Thursday, 30 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-5



ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

செங்கோன்மை

 குறள் 541:

 

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

கலைஞர் உரை:

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

மு.வ உரை:

 

மாவீரன் ஷெர்ஷா சூரி (காலம் : 1486 முதல் - 22-05-1545 வரை ).  முகலாயப்பேரரசர் ஹுமாயினைத் தோற்கடித்து கி.பி.1540 முதல் கி.பி.1545 ஆண்டுவரை ஐந்தாண்டுகள் மட்டுமே டில்லியை ஆட்சி புரிந்தவர். நீதி மற்றும் வரி வசூலில் பல சீர்திருத்தங்கள் செய்தவர். இந்தியாவில் , பஞ்சாப்-வங்காளம்; ஆக்ரா-சித்தூர்; லாகூர்-மூல்தான் போன்ற நகரங்களை இணைக்கும் சாலைகள் அமைத்தவரும் அவரே.  குடி மக்களிடையே எந்த பாரபட்சமும் கூடாது என்பதில் ஷெர்ஷா மிகக் கறாராக இருந்தார்.



 

அவனது நேர்மைக்கும் , நீதிவழங்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக அமைந்த ஒரு நிகழ்வை பேராசிரியர் அருணன் , தமது காலந்தோறும் பிராமணியம் பாகம் II&III இல் குறிப்பிடுகிறார். ஷெர்ஷாவின்  மூத்த மகன் அதல்கான் . இவன், ஒருநாள்  யானை மீதேறி ஆக்ரா வீதிகளில் போய்க் கொண்டிருந்தான் . தெருவின் ஓரத்தில் ஒரு கடைக்காரர் வீடு வந்தது. இடிந்த வீடு; மறைப்புகள் இல்லை. அதனுள்ளே கடைக்காரர் மனைவி ஆடைகளின்றி குளித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்ட அதல்கான் அவள் அழகில் மயங்கி சிறிது  நேரம் பார்த்து விட்டு மோகத்தில் ஒரு பீடாவை அவள் மீது எரிந்து விட்டுப் போய்விடுகிறான்.   அவமானத்தில் குறுகிப் போன அப்பெண் , தனது கணவன் வந்ததும் நடந்ததைக் கூறி தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் , தான் சாகப்போவதாகவும் அழ ஆரம்பிக்கிறாள். அவன் நேரே  ஷெர்ஷாவிடம் போய் அவரது மகனை பற்றிப் புகார் செய்தான்.

 

ஷெர்ஷாஇஸ்லாமியச் சட்ட விதிகளின்படி தனது மகனுக்கு தண்டனை தர முடிவெடுத்தார். வேறென்ன !  பதிலுக்குப் பதில் தான்.  அதாவது தனது மகன் அதல்கானின் மனைவி ஆடையின்றி குளிக்க , யானை மீதிலிருந்து அவளைப் பார்த்து கடைக்காரர் பீடா வீச வேண்டும். இதுவே தீர்ப்பு! ஆடிப் போய்விட்டது அரசவை. மந்திரி பிரதானிகள் , பிரபுக்கள் ஷெர்ஷாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். அசையவில்லை ஷெர்ஷா.  அவரின் நேர்மையான தீர்ப்பினைக் கண்டு அசந்து போன கடைக்காரரே தனது புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். மாவீரனும் , சிறந்த நீதிமானுமான ஷெர்ஷாவின் 5 ஆண்டு கால  ஆட்சியில் தான் டெல்லி மக்கள் மகிழ்ச்சியாகவும் , அமைதியாகவும் வாழ்ந்தார்கள் எனவும் , இரவில் கூட பெண்கள் தனியாக நடமாடும் அளவிற்கு டெல்லி பாதுகாப்பாக இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

Wednesday, 29 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-4

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

அதிகாரம் : இன்னாசெய்யாமை

குறள்: 314

 

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

கலைஞர் உரை:

