித்தலையும் கற்றேன். 

அப்போது எனக்கு வயது பதினாறு. பள்ளிக் கல்வியை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லவேண்டிய தருணம். நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்களில் நானும் ஒருவன்.அதனால் மதுரை அமெரிக்கன் கல்லூரி என்னை சுலபமாக சுவீகரித்தது. கல்லூரி துவக்க நாளுக்கு (பழைய PUC) முதல் நாள் மாலை ஆறு மணிக்கு  நானும் எனது தாத்தாவும் பாட்டியும் கையில் இரண்டு நாட்களுக்கு தேவையான கட்டுசோற்றுடன் கல்லூரியின் வாயிலில் நின்றோம். 

ஆம்! வேலாண்டி எனது தாத்தா தான். நான் அவருடைய மூத்த மகள் வயிற்றுப் பேரன்.

கல்லூரியின் வாயிற்காவலன் எங்களை ஏற இறங்கப்பார்த்தார். நான் , எனக்கு வந்திருந்த கல்லூரியின் ஒப்புதல் கடிதத்தைக் காட்டினேன். உடனே அவர்,  கல்லூரி விடுதிக்கான கட்டணத்தை கட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். இல்லை! நாளை தான் கட்டவேண்டும் என்றேன் . அப்படியென்றால் நாளைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டார். நாங்கள் மதுரைக்கு புதியவர்கள். இங்கே எங்களுக்கு உறவினர்களும் கிடையாது. அதேபோல் வெளியில் அறை எடுத்து  தங்கும் பழக்கமும் எங்களுக்கு இருந்ததில்லை. அதனால் எனது தாத்தா அந்த வாயிர்க்காவலாளிடம் நாங்கள் கல்லூரியின் ஒரு மூலையில் தங்கிக் கொள்கிறோம் என்று அனுமதி கேட்டார். அவரும் பெருந்தன்மையோடு அனுமதித்தார். அதற்க்குக் காரணம் அவரது தோரணை தான். ஏறத்தாழ ஆறடி உயரம் , சுத்தமான வெண்மையான உடை மற்றும் முகத்தில் தெரிந்த  கிராமத்து நாட்டாண்மையின் அனுபவமுதிர்ச்சி போன்றவைகள் அந்தக் காவலாளிக்கு அவர் மேல் மரியாதையை ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

அப்புறம்  அந்தக்காவலாளி ,  இந்தப்பையன் யார்? என்றார் ஆர்வத்துடன்.

எனது மகள் வயிறறுப்பேரன் என்றார் தாத்தா. இந்தப் பதில் அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறன். உடனே என்ன மனிதனையா நீ ! போயும் போயும் மகபுள்ளே பேரனையா படிக்க வைக்கிறாய், அவன் உன்னை விட்டு போய் விடுவானே! அவனால் உனக்கு எந்த பிரயோசனமும் இருக்காதே! என்றார்.

போகட்டும். "ஆனால் இது என் கடமை. எனது மகளுக்கு நான் செய்யும் பிரதி உபகாரம் என்றார். என் மூத்த மகள் பள்ளிக்கூடம் செல்லதாவள். நானும் படிக்காதவன் தான் , ஆனால் என் பேரன் நன்றாகப்  படிப்பான். நல்ல வேலைக்குச் சென்று என் மகளை கவனித்துக் கொள்வான்" என்றார் தாத்தா. ஆம்! அவ்வளவு நம்பிக்கை என் மேல். இந்த வார்தைகள் எனது மனதில் ஆழமாக பதிந்து போன கல்வெட்டுக்கள் . எனக்கு நினைவு இருக்கும் வரை அழியாது.  

ஒரு முறை என் தாத்தாவைப் பார்க்க எனது இரண்டு சித்திகளும் வந்தார்கள். அப்பொழுது நான் BA  முதலாம் ஆண்டு அமெரிக்கன் கல்லூரியிலே படித்துக் கொண்டு இருந்தேன் . எனது சித்திகள் அவர்களுடைய குழந்தைகளையும் என்னை படிக்க வைப்பது போல் எனது தாத்தாவே படிக்க வைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியப்பட முடியாத காரணத்தால் மறுத்துவிட்டார். ஆம்!  அப்பொழுது விவசாயம் பொய்த்து போனதால் எங்களது குடும்பம் சற்று சிரமத்தில் இருந்தது. என்னை சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்தவர்கள் என் சித்திகள் தான். அவர்களின் அழுகை என்னை பாதித்தது.    அதேபோல் எனது தாய் மாமன்களும் அப்போது எனது தாத்தாவுடன் மனஸ்தாபத்தில் இருந்தார்கள். அதுவரை கூட்டுக் குடும்பமாக இருந்த அவர்களும் தனிக்குடித்தனம் செல்ல ஆசைபட்டார்கள்.  சூழ்நிலை எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. முதல்முறையாக எனது மனம் வலியின் சுவையினை அனுபவித்தது.
 
