Sunday 10 February 2019

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-10

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

 அதிகாரம்:  ஊக்கமுடைமை  

குறள்: 597

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
மு.வ உரை:

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
கலைஞர் உரை:



இக்குறளை வாசித்த பொழுது எனக்கு இந்தியாவின் மாபெரும் புரட்சியாளன் பகத்சிங் தான் என் ஞாபகத்திற்கு வந்தான். அன்று 23-03-1931 ந் தேதி தூக்குக்கயிறை முத்தமிட செல்லும் தருணத்திலும் ,எந்த சலனமும் இல்லாமல் " அரசும் புரட்சியும் " என்ற லெனின் நூலை வாசித்த அந்த நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. நான் சோர்ந்து போகும் நேரத்திலெல்லாம் அவன் தான் எனக்கு வலு கொடுத்துள்ளான். அவனது வாழ்க்கை நம்  தேசத்தின் எழுச்சி; என்றென்றும் அழிக்கமுடியாத வரலாறு. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவனை அறிந்திருக்க வேண்டும். இந்தியத் தாயின்  அடிமை விலங்கை வெட்டியெறிய அவனும் , அவனது தோழர்களும் ஆற்றிய பங்களிப்பும் , உயிர் தியாகமும் இந்திய அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது.





பகத் சிங் ,  1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அல்லது 28 ந் தேதி  பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.  இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட  சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.   இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால்  குறிப்பிடப்படுவதுண்டு.

1919இல், தனக்கு பன்னிரெண்டு வயதான போது, பகத்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நினைத்து மனம் வெதும்பிய பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார். மாபெரும் புரட்சியாளனும் , சிறந்த வீரனுமான சந்திரசேகர ஆசாத்தை தனது குருவாக ஏற்றுக் கொண்டவன். அவரே பகத்சிங்கிற்கு துப்பாக்கி சுடுவதற்கும்,  வெடிகுண்டு வீசுவதற்கும் பயிற்சியளிக்கிறார்,


பின்னர்,  இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928 இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே லஜபதி ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் லஜபதிராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார்.

பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை  என்றாலும் லஜபதிராயின் மரணத்திற்கு பழி வாங்க உறுதி பூண்டு  சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார்.  ஆனால் பகத்சிங்கிற்கு , ஸ்காட்டிற்குப் பதிலாக தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் பகத்சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர். சான்டர்சை கொலை செய்த பின்பு  பகத்சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். 

பின்னர் சைமன் கமிஷனுக்கு எதிராக,   1927 இல் மத்திய சட்டமன்ற மண்டபத்தில் பகத்சிங் , தோழர்களுடன் சேர்ந்து குண்டு வீசி , பிரசுரங்களைப் போட்டுவிட்டு , முழக்கங்களை எழுப்பி , தப்பியோடாமல் சரணடைந்தார். " செவிடர்களை உசுப்பி விடுவதற்கான இடியோசை இது " என்றும் " கேளாத செவிகள் கேட்கட்டும்" இந்த நடவடிக்கையை விவரித்தார். இவ்வழக்குடன் சாண்டர்ஸ் கொலை வழக்கு விசாரணையும் சேர்ந்து கொண்டது. 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ந் தேதி, ஆங்கில சிறப்பு நீதிமன்றம் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர்களுக்கு தூக்குத் தணடனை விதித்தது. 

பகத்சிங் , மேற்கு பஞ்சாபிலுள்ள மியான்வலி சிறைச்சாலையில் இருந்தபோது , சிறை வசதிகளை மேம்படுத்தக்கோரி தோழர்களுடன் சேர்ந்து மொத்தம் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். தண்ணீர் கூட அருந்தாமல் அவர்கள் நடத்திய  கடுமையான உண்ணாவிரத போராட்டம் ஆங்கில அரசாங்கத்தை உலுக்கியது. அப்போராட்டத்தை உடைக்க சிறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும்  பகத்சிங்க்கும் , தோழர்களும் முறியடித்தார்கள். 63 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு யதீந்திரநாத் தாஸ் உயிழந்தார். சிறையதிகாரிகள்  அவரது உண்ணாவிரதத்தை முறிக்க வலுக்கட்டாயமாக பாலைப் புகட்டும் போது , அது மூச்சுக்குழாயில் நுழைந்து அவரது உயிரைப் பறித்தது. வீரம் செறிந்த இப்போராட்டம் அவர்களின் மனஉறுதியைக் காட்டியது. 

ஆனாலும் , சிறையில் அப்புரட்சி வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே  காலம் கழித்தனர்.  நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் விடுவதில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. பகத்சிங்கின் தந்தை  தூக்குத்தண்டனைக்கு எதிராக கருணை மனு கொடுக்க கேட்ட பொழுது அதை தீவீரமாக மறுத்துவிட்டார். தமது தாய் நாட்டிற்காக உயிர்துறப்பதை மிகவும் விருப்பத்துடன் வரவேற்பதாகவும் , அதுவே இந்திய இளைஞர்களை புரட்சிக்கு தூண்டும் சக்தியாக இருக்கும் என்று திடமாக நம்பினார்.



பகத்சிங்கும் மற்றும் அவனது தோழர்கள் சுகதேவ் ராஜகுரு ஆகியோர்கள்  23-03-1931 ந் தேதி லாகூர் சிறையில் மாலை 07-28 மணிக்கு ( வழக்கத்திற்கு மாறாக) தூக்கிலிடப்பட்டனர். தூக்கு மேடைக்கு செல்லும் போது மூவரும் மணமேடைக்கு செல்லும் மாப்பிள்ளைகள் போல் உற்சாகத்துடன் சென்றனர். முகத்தில் கறுப்புத்துணியை கூட அணியாமல் , தங்களாவே தூக்குக்கயிற்றை எடுத்து மாட்டிக்கொண்டு , " இன்குலாப் ஜிந்தாபாத் ; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக" என்று முழங்கினார். அந்த புரட்சி வீரர்களின் உயிரை ஆங்கில அரசாங்கம் பறித்துக் கொண்டது. தேசமே துயரத்தில் ஆழ்ந்தது. 

பகத்சிங் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு நூல்களை படித்து பல குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அக்குறிப்புகள் " பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள்" என்ற தலைப்பில் புத்தகமாகவும் வந்துள்ளது. அதே போல் , அவர் எழுதிய  " நான் ஏன் நாத்திகனானேன் " என்ற புத்தகமும் மிகவும் புகழ் வாய்ந்தது. 

இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகியும்  பகத்சிங்கும் அவனது தோழர்களும் அன்று ஏற்றிய புரட்சித் தீயை இன்றும் நினைவு கூறுகிறார்கள். எங்கெல்லாம் " இன்குலாப் ஜிந்தாபாத்" , புரட்சிஓங்குக என்ற  குரல் எழுகிறதோ , அங்கெல்லாம் அந்தக் குரலுக்குச்  சொந்தக்காரனாக  பகத்சிங்கின் நினைவுகள் எழுந்தே தீரும். திருவள்ளுவர் குறிப்பிட்டது போல்  மரணத்தை நோக்கி முள்படுக்கையில் வாழ்ந்த போதும் கலங்காத மாபெரும் புரட்சியாளன் பகத்சிங்.



1 comment:

  1. Play slots online - LuckyClub.live
    No doubt you know there is a lot of love in luckyclub the game, but as such we cannot deny this

    ReplyDelete