Tuesday, 23 June 2015

அஞ்சலி !

இளங்காலைப்பொழுதின் இளந்தென்றல் காற்று மனதிற்கு இதமாக இருந்தது. எங்களது இரயில் வண்டி ஸ்ரீரங்கபட்டினத்தை கடக்கும் பொழுது மிதமான சாரல் மழையும் பெய்யத் தொடங்கியது. இருந்தாலும் அந்தக் காலை வேளையிலே என் மனதில் பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொண்டது. இங்கே தான் மாவீரன் திப்பு சுல்தான் வாழ்ந்து மறைந்தான் என்ற எண்ணம் மேலோங்க எட்டிப் பார்த்தேன்.  இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கோவில் பின்புறமாக கடந்து சென்றது. ஒரு வேளை அது ஸ்ரீரங்கநாதர் கோவிலாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

எனது இதயம் இந்தியாவில் பார்க்க துடித்த  ஒரே இடம்  இந்த ஸ்ரீரங்கபட்டினம் தான். திப்புசுல்தான் என்ற மாவீரன் மறைந்த இடத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற 25 ஆண்டு கடன் என்னை உறுதிக் கொண்டே இருந்தது . அந்த வாய்ப்பு எனது மகன் மூலமே எனக்கு கிடைத்தது. அவன் தன்னுடைய பணியில் சேருவதற்கு மைசூர் சென்றதால் நானும் எனது மனைவியும் கூடவே செல்ல வேண்டிய கட்டாயம். அவன் பிறப்பதற்கு முன்பே என் மனதில் வேரூன்றி வளர்ந்திருந்த அந்த உணர்வு , அவனின் வளமான வாழ்வு தொடங்க இருக்கும் இந்த நல்ல வேளையிலே எனது நீண்டநாள் கனவும் நிறைவேறப்போவது உண்மையிலே இரட்டிப்பு மகிழ்ச்சியே . மனம் திப்புவின் நினைவுகளில் இருந்து மீள்வதற்குள் மைசூர் வந்தது.

அந்தக் காலை வேளையிலே மழை பெய்து கொண்டிருந்தாலும் மைசூர் நகரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இரயில் நிலையத்தின் உள்ளையே நகராட்சி மற்றும் காவல்துறையினரால் நிர்வாகிக்கப்படும் ஆட்டோ நிலையம் (PREPAID) இருந்தது. பேரம் பேச வேண்டியதில்லை; சண்டையிட வேண்டிய அவசியமும் , அதிகப் பணம் பிடுங்கி விடுவார்களோ என்ற பயம் இல்லை. மைசூர் நகரம் முழுவதுமே இந்த முன்பணம் செலுத்தும் முறையில் தான் ஆட்டோ இயங்கிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மதுரை இரயில் நிலையத்தில் முகப்பில் நின்று கொண்டு பயணிகளை வரவேற்கும்  40 அல்லது 50 ஆட்டோ சகோதரர்களையும் , அவர்களை நிராகரிக்கும் நம்மவர்களும் தான் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
 
அன்று ஒரு நாள்  மைசூரிலே வேலை இருந்ததால் மறுநாள் தான் ஸ்ரீரங்கபட்டினம் செல்ல வேண்டிய நிலை. மாலையில் சிறிது நேரம் கிடைத்ததால் மைசூர் அரண்மனையை பார்த்து விடலாம் என்று என் மணைவி ஞாபகப்படுத்தினார். மிகவும் சிறந்த வேலைப்பாடுகளுடன், பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது மைசூர் அரண்மனை. உண்மையிலே நன்றாக பராமரித்தும் வருகிறார்கள். அரண்மனையின் பின் பகுதியில் மைசூர் இராஜ வம்சத்தினர் வாழ்ந்த பகுதியும் , அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் மிகவும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனக்கென்னவோ , அங்கே பார்த்த மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள் , அரண்மனை களியாட்டங்கள்,  வீட்டு உபயோகப் பொருள்கள்  போன்றவைகள் வீழ்ந்து மறைந்த இந்திய சமஸ்தானங்களின் வரலாற்றைக் கூறும் திவான் ஜர்மானி தாஸ் எழுதிய " மகாராஜா" என்ற நூலைத் தான் ஞாபகப்படுத்தியது. இரவு எங்களது தங்கும் விடுதிக்கு திரும்பும் போது மைசூர் அரண்மனையின் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.

