சீரினும்
சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை
வேண்டு பவர்.
புகழோடு பெரிய ஆண்மையும்
விரும்புகின்றவர், புகழ் தேடும்
வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
மு.வ உரை:
புகழுடன் தன் குடும்பப் பெருமையை
நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப்
பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்
சாலமன் பாப்பையா உரை:
அதிகாரம்: மானம்
குறள்: 962
இந்தியாவின் வீரம் செறிந்த மாவீரர்களில் ஒருவர் மேவாரின் மன்னர் மகாராணா பிரதாப்
சிங் (காலம் 09/05/1540 முதல் 29/01/1597 வரை). மறைந்திருந்து , திடீரென்று எதிரிகளைத் தாக்கும் கொரில்லாப்போரின் முன்னோடி. இவரது தந்தை
மகாராணா உதயசிங் மேவாரின் தலைநகராக இருந்த சித்தூரை முகலாயப் பேரரசர் அக்பரிடம் போரில் இழந்து, உதயப்பூருக்கு
தனது தலைநகரை மாற்றி விடுகிறார். கி.பி.1572
இல் (மார்ச் 1) பதவியேற்ற பிரதாப் சிங் , சித்தூரை மீட்க பெரு முயற்சி எடுக்கிறார்.
கி.பி.1576 இல் ஹல்திகாட் (HALDIKHAT) என்ற இடத்தில நடைபெற்ற மிகப்பெரிய போரில் கிட்டத்தட்ட
வெற்றிபெறும் நிலையில் இருந்தார். ஆனால் போரில் அவரும் , புகழ்பெற்ற அவரது
குதிரை சேதக்கும் கடுமையாக காயம் அடைந்து விடுகிறார்கள். அதனால்
போர்க்களத்திலிருந்து பிரதாப் சிங்
வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சேதக், தொடையில் கடும்
காயமடைந்து இரத்தம் வெளியாகிக் கொண்டிருக்கும்
நிலையிலும் பிரதாப் சிங்கை
சுமந்துகொண்டு இரண்டு மைல் தூரம் கடந்து சென்று தன்னுயிரைக்
கொடுத்து ராணா பிரதாப் சிங்கை காப்பாற்றி விடுகிறது. அக்குதிரையின் வீரத்தைப் பாராட்டி அது இறந்த பலியா என்ற கிராமத்திலும் , மேவாரில் பல
இடங்களிலும் நினைவுச் சின்னம்
எழுப்பி தனது நன்றியை
தெரிவித்துக்கொண்டார் பிரதாப் சிங் .
ஹல்திகாட் போரில் யாருக்கும் வெற்றி தோல்வி ஏற்படாவிடினும்
அக்பர் அப்போரில் வென்றதாக பதிவு செய்து வைக்கிறார். அப்போரில்
வெற்றிபெற முடியவில்லை என்ற ஆதங்கம் பிரதாப்சிங்கை மிகவும் வருத்தமடையச் செய்தது.
அதனால் ஒரு நாள் தனது வீரர்களை அழைத்து கீழ்காணும் உறுதிமொழிகளை எடுத்தார். அதாவது, முகலாயர்களிடமிருந்து
சித்தூரை மீட்கும் வரை தங்கம் அல்லது வெள்ளி போன்ற பாத்திரங்களில் உணவு உண்பதில்லை
அதாவது சாதாரண
இலைகளில் தான் உணவு உண்பேன். பஞ்சு மெத்தைகளில் தூக்குவதில்லை, கட்டாந்தரையில்
தான் உறங்குவேன். மாளிகையில் வசிக்க மாட்டேன், குடிசையில் தான் வசிப்பேன். மேவாரை மீட்கும் வரை
சவரம் செய்து கொள்ளமாட்டேன் என்பது தான் அது. அவ்வாறே இறுதி வரை
வாழ்ந்தும் வந்தார். மகாராணா பிரதாப் சிங் உயிரோடு இருந்த வரை அவரால் அக்பரிடமிருந்து
சித்தூரை மீட்க முடியவில்லை, அதேபோல் பிரதாப்சிங்கை போர்க்களத்தில் முழுமையாக வெல்லமுடியவில்லை
என்ற மனக்குறையுடனே தான் அக்பரும் இறந்தார்.
ராணா பிரதாப் சிங்கிற்குப் பிறகு ஏறத்தாழ 76 பேர்கள் மேவாரின் மகாராணாவாக பதவி ஏற்று
உள்ளார்கள் (தற்போதைய
மகாராணாவாக அர்விந்த்சிங் உள்ளார்). ஆனால், அவர்களால்
மேவாரையும் ,
சித்தூரையும் மீட்க முடியவில்லை.
மேவார்ப்பகுதி முதலில் முகலாயர் வசமும், பிறகு ஆங்கிலேயர் வசமும், அதன் பின்னர்
சுதந்திர இந்தியாவிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் , மகாராணா பிரதாப்
சிங்கின் உறுதிமொழி நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளது. மேவாரின் வரலாற்றை
புரட்டிப் பார்க்கும் பொழுது அவருக்குப் பின்பு பதவி ஏற்ற அனைவரும் அவரின்
உறுதிமொழியின் படியே, இலையில் சாப்பிட்டும், குடிசையில்
வாழ்ந்தும், தரையில்
படுத்தும் மற்றும் தாடியுடனும் அவர்களது பரம்பரையின் குடிப்பெருமையை போற்றும் வகையில் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். வள்ளுவரின் வாக்கு உண்மையாகி உள்ளது!.
மிக நல்ல முயற்சி, வரலாறையும் , வாழ்வியலையும் இணைத்து திருக்குறளைச்சொல்லும் முயற்சி. 3 கட்டுரைகள் , நூறு கட்டுரைகளாக விரிகின்றபோது , இந்தத் தொடரின் வீரியமும் விவரங்களும் வியப்பளிக்கும், வரும் தலைமுறைக்கு வாய்ப்பாகவும், புதிய கோணத்தில் வரலாற்றை படிப்பதாகவும் அமையும் . தொடராகத் தொடரட்டும். வாழ்த்துக்களோடும் எதிர்பார்ப்போடும் .....வா. நேரு.
ReplyDeleteநேரு! உங்களது ஊக்குவிப்பு எனக்கு உற்சாகம் தருகிறது . நூறு குறளை எழுத வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தி விட்டீர்கள்!. எழுத்தில் "தேனீ" யாக இருக்கும் உங்களை தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
Delete