Saturday, 9 February 2019

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-9

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

அதிகாரம்:  பண்புடைமை: குறள்: 994


நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும். (கலைஞர் உரை).

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர். (மு.வ உரை)

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர். (சாலமன் பாப்பையா உரை).


 இக்குறளுக்கு முழுப்பொறுத்தமாக வாழ்ந்தவர் முன்னாள் தமிழக முதல்வரும் , கர்மவீரர் என்றும் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தான்.





இவர் விருதுநகரில் குமாரசாமி , சிவகாமி தம்பதியினருக்கு 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார். ஏழ்மை நிலையில் இருந்ததால்  அவரால் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் , தமது மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருக்கும் போது டாக்டர்.பெ.வரதராசுலு போன்ற தேசத்தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும் , சுதந்திரப் போராட்டத்திலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16 வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார்.

கி.பி. 1930 ஆம் ஆண்டு இராசாசி அவர்களின் தலைமையில் வேதாரணியத்தில்  நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். அதற்காக காமராஜர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைச்சாலைக்கு அனுப்ப பட்டார். காமராஜர் சிறந்த பேச்சாளரும் , நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தியை தமது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1936 ல் சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரசின்  தலைவரான போது அவர் காமராஜரை செயலாளராக ஆக்கினார். அதன் பிறகு கி.பி. 1942 ஆம் ஆண்டு , ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தேசப் போராட்டத்தில் காமராஜர் கலந்து கொண்டதால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.


அரசியலில் நேர்மையையும் , ஒழுக்கத்தையும் கடைபிடித்த காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். எண்ணிலடங்கா நல்ல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இவர் காலத்தில் பொருளியல் தொழில்துறைத் திட்டங்கள் மிகுந்தன. மின் திட்டங்கள், சாலை திட்டங்கள் ஆகியவை மிகுந்தன. கிண்டி, அம்பத்தூர், பெருந்துரை போன்ற தொழிற்பேட்டைகளில் பல தொழில்கள் செய்யப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. பயிர்களுக்குப் பாசன வசதிகள் செய்யப்பட்டன. கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்து சிற்றூர்களிலும் பேறூர்களிலும் அமைக்கப்பட்டன. அணைகள் கட்டப்பட்டன. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை; போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அருவைச்சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சருக்கரை ஆலை, சோடா உப்புத் தொழிற்சாலை, பெரம்பூர்த் தொடர்வண்டிப்பெட்டித் தொழிற்சாலை முதலியவை அமைக்கப்பட்டன. குறிப்பாக , தமிழகத்தில் உள்ள முக்கிய திட்டங்கள் அனைத்தும் கர்மவீரர் காமராஜர் காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக காமராஜர்,  குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார் . இவர் காலத்தில் தான் தமிழகத்தில் 27000 பள்ளிகள் துவக்கப்பட்டன. அனைத்து ஊர்களிலும் தொடக்க, மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளும் கட்டப்பட்டன. பள்ளி நாட்கள் உயர்த்தப்பட்டன. குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு உணவு ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்று அறிந்து , பள்ளியிலே மதிய உணவு திட்டத்தை 1960 ல் கொண்டு வந்தார். அதனாலே காமராஜர் " கல்விக் கண் திறந்த கர்மவீரர்" என்று மக்களால் போற்றப்பட்டார். காமராஜர் அவர்களின் சிறப்பான பணியின் காரணமாக பிரதமர் நேரு அவரை மிகவும் மதித்தார். அதனால் ,1963 ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1964 ல் நேரு இறந்த போது ,பிரதமர் பதவியை லால்பகதூர் சாஸ்திரிக்கும் , 1966 ல் சாஸ்திரி இறந்த போது இந்திரா காந்திக்கும் பெற்றுக் கொடுத்த  தன்னலமற்ற தியாகச்செம்மல் இவர். காமராஜர் நினைத்திருந்தால் பிரதமர் பதவியை அவரே அடைந்திருக்க முடியும். ஆனால் பதவி ஆசை , சுயநலம் போன்றவைகள் இல்லாத அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர். இவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலம் ( 1954-1963) தான் தமிழகத்தின் பொற்காலமாகும். இவ்வாறு மக்களால் பெரிதும் போற்றப்பட்ட காமராஜர் , மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். இவர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ந் தேதி , அதாவது காந்தியின் பிறந்த தினத்தில் இறந்தார்.  அவர் இறக்கும் போது  அவர் பையில் சிறிதளவு பணமும் , பத்து வேட்டியும், சட்டைகளுமே இருந்தன; வேறு வங்கிக் கணக்கோ , வீடோ இல்லை. இந்திய வரலாற்றில் இப்படியொரு தலைவன் ( மனிதன்)  இனிமேல் பிறப்பது அரிதிலும் அரிது.  . இவரது வாழ்க்கை வரலாறு  ஒவ்வொரு மாணவனுக்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  


No comments:

Post a Comment