இருந்தாலும் எனது தாத்தா என் விசயத்தில் மிக உறுதியாக இருந்தார். குடும்பத்தின் குழப்பங்களில் இருந்து என்னை பாதுகாத்தார். அடுத்த முறை என் அம்மா வந்தார்கள். அவருடைய திருமணத்தின் போது நகை நட்டுகள் எதுவும் போடாததால் இப்போது கேட்க வந்திருந்தார். தங்கைகளுக்கு மட்டும் தலா பத்து சவரன் நகை போட்டது அவரது மனதில் உறுத்திக் கொண்டு இருந்திருக்கும். இந்தச் சமயத்திலும் என் தாத்தா கோபப் படவில்லை. பொறுமையாக இவ்வாறு பதில் அளித்தார். ஆமாம்மா! உனது திருமணத்தின் போது அவ்வளவு வசதி இல்லையென்று உனக்கே தெரியும். இருந்தாலும் உனக்கு போதுமான உதவிகளை செய்து வருகிறேன் (பல ஆண்டுகளாக உணவு தானியங்கள் கொடுத்துவந்துள்ளார்).  என் கடைசி காலத்திற்குள் உனக்கு சேர வேண்டியதை செய்து விடுவேன். இல்லையென்றால் என் பேரன் பார்த்துக் கொள்வானம்மா! கவலைப்படாதே! என்றார். என் மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. அவரின் அந்த தெளிவான பார்வை, நிதானம், நம்பிக்கை போன்ற பண்புகள் எனக்குப் பாடமாகவே இருந்தது. எனது பல வெற்றிகளுக்கு இவைகளே காரணமாக இருந்து வந்துள்ளன.   

இந்தச் சூழ்நிலையில் கி.பி.1981  இல், நான் BA  இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு தொலைபேசித் துறையில் டெலிபோன் ஆப்பரேட்டர் வேலை தேடி வந்தது. சந்தோசமாக ஏற்றுக்கொண்டேன். எனது 20  வது வயதிலே மத்திய அரசுப் பணியிலே சேர்ந்தேன். செழிப்பான நிலத்தில் வளரும் பயிர் நல்ல பலனைத் தரும் என்பதற்கு உதாரணமாக என்னையே நினைத்துக் கொள்வேன்.

வாழ்க்கை சந்தோசமாகவே சென்றது. நான் வாங்கும் சம்பளத்தை அப்படியே என் தாத்தாவிடம் கொடுத்து விடுவேன். எனக்கு தேவையானதை அவரிடமே திரும்பவும் கேட்டு வாங்கிக் கொள்வேன். என் தாத்தா மனம் விரும்பியவாறு சந்தோசமாக வாழ்ந்தார். இப்படியாக இரண்டரை ஆண்டுகள் முடிந்தன. ஒரு நாள் என்னை அழைத்தார். ஐயா!  நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்,போதும் எனக்கு.  இனிமேல் உன் குடும்பத்தை பார்த்துக் கொள்.  அது ஒரு பாசம் கலந்த  உத்தரவு.
சில மாதங்கள் சென்ற பின்பு , கி.பி.1986 இல் ஒரு நாள்...

மனதின் ஓரத்தில் பல ஆண்டுகளாக இனிமை காத்த அந்தக்காதலை என் தந்தையிடம் கூறினேன். குடும்பம் ரணகளமானது. எனக்கு காதல், கனவு இருந்தது போல் என் தாத்தாவிற்கும் இருக்குமல்லவா? . அவரின் பேத்தியை ; அதாவது என்னுடைய தாய் மாமன் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். பொருத்தமில்லாத அந்த உறவை ஏற்க என் மனம் இடம் தரவில்லை.
பரிதாபம்! இருவரின் ஆசையும் நிராசையாகிப் போய்விட்டது தான் வேதனை. உலகத்தின் உள்ள அத்தனை சோகங்களும் ,வேதனைகளும் என்னுள் வந்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்நாள் முழுவதும் யாருடைய வார்த்தைகளுக்கு மறுத்தலிக்காமல் வாழ்ந்து வந்தேனோ அவரின் வார்த்தைகளை என் காதல் மனம் ஏற்கவில்லை. அதேபோல் 26 வருடங்களாக எவனுக்கு வாழ்க்கையின் அணைத்து சூச்சுமங்களையும் கற்றுக் கொடுத்து வளர்த்தாரோ அவனின் மென்மையான காதலையும், கனவுகளையும் அவரே சிதைத்துவிட்டார். கூட்டுக்குடும்பம் சிதைந்தது.