அடுத்தநாள் , காலை 10 மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். மனம் எப்பொழுது ஸ்ரீரங்கபட்டினம் செல்வோம் என்று எதிர்பார்க்க துவங்கி விட்டது. எங்களது கார் காலை 11:30   மணிக்கு வந்தது. காரில் ஏறி அமர்ந்ததும் மனம் சிட்டாக பறந்து திப்புவின் கோட்டையை நோக்கிச் சென்று விட்டது.



அது அழிவு சின்னம் !!!. 

உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு எச்சங்களே மிஞ்சிப் போன திப்புவின் கோட்டை என்னை வரவேற்றது. அந்த நொடியில் மனம் கல்லாக இறுகிப் போனது. தண்ணீரற்ற அகழியை  முதலில் கடந்து முன்புற பாதுகாப்பு கோட்டைவாயில்  வழியாக நுழைந்து திப்பு என்ற மாவீரன் வாழ்ந்த இடத்திற்கு சென்றோம்.  முதலில் என் மணைவியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீரங்கநாதர் கோவிலை வேண்டாவெறுப்பாக சுற்றிவிட்டு , திப்புவின் நினைவிடத்திற்கு செல்லுவோம் எனது ஓட்டுனரிடம் கூறினேன். மனமும் கண்களும் , திப்பு இறுதியாகப் போரிட்ட "நீர்வாயில்" (WATER GATE) எங்கே என்று தேடியது. எங்களது கார் நீர்வாயிலை நோக்கி மெதுவாகச் சென்றது . அங்கே இருவர் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள். இப்போது நீர்வாயிலைப் பார்க்க பார்வையாளர்கள் அனுதிக்கப்படுவதில்லை  என்று ஓட்டுனர் தெரிவித்தார். அதனால் வெளியில் நின்று பார்க்க சிறிது நேரம் வண்டியை நிறுத்துமாறு கூறினேன்.

எனது கண்கள் நீர்வாயிலை நோக்கின; அங்கே துரோகியாக மாறிவிட்ட நிதி மந்திரி  மீர்சதிக்கினால் திறந்து விடப்பட்ட நீர் வாயில் வழியாக நுழைந்த  ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு போரிட்டுக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. கண்களில் கனல் தெறிக்க எதிர்பட்ட வெள்ளையர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டேயிருந்தான். கைகள் ஓயும்வரை வெட்டினான். எங்கும் பிணக்குவியல்கள் . அவனுக்கும் உடலெங்கும் இரத்தக்காயங்கள் , எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக்குண்டுகள் திப்புவின் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தன. அவனது கையில் இருந்த கத்தி நான்கு புறமும் சுழல்கிறது. என் கண்கள் முன்னாலேயே அவனது உடல் மெதுவாக சாய்கிறது.  நீர்வாயிலைச் சுற்றி நடந்த அந்தப் போரில் தனது 11000 வீரர்களுடன் சேர்ந்து எதிரிகள், தனது சகோதரர்கள் என்று பல உய்ரற்ற உடல்களுக்குள் சாய்ந்தான் விடுதலைப்போரின் விடிவெள்ளி மாவீரன் திப்பு சுல்தான்.

அந்த நாள் 04-05-1799. இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் என்பதை  முதலில் வெளிப்படுத்திய அம்மாவீரனின் சகாப்தம் நிறைவிற்கு வந்தது. வாழ்நாள் முழுவதும் தனது நாட்டு மக்களின் நல்வாழ்விற்க்காகவே  வாழ்ந்தும் , ஜாதி மதமற்ற ஒரு சமுதாயத்தை நிறுவ நினைத்த  ஒரு மாமனிதனின் கனவு அங்கே முறிந்து கிடந்தது.

அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் இப்போது வரலாறாகிப் போனது. அந்த சிறிய நினைவுத் தூணிற்கு முன்பு நான் மௌனமாக நின்றபோது மானசீகமாக அவனை நினைவு கூர்ந்தேன். ஸ்ரீரங்கபட்டினம்  வீழ்ந்த அந்த கொடிய இரவு மனதில் காயத்தை ஏற்படுத்தியது. எனது காலங்கடந்த நன்றி எனக்கு குற்ற மனப்பான்மையை தந்தது. நான் திரும்பும் போதும் வானம் இன்னமும் நீர்த் தாரைகளைப் ஸ்ரீரங்கபட்டினம் முழுவதும் பொலிந்து கொண்டுதான் இருந்தன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீரங்கபட்டினம் வீழ்ந்த அன்று இரவு முழுவதும் கடும்மழை பெய்தது என்று வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது.



