தமிழர்களின் தாய்மொழியான
தமிழின் சிறப்பை உலகெல்லாம் பறைசாட்டிக்கொண்டிருக்கும் நூல் "திருக்குறள்" என்றால் அது
மிகையாகாது. உலகப்பொதுமறை என்று
மக்களால் அழைக்கப்படும் திருக்குறளில் , 1330 பாடல்கள் (ஈரடி
வரிகளில் ) எழுதப்பட்டிருந்தாலும் , அது மனிதகுல வரலாற்றின் முழுவாழ்க்கையும் பிரதிபலிக்கும் விதமாக
அமைந்துள்ளதே இதனின் சிறப்பாகும்.
அறம், பொருள் மற்றும் இன்பம் என்ற மூன்று பகுதிகளில், மக்களின் முழுவாழ்நிலையையும்
பிரித்து , எக்காலத்திற்கும் பொருந்தும் விதமாக எழுதப்பட்டிருப்பது
இந்நூலிற்கு ஒரு முழுமைத் தன்மையைக் கொடுக்கிறது. உலகில் உள்ள எந்த மொழிகளிலும் திருக்குறளுக்கு
ஒப்பான நூல் எழுதப்படவில்லை என்பதே உண்மை.
மிகச் சிறந்த தமிழ் மொழியாளர்கள் தேவநேயபாவாணர் , பரிமேலழகர் , மு.வா, மணக்குடவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா , கலைஞர்.கருணாநிதி மற்றும் பலரும் அவரவர்களுக்குரிய பாணியில் திருக்குறளுக்கு செறிவான தமிழில் உரை
எழுதியுள்ளார்கள். குறளின் கருத்துக்களை உள்வாங்காத, எழுத்தில் வடிக்காத , அல்லது கோடிட்டுக்காட்டாத எந்த படைப்பாளனும்
இந்தியாவில் இல்லை என்பதே நிதர்சனம்.
இத்தகைய சிறப்பு
வாய்ந்த திருக்குறளை இன்னும் முழுமையாக வாசித்து புரிந்து கொள்ளவில்லை என்ற குற்ற
உணர்வும் எனக்கு உண்டு. இது பற்றி எனது நண்பர் புத்தகதூதன்.சடகோபனிடம்
பேசிக் கொண்டிருக்கும் போது அவரும் எனது கருத்தை ஏற்றுகொண்டார். அத்தோடு, ஒரு
வேண்டுகோளையும் வைத்தார். திருக்குறளை அதன் பொருள் விளக்கங்களோடு கூறாமல் , எளிமையாக அனைவரும்
உள்வாங்கிக் கொள்ளுமாறு வாழ்க்கையோடு பொருத்தி ஏன் நீங்கள் எழுதக் கூடாது என்பதே
அது. இவ்வார்த்தைகள் எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இளமைப் பருவத்திலிருந்து எனக்கு பரிச்சயமான நூல்களும் , என் மனதில்
பதிந்துள்ள இந்திய மற்றும் உலக வரலாறும் , வாழ்ந்து மறைந்து போன மனிதர்களும் , வாழும் மனிதர்களும்
என் மனதின் சுழற்சிக்குள் வர ஆரம்பித்து விட்டார்கள். என்ன
ஆச்சரியம்! பொய்யாமொழிப்புலவன் திருவள்ளுவரின் வார்த்தைகளுக்கு
இலக்கணமாக வாழ்ந்த மனிதர்கள் பலரின் வாழ்க்கைப் பதிவுகள் என் மனதில்
நிழலாடியது. அவர்களைப்
பற்றி எழுதலாம் என்ற எண்ணமும் எனக்குள் உதித்தது. அதற்கு , "வாழ்வியலில்
திருக்குறள் " என்ற
தலைப்பும் பொருத்தமாகத் தெரிந்தது.
நண்பர்களே! எனது
பட்டறிவின் துணைகொண்டு எழுத ஆரம்பிக்கறேன். எதாவது கருத்து, சொற்பிழைகள்
இருந்தால் அதைத் மன்னித்து , எனக்கு
தெரியபடுத்துங்கள் ! திருத்திக் கொள்கிறேன்! வாருங்கள் சேர்ந்து
பயணிக்கலாம்!
சு.கருப்பையா.
வாழ்வியலில் திருக்குறள்- அத்தியாயம் 1
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
அதிகாரம்:
நட்பு
குறள்:
788
உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
மு.வ
உரை:
உலக வரலாற்றில் நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்களில்
சிறந்தவர்கள் மார்க்கீசிய சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு வழங்கிய சிந்தனைச் சிற்பிகள்
கார்ல் மார்க்ஸ்சும்(காலம் 05-05-1818 முதல் 14-03-1883 வரை ) மற்றும் ஏங்கெல்ஸ்மே (காலம் 28-11-1820 முதல் 05-08-1895 வரை) . கார்ல்மார்க்ஸ்
மனதில் உதிக்கும் எண்ணங்களை ஏங்கெல்ஸ் எழுதும் அளவிற்கு ஒத்த சிந்தனைக்கு
சொந்தக்காரர்கள். ஏங்கெல்ஸ் இங்கிலாந்தில்
உள்ள மான்செஸ்டர் நகரில் வசிக்கும் பொழுது ஏங்கெல்ஸின் மனைவி மேரி பேர்ன்ஸ் 06/01/1863
ந் தேதி தனது 40 வது வயதில் இறந்து விடுகிறார்.