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
சாலமன் பாப்பையா உரை:

 

இந்திய சுதந்திரப்போரின் விடிவெள்ளி என்று அழைக்கப்படும்  மைசூர்ப்புலி மாவீரன் திப்பு சுல்தானின்  (காலம்  20-11-1750 முதல்  04-05-1799 வரை )  படைப்பிரிவில் பணிபுரிந்தவன் முகம்மதுஅலி.   உயிரை துச்சமாக மதித்து போரிடும் சிறந்தவீரன். அவன் திப்புவின் தந்தை ஹைதர் அலியின் கீழும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டவன். ஆனால் ஒரு பெண்ணிற்காக ஆங்கிலேயரின் சூழ்ச்சி வலையில் சிக்கி திப்புவுக்கு எதிராக  திரும்பி விடுகிறான். மைசூரின் இராணுவ ரகசியங்களையும் , திட்டங்களையும் ஆங்கிலேயருக்கு தெரிவிக்கிறான். அவனது துரோகத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வந்த தளபதி காஜிக்கான் , ஆதாரத்தோடு அவனைப் பிடித்து திப்புவின் முன் நிறுத்தி அவனுக்கு தண்டனை தருமாறு கேட்கிறார்.  உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று வினவுகிறார் திப்பு. தெரியும் ! எனக்கு மரண தண்டனை கொடுக்கப்போகிறீர்கள்! என்று தைரியமாகக் கூறுகிறான் முகம்மது அலி. திப்பு ஒரு நிமிடம் அவன் முகத்தைப் கூர்ந்து பார்க்கிறார்.  பிறகு , மிகவும் கம்பீரமாக இப்படி உத்தரவிடுகிறார்!. முகம்மதுஅலி! உன்னை மன்னித்து விட்டேன்  .  ஆனால் இனிமேல் என் முகத்தில் விழிக்காதே!. இந்த நாட்டைவிட்டு உடனே வெளியேறிவிடு! என்று உத்தரவிடுகிறார் திப்பு.



காஜிக்கானுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விடுகிறது . சுல்தான் !,  கடும் போராட்டத்திற்குப் பிறகே இவனை ஆதாரத்தோடு பிடிக்க முடிந்தது. ஆனால் அவனை மன்னித்துவிட்டீர்களே ! இது நியாயமா? என்று வருத்தப்படுகிறார். அதற்கு திப்பு, காஜிகான் அவர்களே! இவன் பதினாறு ஆண்டுகள் நம் நாட்டிற்காக என் தந்தையிடமும் என்னிடமும் பல போர்க்களங்களில் பணியாற்றி உள்ளான். அவனால் நமது நாட்டிற்கு நன்மை விளைந்து உள்ளது.  அவன் இப்போது செய்திருக்கும் தவறுக்காக தண்டனை அளிப்பதை விட இதற்கு முன்பாக அவன் செய்த நன்மைகளுக்குப் பிரதிபலனாக அவனை மன்னித்து  உயிரோடு விடுவது தான் சரியாக இருக்கும் என்று கூறுகிறார்.

திருவள்ளுவர் எழுதிய இக்குறளுக்கு பொருத்தமான ஒரு மனிதனாக வாழ்ந்து வந்திருக்கிறான்  மாவீரன் திப்புசுல்தான்.  கி.பி. 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர்ப் போரில் அவன் இறந்த பின்னரே மைசூரை ஆங்கிலேயரால் பிடிக்க முடிந்தது.  இந்தியாவும் முழுமையாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது  என்கிறது இந்திய வரலாறு.