Wednesday, 17 June 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-7

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

அதிகாரம்: புகழ் 

குறள்: 236

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

மு.வ உரை:

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
கலைஞர் உரை: 


இந்திய திரைப்படத் துறையின் வரலாற்றில்  மிக உன்னதமான இடத்தை பிடித்தவர் நடிகர் திலகம், சிம்மக்குரலோன் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிவாஜிகணேசன்  என்ற வி.சி. கணேசன் .

இவர் திரைப்படத்தில் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நிறைவான பணியை கொடுத்து, நடிப்பின் இலக்கணம் மற்றும் பல்கலைக்கழகம் என்று மதிக்கப்பட்டவர். இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதுகளான பத்மசிறி (1966), பத்மபூஷன் (1984), தாதா சாஹிப் பால்கே விருது (1997) போன்ற விருதுகளையும்  மற்றும் பல்வேறு விருதுகளையும் , பிரான்ஸ் நாட்டின் கலை இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான செவாலியர்" என்ற பட்டத்தையும் (1995) பெற்றவர்.

1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ந் தேதி சீர்காழியில்,  சின்னையா மற்றும் ராஜாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த வி.சி.கணேசன் சிறு வயதிலே  வீட்டை விட்டு வெளியேறி கூத்து மற்றும் நாடகங்களில் நடித்து வந்தார். 1946 ஆம் ஆண்டு அண்ணா எழுதிய " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் " என்ற நாடகத்தில் மாவீரன் சிவாஜியை பிரதிபலிக்கும் விதமாக சிறப்பாக நடித்ததால் தந்தை பெரியார் அவருக்கு " சிவாஜி" என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார்.  1952 ஆம் ஆண்டு , சிவாஜி நடித்து வெளியான அவரின் முதல் திரைப்படமான " பராசக்தி", மாபெரும் வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் சிவாஜியின் நடிப்பும் , வசன உச்சரிப்பும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அடுத்து 1960 இல் கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்கா-ஆசிய திரைப்பட விழாவில்  அவரின் அடுத்த சிறந்த படமான "வீரபாண்டிய கட்டபொம்மன்" கலந்து கொண்டு அவருக்கு சிறந்த நடிகருக்கான முதல் பரிசினை பெற்று தந்தது. . அதன் மூலம் அவரின் நடிப்புத்திறன் உலக நாடுகளில் கொடிகட்டிப் பறந்தது. மொத்தத்தில் அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று ஐந்து மொழிகளில் ஏறத்தாள 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன்  சினிமாவில் நடித்ததோடு மட்டுமல்லாமல்  அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்திலும்  உறுப்பினராக இருந்தார். 1961 இல் அவர் திருப்பதி கோவிலுக்குச் சென்றதை தி.மு.க கட்சி கடுமையாக விமர்சனம் செய்ததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1984 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராகவும்   ( ராஜ்ஜிய சபை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி புகழின் உச்சியில் இருந்த சிவாஜி கணேசன் , 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் " தமிழக முன்னேற்ற முன்னணி"  என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் இயங்கிய அ.தி.மு.க கட்சியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். இவரும் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரால் தேர்தலில் வெற்றிபெற இயலவில்லை. மிகச் சிறந்த நடிகராக மக்களின் மனதை வென்ற சிவாஜியால் ஒரு அரசியல்வாதியாக வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தார்.  மனம் வெதும்பிப் போன சிவாஜிகணேசன் 1989 ஆம் ஆண்டு தமது கட்சியை ஜனதாதளத்தோடு இணைத்துவிட்டு அரசியலை விட்டு வெளியேறினார்.

பின்னாளில் , அரசியல்வாதியாக தோல்வியுற்றதைப் பற்றி கூறும் பொழுது " எனது அரசியல் சார்புள்ள நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க , அவர்கள் வாழ்விற்காக ,எனக்கு விருப்பம் இல்லாமலே அரசியல் கட்சி துவங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எப்பொழுது தவறான முடிவெடுத்து விட்டோமோ அதன் பிறகு அதனால் ஏற்படும் ஏமாற்றத்தையும்  எதிர்கொள்ளத் தானே வேண்டும்" என்று மனம் வருந்திக் கூறினார். அம்மாபெரும் கலைஞன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ந் தேதி மரணமடைந்தார்.

எனக்கு , இக்குறளை வாசிக்கும் போது  சிவாஜி கணேசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் வெற்றியும், தோல்வியும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.