சில வருடங்கள் கழிந்த பின்னர் என் திருமணம் சொந்த உறவுகள் இல்லாமலே நடந்தது. தாத்தா, தாய்மாமன்கள் யர்ரும் கலந்துகொள்ளவில்லை. ஏறத்தாழ ஒரு வருடம் கழிந்த பின்னர் நானும் என் மனைவியும் எனது தாத்தாவையும் பாட்டியையையும் பார்க்கச் சென்றோம். எனது பாட்டியை நான் அம்மா என்று தான் அழைப்பேன்; என்னை எட்டு மாதத்திலிருந்து தூக்கி வளர்த்தவர்கள்.  எனக்கு உண்மையான அம்மாவாக இருந்தவர்கள். எனது மனைவியுடன் என்னை பார்த்ததும் அந்த தாய்மனம் வாழ்த்ததானே  விரும்பும் . அவர்கள் கண்ணீருடன் எங்களை ஆசிர்வாதம் செய்தார்கள். அந்த ஆசிர்வாதங்களுக்கு பின்னே அவர்களுடைய ஏமாற்றம் இருந்திருக்கும் என்பது உண்மை.

கி.பி. 1993  இல் மார்ச் மாதத்தில் என் தாத்தா தனது சுவாசத்தை இழந்தார். ஆம் ! அவரது இரண்டாவது மகன் அவரை அடித்து அவமானப் படுத்திவிட்டதால் மனம் உடைந்து ஒரு வாரத்திலே இறந்து விட்டார். ஒரு நெடிய ஆலமரம் சாய்ந்தது. அந்த மரத்திலே கூடு கட்டி வாழ்ந்த பல பறவைகள் வேறு மரங்களை நாடி ஓடின. நாளடைவில் எனக்கும் ஒரு குடில் கிடைத்தது . அதன் பெயர் "வேலன்-பேச்சி இல்லம்". யார் கூறியது அவர்கள் இறந்து விட்டார்கள் என்று. அவர்கள் இன்னும் என்னுடனே வாழ்கிறார்கள்!.
 
இன்று எனக்கு புத்திசாலித்தனமான இரண்டு குழந்தைகள். நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை.  வேலாண்டியின் பேரன் நன்றாகவே அவனது குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கிறான். அவரின் கனவுகளை எதையும் அவன் மறந்து விடவில்லை. அவரின் மகளுக்கு நகை செய்து கொடுத்துவிட்டான், அவரது மகளின் குடும்பத்தை இன்னும் கவனித்து வருகிறான். வருவான்......

ஆனாலும், அவனுக்குள் வருத்தமும் உள்ளது. சிலசமயம், இரவின் இருட்டில்  தன்னை தோளில் சுமந்த அந்த நெடிய உருவத்தை மானசிகமாக நினைத்து அழுது கொள்வதுண்டு. அவரின் அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கலாமோ? என்ற குற்ற மனப்பான்மை அவ்வப்போது எழும். இருந்தாலும்,  எனது மனசாட்சிக்குப் புறம்பாக இதுவரை நான் நடந்து கொள்ளவில்லை என்ற நம்பிக்கை அதற்கு மருந்தாக அமையும். ஆனாலும், வேலாண்டி என்ற அந்த மாமனிதன் இல்லை என்றால் நானும் என் தந்தை போல் ஒரு கூலி தொழிலாளியாகவே வாழ்ந்து இருப்பேன் என்பது சத்தியமான உண்மை. இப்போதும் அமெரிக்கன் கல்லூரியின் வாயிலைக் கடக்கும் போது எனது தாத்தாவையும் பெயர் மறந்து போன அந்த  வாயிற்காவலனையும் நினைக்க தவறுவதில்லை.

----- சு.கருப்பையா.