Thursday, 23 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-3

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

 

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

மு.வ உரை:

புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்

சாலமன் பாப்பையா உரை:

 அதிகாரம்: மானம்

குறள்: 962

இந்தியாவின் வீரம் செறிந்த மாவீரர்களில் ஒருவர் மேவாரின் மன்னர் மகாராணா பிரதாப் சிங் (காலம்  09/05/1540 முதல் 29/01/1597 வரை). மறைந்திருந்து , திடீரென்று  எதிரிகளைத் தாக்கும்  கொரில்லாப்போரின் முன்னோடி. இவரது தந்தை மகாராணா உதயசிங் மேவாரின் தலைநகராக இருந்த சித்தூரை   முகலாயப் பேரரசர் அக்பரிடம் போரில் இழந்து, உதயப்பூருக்கு தனது தலைநகரை மாற்றி விடுகிறார்.  கி.பி.1572 இல் (மார்ச் 1) பதவியேற்ற பிரதாப் சிங் , சித்தூரை மீட்க பெரு முயற்சி எடுக்கிறார். கி.பி.1576 இல் ஹல்திகாட் (HALDIKHAT) என்ற இடத்தில நடைபெற்ற மிகப்பெரிய போரில் கிட்டத்தட்ட வெற்றிபெறும் நிலையில் இருந்தார். ஆனால் போரில் அவரும் , புகழ்பெற்ற அவரது குதிரை சேதக்கும் கடுமையாக காயம் அடைந்து விடுகிறார்கள். அதனால் போர்க்களத்திலிருந்து  பிரதாப் சிங் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.  சேதக், தொடையில் கடும் காயமடைந்து இரத்தம் வெளியாகிக் கொண்டிருக்கும்  நிலையிலும்  பிரதாப் சிங்கை சுமந்துகொண்டு இரண்டு மைல் தூரம் கடந்து சென்று தன்னுயிரைக் கொடுத்து ராணா பிரதாப் சிங்கை காப்பாற்றி விடுகிறது.  அக்குதிரையின் வீரத்தைப் பாராட்டி  அது இறந்த பலியா என்ற கிராமத்திலும் , மேவாரில் பல இடங்களிலும்  நினைவுச் சின்னம் எழுப்பி  தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார் பிரதாப் சிங் .


ஹல்திகாட் போரில் யாருக்கும் வெற்றி தோல்வி ஏற்படாவிடினும் அக்பர் அப்போரில் வென்றதாக பதிவு செய்து வைக்கிறார். அப்போரில் வெற்றிபெற முடியவில்லை என்ற ஆதங்கம் பிரதாப்சிங்கை மிகவும் வருத்தமடையச் செய்தது. அதனால் ஒரு நாள் தனது வீரர்களை அழைத்து கீழ்காணும் உறுதிமொழிகளை எடுத்தார். அதாவது, முகலாயர்களிடமிருந்து சித்தூரை மீட்கும் வரை தங்கம் அல்லது வெள்ளி போன்ற பாத்திரங்களில் உணவு உண்பதில்லை அதாவது சாதாரண இலைகளில் தான் உணவு உண்பேன். பஞ்சு மெத்தைகளில் தூக்குவதில்லை, கட்டாந்தரையில் தான் உறங்குவேன். மாளிகையில் வசிக்க மாட்டேன், குடிசையில் தான் வசிப்பேன். மேவாரை மீட்கும் வரை சவரம் செய்து கொள்ளமாட்டேன் என்பது தான் அது. அவ்வாறே இறுதி வரை வாழ்ந்தும் வந்தார். மகாராணா பிரதாப் சிங் உயிரோடு இருந்த வரை அவரால் அக்பரிடமிருந்து சித்தூரை மீட்க முடியவில்லை, அதேபோல் பிரதாப்சிங்கை போர்க்களத்தில் முழுமையாக வெல்லமுடியவில்லை என்ற மனக்குறையுடனே தான் அக்பரும் இறந்தார்.