Friday, 5 June 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-6

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

அதிகாரம்: காலம் அறிதல்

குறள்: 490

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
மு.வ உரை:

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
கலைஞர் உரை:


நம்நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகும் நம் மனதிலே பெரும் துயரத்தையும் , ஆழமான வடுவையும் ஏற்படுத்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வு என்பது 13/04/1919 ந் தேதி அமிர்தசரசிலுள்ள (பஞ்சாப்) ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், ஜெனரல் ஹாரி டயரால் நடத்தப்பட்ட  "ஜாலியன் வாலாபாக் படுகொலை" தான்.

இந்திய மக்களின் பேச்சுச்சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் மற்றும்  ஊர்வலம் செல்லும் சுதந்திரம் போன்றவற்றைத் தடை செய்யும் ரௌலட்சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது பஞ்சாப் மாநில கவர்னராக இருந்தவர் கொடுமையே உருவான சர் மைக்கேல் ஒ டயர் என்பவர். இவரின் உத்தரவின் படி தான் ஜெனரல் ஹாரி டயர், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 10 நிமிடங்களுக்குள் 1650 தடவை சுட்டு,  சுமார் ஆயிரம் அப்பாவி மக்களை கொன்று குவித்தான். ( அரசாங்க அறிவிப்பின் படி 379 பேர்கள்). பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என்று 2000 பேர்கள் குண்டடிபெற்று காயம்பட்டிருந்தார்கள். அந்த மைதானம் முழுவதும் உடல்கள் சிதறிக்கிடந்தன , இரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மைதானமே ஒரு சுடுகாடாகக் காட்சியளித்தது.

அந்த கொடுமையான நிகழ்ச்சியை அறிந்த ஒரு பத்தொன்பது வயது வாலிபன் அன்று இரவு தன் பள்ளித் தோழர்கள் சிலரை அழைத்துக்கொண்டு இருள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்திற்குள் சிறு விளக்கோடு புகுந்தான். குண்டடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல சகோதர,சகோதரிகளுக்கு தண்ணீர் கொடுத்தான். தண்ணீரைக் குடித்துவிட்டு சிலர் உயிரை  விட்டனர், பலர்  தெளிவு பெற்றனர். தெளிவு பெற்றவர்களை விசாரித்து அவர்களது உறவினர்களிடம் சேர்க்கும் பணியை இரவு முழுவதும் செய்தான். எரிமலை போன்று மனதில் எழுந்த கோபம் அவனுக்குள்  பெரும் வைராக்கியத்தைக் கொடுத்தது. மைதானத்தில் கிடந்த இரத்தக்கறை படிந்த மண்ணை அள்ளி தனது துணியில் முடிந்துகொண்டான். என் தாய் நாட்டவர்களை சுட்டுப்பொசுக்கிய  அந்த கொடூரமனம் கொண்ட பாவிகளை பழி வாங்கியே தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டான். அவன் தான் ஷாகித் உத்தம்சிங்.

உத்தம்சிங்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சுனாம் என்ற கிராமத்தில் இரயில்வே துறையில் பணிபுரிந்த டெகல்சிங் மற்றும் நாராயணிகௌர் என்பவர்களுக்கு 26/12/1899 ந் தேதி பிறந்தான் உத்தம்சிங் . சிறு வயதிலே பெற்றோர்களை இழந்த அவன் அமிர்தசரசில் உள்ள " புத்திலிகர்" என்ற அனாதைவிடுதியில் சேர்ந்து உயர்நிலை கல்விவரை கற்றுத் தேர்ந்தான். ஜாலியன் வாலாபாக் படுகொலை அவனை மிகவும் பாதித்தது. இங்கிலாந்து திரும்பிவிட்ட சர் மைக்கேல் ஒ டயர்  மற்றும் ஜெனரல் ஹாரி டயர் ஆகிய இருவரையும் எப்படி பழி வாங்குவது , இலண்டன் எப்படி செல்வது என்று சதா சர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தான். இறுதியாக 1921 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் கப்பலில் பணியாளராக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் 1921 இல் அங்கிருந்து அமேரிக்கா சென்று , அதன் பிறகு அமெரிக்காவிலுள்ள இந்திய மாணவர்களின் உதவியின் மூலமாக இன்ஜினியரிங் பயிலும் மாணவன் என்று கூறிக் கொண்டு 1923 இல் இங்கிலாந்து சென்றான். அங்கே இலண்டன் தெருக்களிலே இரையைத் தேடும் புலியைப்போல் அவர்கள் இருவரையும் தேடி பல நாட்கள் அலைந்தான். ஐந்து ஆண்டுகளும் கழிந்தது . இன்ஜினியரிங் கல்வியும் முடிந்தது. ஆனாலும் இரண்டு டயர்களையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.  அந்தத் தருணத்தில் இந்தியாவில் ( 1928 இல்) லாகூர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த  பகத்சிங் , உத்தம்சிங்கை உடனடியாக இந்தியா வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தான். தன் உயிர் நண்பனின் அழைப்பை ஏற்று உத்தம்சிங் இந்தியா வந்தான்.