தகவல் அறிந்து கொண்ட மார்க்ஸ் தமது ஆருயிர்
நண்பருக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுத உட்காருகிறார்.
கார்ல் மார்க்ஸ்
ஏங்கெல்ஸ்
“மிகப்பெரிய துன்பம்
உனக்கு ஏற்பட்டு விட்டது…”
என்று எழுத ஆரம்பித்தவுடன்
வீட்டின் உள்ளே பசியோடு இருந்த மார்க்ஸ் அவர்களின் குழந்தைகள் அழுவதற்கு ஆரம்பித்து விடுகிறது. மார்க்சின் மனைவி
ஜென்னி மார்க்ஸ் சமாதனப்படுத்த முயலுகிறார். இருந்தாலும்
குழந்தைகள் அழுகையை நிறுத்தவில்லை. உலக
மக்களின் வறுமையை ஒழிக்க சதா சிந்தித்த மனிதனுக்கு தனது குழந்தைகளின்
பசியைப் போக்க இயலவில்லை. வறுமையின்
பிடியில் இருந்த மார்க்ஸ் தனது இயலாமையை விளக்கி 200 பவுண்ட் பணம் அனுப்பி வைக்குமாறு எழுதி
விடுகிறார். கடிதத்தைப்
படித்தவுடன் ஏங்கெல்ஸ் அவர்களுக்கு கடுங்கோபம் ஏற்படுகிறது. உடனே என்ன மனிதன் நீ!, மனைவியை இழந்து தவிக்கும் எனக்கு ஆறுதல் கூறும்
வகையில் கடிதம் எழுதாமல் இப்போதும் உனது வறுமையை கூறி பணம் கேட்கிறாயே இது நியாயமா? என்று பதில் கடிதம்
எழுதுகிறார்.
கடிதத்தைப் படித்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு
மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. அடடா! தமது ஆருயிர் நண்பனுக்கு ஆறுதல் கூறுவதற்குப்
பதிலாக தம் வறுமையை மீண்டும் கூறிவிட்டோமே என்று
மனவருத்தப்படுகிறார். மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறார், நண்பா! மன்னித்துவிடு ! உன் சோகம் மிகப் பெரியது , எனது வருத்தத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற
நோக்கத்தில் தான் நான் கடிதத்தை ஆரம்பித்தேன் . ஆனால் மனம் முழுவதும்
நிறைந்திருந்த என் குழந்தைகளின் பசி கடிதத்தின் போக்கை மாற்றி என் வறுமை நிலையை
பறைசாட்டிவிட்டது என்று வருத்தம் கூறி ஏங்கல்ஸ்
அவர்களுக்கு ஆறுதல்
தரும் வகையில் கடிதம் எழுதுகிறார். கார்ல் மார்க்சின் இரண்டாவது கடிதம் கிடைத்தவுடன்
ஏங்கெல்ஸ் அவர்களின் மனம் மிகவும்
நெகிழ்ந்து விடுகிறது . எப்பேர்ப்பட்ட சிந்தனாவாதி என் நண்பன் மார்க்ஸ். அவனுக்கு
வருத்தத்தை ஏற்படுத்தி விட்டோமே என்று வேதனைப்பட்டு பதில் கடிதத்தின் மூலம் மன்னிப்பும், கூடவே பணமும் அனுப்புகிறார். அத்துடன் மார்க்ஸ்!
ஜென்னிக்கு ஆறுதல் தெரிவி!. இங்கே நான்
பணம் ஈட்டுவது உனக்கும் (பத்திரிக்கை நடத்துவதற்கு) உன் குழந்தைகளுக்குமே என்பதை
நினைவில் வைத்து கொள் என்று அக்கடிதத்தை முடிக்கிறார்.
வரலாற்றின் பக்கங்களில் நட்பின் சிறப்புகளை
விளக்கும் பல நிகழ்வுகள் இருந்தாலும் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் அவர்களின்
உன்னதமான நட்பு முதலிடத்தில் இருக்கிறது. இப்பொழுது இக்குறளை மீண்டும்
படியுங்கள்!. எத்தகைய உயிர்ப்புத் தன்மை வாய்ந்தது பொய்யாமொழிப்புலவர்
திருவள்ளுவரின் இந்தக் குறள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்..
No comments:
Post a Comment