ராணா பிரதாப் சிங்கிற்குப் பிறகு ஏறத்தாழ 76 பேர்கள் மேவாரின் மகாராணாவாக பதவி ஏற்று உள்ளார்கள் (தற்போதைய மகாராணாவாக அர்விந்த்சிங் உள்ளார்). ஆனால்அவர்களால் மேவாரையும் , சித்தூரையும் மீட்க முடியவில்லை. மேவார்ப்பகுதி முதலில்  முகலாயர் வசமும், பிறகு ஆங்கிலேயர் வசமும், அதன் பின்னர்  சுதந்திர இந்தியாவிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் , மகாராணா பிரதாப் சிங்கின் உறுதிமொழி நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளது. மேவாரின் வரலாற்றை புரட்டிப் பார்க்கும் பொழுது அவருக்குப் பின்பு பதவி ஏற்ற அனைவரும் அவரின் உறுதிமொழியின் படியேஇலையில் சாப்பிட்டும், குடிசையில் வாழ்ந்தும், தரையில் படுத்தும் மற்றும் தாடியுடனும் அவர்களது பரம்பரையின் குடிப்பெருமையை  போற்றும் வகையில் இன்று வரை  வாழ்ந்து வருகிறார்கள். வள்ளுவரின் வாக்கு உண்மையாகி உள்ளது!.  

Monday, 20 April 2015

வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம்-2

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

 நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.

கலைஞர் உரை:

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

மு.வ உரை: 

அதிகாரம்: உட்பகை

குறள்: 885

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட அந்த நிகழ்விற்கு இந்தக் குறள் மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆம்!. இந்துஸ்தானத்தின் (டில்லியை தலைமையிடமாகக் கொண்ட) கடைசி சக்கரவர்த்தி பிருதிவிராஜ் சௌகான் (கி.பி.1149 முதல் 1192 ஆம் ஆண்டு வரை)  வீழ்த்த வரலாறே அது. வீரம் செறிந்த அம்மன்னனின் கதை  நம் மனதில் ஆழ்ந்த வருத்தத்தையும் , வடுவையும் ஏற்படுத்துகிறது.


டெல்லி சக்கரவர்த்தி அனங்கபாலர் தோமருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது பேரனும்  ஆஜ்மீர் இளவரசனுமான பிருதிவிராஜ் சௌகானை டெல்லியின் சக்கரவர்த்தியாக நியமிக்கிறார். (கி.பி.1169). அது இன்னொரு உறவினரான கன்னோசி அரசர் ஜெயச்சந்திரனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்களது உறவுகளுக்குள் பிணக்கும், பகையும் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஜெயச்சந்திரன் தனது மகள் சம்யுக்தையின் சுயம்வரத்திற்கு (கி.பி.1175) பிருதிவிக்கு அழைப்பு அனுப்பாமலும் ,அவனை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவனது உருவச்சிலையை (காவலன் வேடத்தில்) சுயம்வரம் மண்டபத்தின் வாயிலில் வைத்து விடுகிறான். ஆனால் சம்யுக்தை மணமாலையை  பிருதிவியின் சிலைக்கு அணிவித்துவிடுகிறாள் . அப்போது அங்கே மறைந்திருந்த பிருதிவி சம்யுக்தையை தூக்கிக்கொண்டு டெல்லி வந்து விடுகிறான். அதனால் பிருதிவி ,ஜெயச்சந்திரன் பகை முற்றுகிறது.     