ஒரு நாள் போராட்டத்தின் போது , அவனிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி இருந்ததால் போலீசில் சிக்கிக் கொண்டான். ஆயுதத்தடைச்சட்டம் அப்பொழுது அமுலில் இருந்ததால் லாகூர் போலிஸ் அவனுக்கு ஆயுதத்தடைச்சட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை கொடுத்தனர். சிறையிலுருந்து 1932 இல் விடுதலையான உத்தம்சிங்கின்  மனம் முழுவதும் இங்கிலாந்தில் இருந்தது. போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனி தப்பிச் சென்றான் . பிறகு அங்கிருந்து இலண்டன் செல்வதற்கு சிரமம் ஏற்படவில்லை. இப்பொழுது,  கார் மெக்கானிக் பயிற்சி பெரும் மாணவன் என்று கூறிக்கொண்டு இலண்டன் சென்று அங்கே ஒரு பயிற்சிக் கூடத்திலும் சேர்ந்து கொண்டான். உணவிற்கும் , பயிற்சிக் கட்டணம் கட்டுவதற்கும் மற்றும் உடைகள் வாங்குவதற்கும் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்தான். இரவில் தூங்கும் பொழுது ஒவ்வொருநாளும் ஜாலியன் வாலாபாக் காட்சிகள் அவனது மனதில் நிழலாடும். மனதில் வலியுடன் ஊக்கமும் வலுப்பெறும். காத்திருந்தான். இடையில் ஜெனரல் ஹாரி டயர் காச நோயின் பிடியில் சிக்கி மரணமடைந்தான்.

அந்தத் தருணமும் வந்தது. ஆம்! 13/04/1940 இல் இலண்டனிலுள்ள காக்ஸ்டன் ஹாலில் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சர் மைக்கேல் ஒ டயர்  மற்றும் லார்ட் ஷெட்லாண்டு ( இங்கிலாந்தின் கிழக்கு ஆசியாவிற்கான வெளியுறவு மந்திரி)  இருவரும் வந்தனர். உத்தம்சிங் ஓசைபடாமல் கூட்டத்தில் புகுந்து மேடைக்கு முன்புறத்தில் உள்ள நான்காவது வரிசையில் அமர்ந்து கொண்டான். சர் மைக்கேல் ஒ டயர்  பேசி முடித்ததும் இருக்கையில் அமருவதற்காக திரும்பினார். இது தான் தருணம் என்று கருதிய உத்தம்சிங் பளிச்சென்று மேடையருகில் பாய்ந்து சென்று ரிவால்வாரை எடுத்து ஆறு முறை சுட்டான். டயரின் கதை முடிந்தது. பின்னர் மேடையில் உட்கார்ந்திருந்த லார்ட் ஷெட்லாண்டு மற்றும் அனைவரையும் நோக்கி சகட்டுமேனிக்குச் சுட்டான். ஜெனரல் டயர் கூறியது போல் ஆசை தீரச்சுட்டான் . இருபத்தொரு ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்து தனது சபதத்தை நிறைவேற்றிய திருப்தி அவனது முகத்தில் தெரிந்தது. உத்தம்சிங் துளியும் தப்பியோட முயலவில்லை. அமைதியாக சரணடைந்தான். நீதி விசாரணை நடந்தது. உத்தம்சிங் லண்டன் நீதிமன்றத்தில் நிகழ்த்திய உரையைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இறுதியாக உத்தம்சிங்கிற்கு ஆங்கிலேய நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.  அவன் 31/07/1940 ஆம் தேதி பெண்டோன்வில்லி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான். உத்தம்சிங் தனது பெயரை லண்டன் நீதிமன்றத்தில் "ராம் முகம்மது சிங் ஆசாத்" என்று குறிப்பிட்டது இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஜாதி, மத மற்றும் இனஉணர்வுகளை கடந்த ஒற்றுமையையும், எழுச்சியையும் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.  அந்த மாவீரன் உத்தம்சிங்கை அடையாளம் காட்டுகிறது இக்குறள்.