Monday, 11 February 2019

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-11

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

குறள் 423 :  அதிகாரம்- அறிவுடைமை.


எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.( மு.வ உரை)


எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.( சாலமன் பாப்பையா உரை)


எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். (கலைஞர் உரை).



 மரு. .கான்ஸ்டான்டைன் ஹெர்ரிங்
தோற்றம்: 01-01-1800
மறைவு: 23-06-1880

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் பொழுது ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவருக்கும் அன்று நினைவுக்கு வருவது   மருத்துவர் ஹெர்ரிங்  தான்.  ஆம் !  18 ஆம் நூற்றாண்டில் ,  மருத்துவர் சாமுவேல் ஹானிமன் ஹோமியோபதி மருத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்த பிறகு , அதை அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் எடுத்து சென்றவர் இவரே. இவரும் ஒரு ஜெர்மானியரே. ஆனால் , அமெரிக்காவில்  ஹோமியோபதியை முழுவீச்சில் செயல் படுத்தியதால்        "அமெரிக்க ஹோமியோ மருத்துவத்தின் தந்தை  " என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.    இவருக்கும் , இந்த குறளுக்கும் மிகவும் சம்மந்தமுள்ளது. அக்கதையை இப்போது பார்க்கலாம். 


ஹெர்ரிங் தமது 17 வது வயதில்  "  சர்சிகல் அகாடமி அப் டிரிஸ்டன்”  இல் சேர்ந்து படிப்பு முடிந்தவுடன்  , மருத்துவம் பயிலுவதற்காக   கி.பி 1820 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.  அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் பிரபல மருத்துவ சிகிச்சை நிபுணர் மரு. ஹென்ரிச் ராபி.  இவர் மாமேதை ஹானிமனுக்கும்  அவரின் கண்டுபிடிப்பான ஹோமியோபதிக்கும் கடுமையான எதிரியாகத் திகழ்ந்தவர்.


கி.பி 1821 இல்  மாமேதை ஹானிமன் ஹோமியோபதியை தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது அதற்கு இணையாக கடுமையான எதிர்ப்பும் வலுத்திருந்தது . லீப்சிக் நகரின் பிரபல பத்திரிக்கையாளர் திரு.பாம் கார்ட்னர்   ( C.BAUMGARTNER)  ஹோமியோபதியை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில்,  அது ஒரு தவறான மருத்துவமுறை ; மக்கள் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தை வெளிக்கொணருமாறு ஒரு புத்தகம் எழுதுமாறு  மரு.ராபியை அணுகினார்ஆனால் அவருக்கு நேரம் இல்லாத காரணத்தால் அப்பணியை அவரின் சிறந்த மாணவரான ஹெர்ரிங் வசம் ஒப்படைத்தார்.  


மருத்துவர் ஹெர்ரிங் மிகவும் நேர்மையான குணத்திற்குக் சொந்தக்காரர் . தமது கடமையில் சரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர்.  எக்கருத்தையும்  ஆழமாக புரிந்துகொண்ட பிறகே , அது சரியென்றால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் குணம் படைத்தவர்.  மருத்துவர் ராபியின் கோரிக்கையை  ஏற்றுக் கொண்ட ஹெர்ரிங் ,  ஹோமியோபதி பற்றி விமர்சிக்கும் முன்பு அதை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் ,  ஹோமியோபதி மருத்துவம் பற்றியும் , அதன் தத்துவார்த்த பின்னணி பற்றியும் கற்க ஆரம்பித்தார்.


மாமேதை ஹானிமனின் கட்டுரைகளையும் , மருந்து நிருபணங்களையும் சேகரித்து நுணுக்கமாக ஆராய்ந்தார்.    ஹோமியோபதி மருத்துவம் உருவாக காரமாக இருந்த சின்கோனா மருந்தை ( CHINA) உட்கொண்டு மறுபடியும் நிருபணம் செய்து ஹானிமனின் பரிசோதனை சரிதான் என்று உறுதியும் செய்தார்.  ஹோமியோபதியின் மேல் அவருக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஹோமியோபதிக்கு எதிராக எழுதுவதற்கு எந்தக் கருத்தும் இல்லாமல் போய்விட்டது.
 