கி.பி.1191 இல் முகம்மது கோரி (1149-1206) , இந்துஸ்தானத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து பெரும் படையுடன் டெல்லியின் மீது படையெடுக்கிறான். பிருதிவி அவனை தராயின் ( இன்றைய ஹரியானா மாநிலத்தில் ) என்ற இடத்தில் எதிர்த்து வீரத்துடன் போரிடுகிறான். பெரும் தோல்வி அடைந்த கோரி அவமானத்துடன் கஜினி திரும்பி விடுகிறான். கி.பி.1192 இல் மீண்டும் பெரும் படையுடன் டெல்லியை தாக்க வருகிறான். தகவல் அறிந்த பிருதிவி பிற இராஜபுத்திர அரசர்களை உதவிக்கு அழைக்கிறான். அனைத்து இராஜபுத்திரர்களும் பிருதிவியின் தலைமையில் அணி திரள்கிறார்கள். ஆனால் , குடும்பப் பகையினால் கோபத்தில் இருந்த ஜெயச்சந்திரன் கோரிக்கு உதவி செய்கிறான். மீண்டும் அதே இடத்தில நடந்த போரில் பிருதிவி தோல்வியுற்றதால் சிறைபிடிக்கப்பட்டு கஜினிக்குக் கொண்டு செல்லப்படுகிறான். ஜெயச்சந்திரன் அன்று செய்த தவறு தான் இந்துஸ்தான் வீழ்ச்சியடைந்து நம் நாட்டில் அந்நிய ஆட்சி ஏற்பட வழிகாட்டிவிட்டது  . ஜெயச்சந்திரனின் துரோகத்தை சரியாக தெரிந்து கொண்ட முகம்மது கோரி அவனை வளரவிட்டால் தமக்கு ஆபத்து என்று கருதி , கி.பி.1193 இல் கன்னோசியின் மேல் படையெடுத்து சென்று அவனையும் கொன்று விடுகிறான்.


சிறைபிடிக்கப்பட்ட மாவீரன் பிருதிவிராஜ் சௌகானின் கண்கள் பறிக்கப்பட்டு கஜினியில் சிறை வைக்கப்படுகிறான்.  பிருதிவியின் பால்ய நண்பனும் , புலவனுமான சந்து பார்டை எப்படியாவது பிருதிவியை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தான் சென்று கோரியின் அன்பைப் பெற்று  அங்கேயே தங்குகிறான்.  அவனது உதவியால் கி.பி. 1206 ஆம் ஆண்டில் பிருதிவி  தன் வில்வித்தை திறமையினால் முகம்மது கோரியை கொன்று விடுகிறான்.  பின்பு எதிரிகளால் கொல்லப்படுவதை தவிர்க்க இருவரும் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு இறக்கிறார்கள். இன்றும் கஜினியில் , கோரியின் கல்லறைக்கு அருகில்  பிருதிவியின் கல்லறையும்  உள்ளது .ஆனால் பிருதிவியை அவமானபடுத்தும் நோக்கத்தில் அவனது கல்லறையின் மேல் கால் வைத்து குதித்து பார்க்கும் விதமாக அமைத்துள்ளார்கள். ஜெயச்சந்திரனின் உட்பகையினால் அந்நிய மண்ணில் மறைந்துபோன அம்மாவீரனின் வரலாறு நம் அனைவரின் மனதிலும் வேதனையைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  

Sunday, 19 April 2015

வாழ்வியலில் திருக்குறள்



தமிழர்களின் தாய்மொழியான தமிழின் சிறப்பை உலகெல்லாம் பறைசாட்டிக்கொண்டிருக்கும் நூல்  "திருக்குறள்" என்றால் அது மிகையாகாது. உலகப்பொதுமறை என்று  மக்களால் அழைக்கப்படும் திருக்குறளில் , 1330 பாடல்கள் (ஈரடி  வரிகளில் ) எழுதப்பட்டிருந்தாலும் , அது மனிதகுல வரலாற்றின் முழுவாழ்க்கையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளதே இதனின் சிறப்பாகும்.

அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற மூன்று பகுதிகளில், மக்களின் முழுவாழ்நிலையையும்  பிரித்து , எக்காலத்திற்கும் பொருந்தும் விதமாக எழுதப்பட்டிருப்பது இந்நூலிற்கு ஒரு முழுமைத் தன்மையைக் கொடுக்கிறது. உலகில் உள்ள எந்த மொழிகளிலும் திருக்குறளுக்கு ஒப்பான நூல் எழுதப்படவில்லை என்பதே  உண்மை. மிகச் சிறந்த தமிழ் மொழியாளர்கள் தேவநேயபாவாணர் , பரிமேலழகர் , மு.வா, மணக்குடவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா  , கலைஞர்.கருணாநிதி   மற்றும் பலரும் அவரவர்களுக்குரிய  பாணியில் திருக்குறளுக்கு செறிவான தமிழில் உரை எழுதியுள்ளார்கள். குறளின் கருத்துக்களை உள்வாங்காத, எழுத்தில் வடிக்காத ,  அல்லது கோடிட்டுக்காட்டாத எந்த படைப்பாளனும் இந்தியாவில் இல்லை என்பதே நிதர்சனம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளை இன்னும் முழுமையாக வாசித்து புரிந்து கொள்ளவில்லை என்ற குற்ற உணர்வும் எனக்கு உண்டு. இது பற்றி எனது நண்பர் புத்தகதூதன்.சடகோபனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரும் எனது கருத்தை ஏற்றுகொண்டார். அத்தோடு, ஒரு வேண்டுகோளையும் வைத்தார். திருக்குறளை அதன் பொருள் விளக்கங்களோடு கூறாமல் , எளிமையாக அனைவரும் உள்வாங்கிக் கொள்ளுமாறு வாழ்க்கையோடு பொருத்தி ஏன் நீங்கள் எழுதக் கூடாது என்பதே அது. இவ்வார்த்தைகள் எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது.  இளமைப் பருவத்திலிருந்து எனக்கு பரிச்சயமான நூல்களும் , என் மனதில் பதிந்துள்ள இந்திய மற்றும் உலக வரலாறும் , வாழ்ந்து மறைந்து போன மனிதர்களும் , வாழும் மனிதர்களும் என் மனதின் சுழற்சிக்குள் வர ஆரம்பித்து விட்டார்கள். என்ன ஆச்சரியம்! பொய்யாமொழிப்புலவன் திருவள்ளுவரின் வார்த்தைகளுக்கு  இலக்கணமாக வாழ்ந்த மனிதர்கள் பலரின் வாழ்க்கைப் பதிவுகள் என் மனதில் நிழலாடியது. அவர்களைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணமும் எனக்குள் உதித்தது. அதற்கு , "வாழ்வியலில் திருக்குறள் " என்ற தலைப்பும் பொருத்தமாகத் தெரிந்தது.

நண்பர்களே! எனது பட்டறிவின் துணைகொண்டு எழுத ஆரம்பிக்கறேன். எதாவது கருத்து, சொற்பிழைகள் இருந்தால் அதைத் மன்னித்து , எனக்கு தெரியபடுத்துங்கள் ! திருத்திக் கொள்கிறேன்! வாருங்கள் சேர்ந்து பயணிக்கலாம்!

சு.கருப்பையா.


வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம் 1

                                                    உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
                                                    இடுக்கண் களைவதாம் நட்பு.
அதிகாரம்: நட்பு
குறள்: 788

உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
மு.வ உரை:

உலக வரலாற்றில் நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களில் சிறந்தவர்கள் மார்க்கீசிய சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு வழங்கிய சிந்தனைச் சிற்பிகள் கார்ல் மார்க்ஸ்சும்(காலம் 05-05-1818 முதல் 14-03-1883 வரை )  மற்றும் ஏங்கெல்ஸ்மே (காலம் 28-11-1820 முதல் 05-08-1895 வரை) . கார்ல்மார்க்ஸ் மனதில் உதிக்கும் எண்ணங்களை ஏங்கெல்ஸ் எழுதும் அளவிற்கு ஒத்த சிந்தனைக்கு சொந்தக்காரர்கள்.  ஏங்கெல்ஸ் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் வசிக்கும் பொழுது ஏங்கெல்ஸின் மனைவி மேரி பேர்ன்ஸ் 06/01/1863 ந் தேதி தனது 40 வது வயதில் இறந்து விடுகிறார். தகவல் அறிந்து கொண்ட மார்க்ஸ் தமது ஆருயிர் நண்பருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுத உட்காருகிறார்.

கார்ல் மார்க்ஸ்

ஏங்கெல்ஸ்


மிகப்பெரிய துன்பம் உனக்கு ஏற்பட்டு விட்டது…” என்று எழுத ஆரம்பித்தவுடன் வீட்டின் உள்ளே பசியோடு இருந்த மார்க்ஸ் அவர்களின்  குழந்தைகள் அழுவதற்கு ஆரம்பித்து விடுகிறது. மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் சமாதனப்படுத்த முயலுகிறார். இருந்தாலும் குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லை. உலக  மக்களின் வறுமையை ஒழிக்க சதா சிந்தித்த மனிதனுக்கு தனது குழந்தைகளின் பசியைப் போக்க இயலவில்லை. வறுமையின் பிடியில் இருந்த மார்க்ஸ் தனது இயலாமையை விளக்கி 200 பவுண்ட் பணம் அனுப்பி வைக்குமாறு எழுதி விடுகிறார். கடிதத்தைப் படித்தவுடன் ஏங்கெல்ஸ் அவர்களுக்கு கடுங்கோபம் ஏற்படுகிறது. உடனே  என்ன மனிதன் நீ!, மனைவியை இழந்து தவிக்கும் எனக்கு ஆறுதல் கூறும் வகையில் கடிதம் எழுதாமல் இப்போதும் உனது வறுமையை கூறி பணம் கேட்கிறாயே இது நியாயமா? என்று பதில் கடிதம் எழுதுகிறார்.

கடிதத்தைப் படித்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. அடடா! தமது ஆருயிர் நண்பனுக்கு ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக  தம்   வறுமையை மீண்டும் கூறிவிட்டோமே என்று மனவருத்தப்படுகிறார். மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார், நண்பா! மன்னித்துவிடு ! உன் சோகம் மிகப் பெரியது , எனது வருத்தத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் கடிதத்தை ஆரம்பித்தேன் . ஆனால் மனம் முழுவதும் நிறைந்திருந்த என் குழந்தைகளின் பசி கடிதத்தின் போக்கை மாற்றி என் வறுமை நிலையை பறைசாட்டிவிட்டது  என்று வருத்தம் கூறி ஏங்கல்ஸ் அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் கடிதம் எழுதுகிறார். கார்ல் மார்க்சின் இரண்டாவது கடிதம் கிடைத்தவுடன் ஏங்கெல்ஸ் அவர்களின் மனம்  மிகவும் நெகிழ்ந்து விடுகிறது . எப்பேர்ப்பட்ட சிந்தனாவாதி என் நண்பன் மார்க்ஸ். அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி விட்டோமே என்று வேதனைப்பட்டு பதில் கடிதத்தின் மூலம் மன்னிப்பும்,  கூடவே பணமும் அனுப்புகிறார். அத்துடன் மார்க்ஸ்! ஜென்னிக்கு ஆறுதல் தெரிவி!. இங்கே  நான் பணம் ஈட்டுவது உனக்கும் (பத்திரிக்கை நடத்துவதற்கு) உன் குழந்தைகளுக்குமே என்பதை நினைவில் வைத்து கொள் என்று அக்கடிதத்தை முடிக்கிறார்.

வரலாற்றின் பக்கங்களில் நட்பின் சிறப்புகளை விளக்கும் பல நிகழ்வுகள் இருந்தாலும் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் அவர்களின் உன்னதமான நட்பு முதலிடத்தில் இருக்கிறது. இப்பொழுது இக்குறளை மீண்டும் படியுங்கள்!. எத்தகைய உயிர்ப்புத் தன்மை வாய்ந்தது பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரின் இந்தக் குறள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்..