இத்தருணத்தில் ஹெர்ரிங் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்தது . அதாவது கி.பி. 1824 இல்  ஹெர்ரிங் ஒரு சவத்தை அறுத்து பரிசோதனை செய்த பொழுது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுபின்னர் சீழ்பிடித்து கடுமையான புண்ணாக மாறிவிட்டது.  அவரது காயத்தைப் போக்கும் ஆற்றல் எந்த பாரம்பரிய மருந்திற்கும்  இல்லாமல் போய்விட்டது. அவரது கட்டைவிரலை எடுக்க வேண்டிய நிலை.
 

அச்சமயத்தில் ஹானிமனின் மாணவர்களில் ஒருவரான மரு .கும்மர்  ( KUMMER)  ஹெரிங்கை பரிசோதித்து சரியான ஹோமியோபதி மருந்தான  “ ஆர்சனிகம் ஆல்பம்" என்ற மருந்தைக்  கொடுத்தார்.  சில வேளை மருந்து உட்கொண்ட பின்னர் காயம் முழுமையாக நலமாகி குணமடைந்தார்.  அவரது கட்டைவிரல் காப்பாற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சி ஹெர்ரிங் அவர்களுக்கு  மிகப் பெரிய ஆச்சரியத்தையும்ஹோமியோபதியின் மீது நம்பிக்கையையும்  ஏற்படுத்தியது .  உடனடியாக தான் ஹோமியோபதிக்கு மாறிவிட்டதாக அறிவித்தார்.  கி.பி.1826 இல் லீப்சிக் பல்கலைகழகத்தில் மருத்துவப் பட்டம் பெறும்போது அவர் சமர்பித்த " எதிர்காலத்திற்கான மருந்துகள் " ( On the medicine of the future) என்ற ஆய்வுக் கட்டுரை ஹெர்ரிங்  ஹோமியோபதிக்கு முழுமையாக மாறிவிட்டதை உறுதி செய்தது.  


கி.பி. 1833 இல் அமெரிக்கா சென்று அங்கே பிலடெல்பியாவில் தங்கினார். கி.பி.1848 இல் " ஹானிமன் மருத்துவக் கல்லூரி"யை தொடங்கி தமது மருத்துவ சேவையினை தொடர்ந்தார். இக்கல்லூரியே உலகம் முழுவதுமுள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் மிகச் சிறந்தது என்று இன்று வரை கருதப்படுகின்றது. ஹெர்ரிங் மற்றும் அவரது மாணவர்களும் சேர்ந்து ஆண்டிற்கு 50000 துயரர்களை நலமடைய செய்ததோடு மட்டுமல்லாமல்  3500 ஹோமியோபதியர்களையும் உருக்காகினார்கள். 


மரு. ஹெர்ரிங் தமது அனுபவங்களையும் ,மருந்துகளையும் " வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் (Guiding Symptomsபதிவு செய்ய ஆரம்பித்தார். அவை, " மருந்துகாண் ஏட்டின் வழிகாட்டும் குறிகள் " என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் கி.பி. 1879 இல்    வெளிவந்தன. மற்ற எட்டு தொகுதிகளும் அவரது மாணவர்களால் எழுதப்பட்டு அவரது மறைவிற்குப் பிறகே கி.பி.1891 இல்   வெளியிடப்பட்டன.  


கி.பி. 1880 இல் அதாவது  23/06//1880 ந் தேதி  தான் இறப்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு வரை கொட்டும் பனியில்  ஒரு இதய நோயாளியை பார்த்துவிட்டு வந்து  இரவு பத்து மணிக்கு மேல் இறந்தார் . அதனால் இந்தக் குறளை வாசிக்கும் போதெல்லாம் நம் நினைவிற்கு வருபவர்களில்  மருத்துவர் ஹெரிங்  அவர்களும் ஒருவர் என்பதில் ஆச்சரியமில்லை தானே!.


1 comment:

  1. SEGA Genesis® Casino App - MJHub
    › app › sg-ga-genesis- › app › sg-ga-genesis- This is the ultimate 김포 출장안마 way to experience 수원 출장안마 Sega's 16-bit console. From the stylish 광주 출장마사지 Evercade to the old-school Mega Drive, this is a SEGA Genesis® game console for 부산광역 출장샵 PC  Release date: 익산 출장안마 June 28, 2019 In stock

    ReplyDelete